இலக்கியம்கட்டுரைகள்

தமிழகம் போற்றவேண்டிய பெருந்தகை! 

-மேகலா இராமமூர்த்தி

கொங்குமண்டலத்தின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள சேலம் மாநகரம் மாங்கனிக்கு மட்டும் பெயர்பெற்றதன்று; மூதறிஞர் இராஜகோபாலாசாரியார், சீர்திருத்தவாதி விஜயராகவாசாரியார், விடுதலைப் போராட்ட வீரர் வரதராஜுலு நாயுடு போன்ற உயர்ந்த தலைவர்களைத் தந்த வகையிலும் பெயர்பெற்றது. ஆனால் இவர்களெல்லாம் இந்திய அரசியல் வானில் ஒளிவீசுவதற்கு முன்பே செந்தமிழ் நாட்டின் புகழ், இந்திய அரசியலில் ஒளிர்வதற்கும், நம் பழந்தமிழ் நூல்கள் புத்துயிர் பெற்று மிளிர்வதற்கும் மூலகாரணமாய்த் திகழ்ந்தவர் சேலம் தந்த செம்மலான இராமசாமி முதலியார் ஆவார்.

செப்டம்பர் 6, 1852-இல் சேலத்தில் பிறந்தவர் இவர். இவருடைய தந்தையாரான கோபாலசாமி முதலியார் சேலத்தில் செல்வாக்கு மிக்க நிலக்கிழாராக விளங்கியவர்; அத்தோடு தாசில்தாராய்ப் பணியாற்றிப் புகழ் ஈட்டியவர்.

இவ்வாறு கல்வியும் செல்வமும் கொலுவீற்றிருக்கும் குடியில் தோன்றிய இராமசாமியார்,  தம் ஆறாம் அகவையிலேயே கல்வியின் பொருட்டுச் சென்னை மாநகர்க்கு அனுப்பப்பட்டார். சென்னையில் கதிர்வேலு உவாத்தியாயர் என்பவரிடம் ஆரம்பக் கல்வி பயின்ற இராமசாமி முதலியார், பின்பு சென்னை உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். மெட்ரிகுலேசன் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சிபெற்று மாநில அரசின் உதவித்தொகையைப் பெற்றார்.

1871-ஆம் ஆண்டு இளங்கலைப் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றார். பின்னர் வரலாற்றையும் தத்துவத்தையும் முதன்மைப் பாடங்களாகத் தெரிவுசெய்து தம் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர், 1873-இல் முதுகலைப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1875-இல் சட்டத்தில் இளங்கலை பயின்று அதிலும் மாநிலத்தின் முதல் மாணாக்கராய்த் தேர்ந்தார். 1876-இல் தம்மை வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டு சேலத்தில் தொழில்புரியத் தொடங்கினார். வழக்கறிஞர் பணியில் மிகத் திறமையானவராக விளங்கியபோதும், நீதியை நிலைநாட்டும் நீதியரசராகப் பணியாற்றவேண்டும் எனும் அவா அவருக்கு இருந்ததை அறிந்த சேலம் மாவட்ட நீதிபதி, அதற்கான தகுதியும் திறமையும் நல்லொழுக்கமும் உடையவர் இராமசாமி முதலியார் என அரசாங்கத்துக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதினார். அதன்பயனாய்த் திருச்சி மாவட்ட முன்சீபாய் (munsif) 1877-இல் நியமனம் பெற்றார் இராமசாமி முதலியார்.

நெடுநுகத்துப் பகலாணிபோல நடுநிலை வழுவாது நல்ல தீர்ப்புகளை வழங்கிப் புகழ்பெற்றார். நீதியரசர் பதவியை அவர் விரும்பியே ஏற்றிருந்த போதிலும் மக்கள் தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனும் ஆவல் அவரிடம் அதிகமாய் இருந்ததால் அரசாங்க அலுவல் அவருக்குச் சரிப்பட்டு வரவில்லை. எனவே 1882-இல் நீதிபதிப் பதவியை விட்டு விலகினார். சென்னைக்குச் சென்று தனிப்பட்ட முறையில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். அப்போது வெளிப்பட்ட அவருடைய அறிவின் ஆற்றலும் ஒழுக்கச் சிறப்பும் அனைத்து அறிஞர்களாலும் பாராட்டப்பெற்றன. நீதித் தொழிலை பொருளீட்ட மட்டுமே உதவும் நிதித் தொழிலாக அவர் மேற்கொள்ளவில்லை. மனித குலத்தை மேம்படுத்தவும் சீர்திருத்தவும் கிடைத்த நல்வாய்ப்பாகவே அதனை எண்ணினார்.

