இன்னம்பூரானுடன் ஒரு இ- நேர்காணல்-3

0

இன்னம்பூரான்

இன்னம்பூரானுடன் பிரகாஷ் சுகுமாரன் மின்னஞ்சல் வழி நடத்திய நேர்காணலின் போது வினவப்பட்ட மேலும் நான்கு கேள்விகளுக்கான பதில் இங்கே.

பிரகாஷ் சுகுமாரன்: பேச்சுரிமையின் தேவை என்ன ?

இன்னம்பூரான்: தொடரை நான் மாற்றி அமைத்ததே, பேச்சுரிமை எனலாம். மனிதன் தனித்து வாழ்வது இல்லை. கூடி வாழும் போது, மற்றவரின் எண்ணங்கள்/கருத்துக்கள்/ சிந்தனைகள்/ கொள்கைகள் ஆகியவற்றை மதிக்காவிடின், கூட்டம் கலையும்; குலையும். தனித்தும் வாழமுடியாது; கூடி வாழவும் முடியாது. முரண் மிகுந்து போர் மூளும். அதைத் தவிர்க்கப் பேச்சுரிமை தேவை.

பிரகாஷ் சுகுமாரன்: பேச்சுரிமை என்பதன் தன்மை என்னவாக இருக்க முடியும் ? புனைந்து ஒருவரை இகழ்வதும் பேச்சுரிமை ஆகுமா ?

இன்னம்பூரான்: உள்ளது உள்ளபடி பேசுவது இலக்கு. பேச்சுரிமையின் தன்மை இலக்கு நோக்கி இருக்கும். அதை அடைவது எளிது அல்ல. எனவே, பேச்சுரிமை தாராளமாக வழங்கப்படவேண்டும். ‘புனைந்து’ என்றால் ‘பொய்’ என்றால், அதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இகழ்வதில் பல சாயங்கள் உண்டு. பெரும்பாலான சாயங்களுக்கு பேச்சுரிமை இருக்க வேண்டும்.

பிரகாஷ் சுகுமாரன்: ஒருவேளை பாதுகாப்பு இல்லாத நிலையில் உண்மைகளைப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது ?

இன்னம்பூரான்: பாதுகாப்பு ஒரு மனப்பிராந்தி. வேண்டிய நிலை ஏற்பட்டால், உண்மைகளை பேசத்தான் வேண்டும். பலாபலன்களை அனுபவிக்கவும் வேண்டும். அஹமதாபாத் வழக்கில் தண்டனை அடைந்த காந்திஜியின் வாக்குமூலம் தான் இந்த விஷயத்தில் வேதபாடம்.

பிரகாஷ் சுகுமாரன்: ‘பாதுகாப்பும் வேண்டும். பேச்சுரிமையும் வேண்டும். எப்படி அடி எடுத்து வைக்க வேண்டும்?’

இன்னம்பூரான்: ‘ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் மைக்.. இருந்தாலும் பேசும் சபை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.. அதற்கும் முதலாகத் துப்பாக்கியில் தோட்டா உள்ளதா எனச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.’ என்று சொல்லப் பேச்சுரிமை இருக்கிறது. நடைமுறையில் உதவாது. பேச்சுரிமைக்குப் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி. அதை திட்டமிட்டு நெடுங்காலம் வளர்த்துக் கொண்டே ,பேச்சுரிமையை நிலை நாட்டவேண்டும். இடையில் தியாகம் செய்ய வேண்டி வரும். சிலர் உயிரிழப்பார்கள். வாய்மையின் துணை இல்லாத பேச்சுக்கு உரிமை கோரத் தகுதியில்லை. மக்கள் திரண்டால், கொடுங்கோல் நசிக்கும். அதற்கான செங்கோல் பேச்சுரிமை.

 

பிரகாஷ் சுகுமாரனைத் தொடர்ந்து திரு. கிருஷ்ணன் அவர்கள் சில வினாக்களை இன்னம்பூராரிடம் கேட்டிருந்தார். அவற்றுக்கும் திரு. இன்னம்பூரான் அவர்கள் மின்னஞ்சல் மூலம் அளித்த பதில்கள் வருமாறு:

கிருஷ்ணன்: பேச்சுரிமைக்கு எல்லை உண்டா?

இன்னம்பூரான்: எல்லை இல்லாத உரிமை கிடையாது. கடமை, உரிமையின் எல்லை. பேச்சுரிமையின் கடமை, மற்றவரை புண்படுத்தலாகாது என்பதே. கொஞ்சம் கடினம்.

கிருஷ்ணன்:தகவல் உரிமை சட்டம் உதவுமா?

இன்னம்பூரான்: உதவுகிறது. உதவும். மேல்நாடுகளில் தகவல் உரிமைச் சட்டத்தை ஊடகங்களே சிறப்புறப் பயன்படுத்துகிறார்கள். ஆளுமையில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அதை மறைக்க விரும்புவார்கள். எந்தவிடத்திலும் வெளிப்படையாக இயங்குவது நலம் தரும். அந்த வழியில் இயங்குவதால், இந்தச் சட்டம் உதவும். பிரச்னைகளும் இருக்கும். ஆனால், தீர்க்கக்கூடியவையே.

கிருஷ்ணன்: இனவேற்றுமையை தணிக்க, தனியார் என்ன செய்யலாம்?

இன்னம்பூரான்: தனியார் யாவரும் இனவேற்றுமை பாராட்டுவதைத் தவிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அதை மக்கள் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ள வழி வகுக்கவேண்டும். ஒரு உதாரணம். தீண்டாமை கண்டு சினம் பொங்க வேண்டும். வயது வந்தோர் நடந்து காட்டினால், அடுத்த தலைமுறைக்கு அது இயல்பாகி விடும்.

கிருஷ்ணன்: மாணவர்~ ஆசிரியர் உறவை மேம்படுத்துவது எப்படி?

இன்னம்பூரான்: மாணவர்கள் நல்லாசிரியர்களை ஆயுசு பரியந்தம் மறப்பதில்லை. ஆகவே, பதில் ஆசிரியர் சமூகத்தின் கையில் இருக்கிறது. அவரவர் துறையில் மேன்மை இல்லையெனின், மாணவர்கள் மதிக்க மாட்டார்கள். எந்த ஆசிரியன் மாணவன் முன்னேற்றத்துக்கு உழைப்பவர் என்பதை மாணவர்கள் ஒரு நொடியில் கண்டு பிடித்து விடுவார்கள். அதைப் புரிந்து கொண்ட ஆசிரியருக்கு வெற்றி நிச்சயம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *