அவள் ஒரு அஞரின்பக்காரி
அருண் காந்தி
நிரை நிரலென உந்திப் பாய்கின்றன
அவ்வூர்திகள்?
கண் இமைக்கும் நொடியில்
காற்றில் பறக்கும் கருவண்டுகளாய்க்
காணாமல் போயின அம்மகிழ்வுந்துகள்
பழகிப்போனப் பந்தயக் குதிரைகளாய்ப்
பக்கவாட்டில் எனைக்
கடந்து சென்றன பல பேருந்துகள்
‘முடிந்தால் எனை முட்டிப்பார்’
என்ற மூர்க்கத்துடன் முன்னேறிய
சுமையேற்றிகள் திமிருடன்
எனைத் தொடத் துணிந்தன
அடித்துச் செல்லப்படும் ஆற்றுவெள்ளத்
துரும்புகளாய் பலவகையில் எனை
எதிர்கொள்ளும் மனித முகங்கள்
அந்த மயங்கும் மசண்டையில்
சிவனின் நெற்றிக் கண்ணாய்த்
திடும்மெனத் திறக்கின்றன வாகன விளக்குகள்
மூளையில் நிதானத்தை மட்டுமே
நிரப்பிக் கொண்டு செலுத்துகிறேன்
என் வாகனத்தை-விதி வலியது!
சில மணித்துளிகளாய் என்னுடனே
ஒத்தியங்கி எனைச் சீர்குலைத்த
அழகிய நிலவவளை அருகில்
வாவென அழைக்கிறேன்.
மறுத்தவளிடம் ஊர்தி சமிஞ்ஞை
நிறுத்தத்தில் எல்லாம் சமிஞ்ஞை
செய்து அழைக்கிறேன்
கள்ளியவள் நொடிப்பொழுதில் மேகத்தினூடே
மறைந்து சிணுங்குகிறாள்-நான் பாரா நொடியில்
வெளியே முகம் காட்டி நகைக்கிறாள்
சாளரத்தைத் திறந்து அருகிலுள்ள
இருக்கையினைத் துடைத்து
மீண்டும் அழைக்கிறேன்