லா ஜர்னல் (law journal) என்ற பத்திரிகையை ஆரம்பித்து 1891 வரை அதன் தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தார். அந்நாளில் பச்சையப்பர் அறநிலையத்திலும் (Pachaiyappa’s Trust Board) சென்னைப் பல்கலைக்கழத்திலும் உறுப்பினராய் விளங்கி இராமசாமியார் ஆற்றிய தொண்டுகள் கல்வித்துறையாளர் போற்றுதற்குரியன.

சட்டத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தபோதிலும், தமிழ்மீதும் தமிழிலக்கியத்தின்மீதும் இராமசாமி முதலியார் கொண்டிருந்த காதல் மட்டற்றது. அதனைப் பழந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தேடிப் பதிப்பித்தவரும் தமிழ்த்தாத்தா என்று நம்மால் கொண்டாடப்படுபவருமான  உ.வே.சா.வின் மொழிகளிலேயே அறிந்துகொள்வது பொருத்தமாய் இருக்கும்.

உ.வே.சா. அவர்கள் தாம் எழுதிய தன்வரலாற்று நூலான (autobiography) ”என் சரித்திரம்” என்ற நூலில் சேலம் இராமசாமி முதலியாரைப் பற்றி குறிப்பிட்டிருக்கும் செய்திகளாவன:

”கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டும் ஓய்வுநேரங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டும் நான் இருந்தவேளையில் அரியலூரிலிருந்து இராமசாமி முதலியார் என்பவர் கும்பகோணத்துக்கு முன்சீப்பாக வந்துசேர்ந்தார். அவருடைய நட்பினால் தமிழிலக்கியத்தின் விரிவை நான் அறியமுடிந்தது. தண்டமிழ் நூல்களில் பொதிந்துகிடந்த இன்தமிழ் இன்பத்தை நான் மாந்தி மகிழ்ந்ததோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் நற்பேறு எனக்கு வாய்த்தது.

கும்பகோணத்துக்குப் பெரிய அறிஞர்கள் உயர்பதவிகளில் இருப்போர் யாரேனும் புதிதாக வந்தால் திருவாவடுதுறை மடத்தின் சார்பாக அவர்களைச் சென்றுபார்த்து குருபூஜை முதலிய விசேட நாட்களுக்கு மடத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பது வழக்கம். அவ்வாறு திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்தவர்கள் ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகரின் விருப்பப்படி இராமசாமி முதலியாரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

இராமசாமி முதலியார் திருவாவடுதுறை மடத்தின் பழம்பெருமை உணர்ந்தவராதலின், மடத்து நிர்வாகத்தைப் பற்றி விசாரித்ததோடு நில்லாமல் மடத்தில் தமிழ்க் கல்வி எப்படி இருக்கிறது யார் யார் வித்வான்களாக இருக்கிறார்கள் என்றும் விசாரித்திருக்கின்றார்.

அப்போது மடத்துச் செயலாளரான சிவசுப்பிரமணியப் பிள்ளை, மடத்திலே படித்த மாணாக்கருள் ஒருவராகிய சாமிநாதையர் என்பவரே கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றுகிறார் என்று  சொல்லியிருக்கிறார். மடத்தைச் சார்ந்த வித்வான்களைப் பற்றியெல்லாம் இராமசாமி முதலியார் ஆர்வத்தோடு விசாரித்ததை அறிந்த சுப்பிரமணிய தேசிகர், ”நீங்கள் ஒருமுறை இராமசாமி முதலியாரை நேரில் சென்று பார்த்துப் பேசிவிடுங்கள்!” என்று அவரைக் காணச்சென்றபோது என்னிடம் கூறினார்.

தேசிகரின் விருப்பப்படி இராமசாமி முதலியாரைச் சென்று சந்தித்தேன். ”நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?” என்று என்னைக் கேட்டார் முதலியார். ”மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன்” என்றேன் நான். மகாவித்வான் பேரைக் கேட்டவுடன் அவர் முகத்தில் மலர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு, அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படாதது ஏமாற்றத்தையே தந்தது.

முதலியாரோ கேள்வி கேட்பதையும் நிறுத்தவில்லை. ”என்னென்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?” என்று அடுத்த கேள்விக்கணையை எனைநோக்கி வீசினார். நான் கற்ற அந்தாதிகள், கலம்பகங்கள், கோவை நூல்கள், உலாக்கள் என்று அனைத்தையும் அடுக்கினேன்.

”இதெல்லாம் படித்து என்ன பிரயோஜனம்?” என்று அவர்  கேட்கவே நான் மிகவும் வருத்தமுற்று, இவர் இங்கிலீசு படித்து அதில் மோகங்கொண்டவராய் இருக்கலாம்; அதனால்தான் இப்படிச் சொல்கிறார் என்று எண்ணிக்கொண்டேன்.

அவரைத் திருப்திப்படுத்தும் நோக்கில், ”கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்கள் பாடம் கேட்டிருக்கிறேன்” என்றேன்.

”இந்தப் பிற்காலத்து நூல்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?” என்று அவர் தொடர்ந்து கேட்கவும், கம்பராமாயணம் பழைய நூல்தானே இவர் வேறு எதைக் கேட்கிறார் என்று சிந்தித்து, ”நான் சொன்னவற்றிலேயே பல பழைய நூல்கள் இருக்கின்றனவே” என்று மறுமொழி கூறினேன்.

”அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் வினவியபோதுதான் ”இவரிடம் ஏதோ சரக்கு இருக்கின்றது” என்று நான் புரிந்துகொண்டு, ”நீங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்கள்?” என்று தெரியவில்லையே என்றேன்.

”சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை, சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்கவே நான் திகைத்துப் போனேன். அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; ஏன்… என் ஆசிரியர் மகாவித்வானே அவற்றையெல்லாம்  படித்ததில்லை. எனவே அவரிடம்,  

“புத்தகம் கிடைக்கவில்லை; கிடைத்தால் அவற்றையும் என்னால் படித்துவிட முடியும்” என்று கம்பீரமாகச் சொன்னேன்.

அப்போதுதான் இராமசாமி முதலியாரின் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறி தென்பட்டது. ”நான் புத்தகம் தருகிறேன்; தந்தால் படித்து எனக்குப் பாடம் சொல்வீர்களா?” என்று கேட்டார்.

”நிச்சயமாக” என்றேன் நான்.

“அடுத்த வாரம் வாருங்கள். நான் சிந்தாமணியை எடுத்துவைக்கிறேன்” என்றார். அவ்வாறே நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டுக்குச் சென்றேன்.

அவர் தம்மிடம் இருந்த சிந்தமாணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

பிறகு அந்தப் பிரதி தமக்குக் கிடைத்த வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்…

“எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய நூல்களைப் படிக்கவேண்டும் என்று ஆசை; எனினும் அவற்றின் ஏட்டுச் சுவடியைப் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. திருநெல்வேலி பக்கத்திலுள்ள கவிராயர்கள் வீட்டில் அவை கிடைக்கலாம் என எண்ணி என்னுடைய நண்பரும் ஸ்ரீவைகுண்டத்தில் முன்சீபாக இருந்தவருமான ஏ. இராமச்சந்திர ஐயரிடம்  இதுகுறித்துச் சொல்லியிருந்தேன்.

ஒருசமயம் ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள ஊரைச் சேர்ந்த கவிராயர் குடும்பத்தவரான ஒருவர் வழக்கு ஒன்றிற்கு என் நண்பர் இராமச்சந்திர ஐயரிடம் சாட்சியாக வந்தார். அவரை என் நண்பர் விசாரித்தபோது, அவருடைய பரம்பரையைச் சேர்ந்த கவிராயர்கள் பல நூல்கள் இயற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. வழக்கு முடிந்ததும் என் நண்பர் அவரைத் தனியே அழைத்துச் சென்று அவர் வீட்டில் பழைய ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தபோது அவர் இருக்கின்றன என்று மறுமொழி சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி எடுத்துவந்து கொடுக்கவும் என்று சொல்லியிருக்கின்றார் என் நண்பர். அதிகாரமுள்ள பதவியில் இருந்ததனால் என் நண்பரின் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவக சிந்தாமணி பிரதியைக் கொண்டுவந்து கொடுத்தார். அதிலிருந்து காகிதத்தில் பிரதி எடுத்த புத்தகம் இது” என்று சொல்லிப் புத்தகத்தை என்னிடம் கொடுத்த இராமசாமி முதலியார்,

”இந்தப் புத்தகம் மிகச்சிறந்த புத்தகம்; கம்பராமாயணத்தின் காப்பிய அமைப்புக்கெல்லாம் இந்தக் காப்பியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு எனக்குப் பாடம் சொல்வீர்களானால் நம் இருவருக்குமே இன்பம் உண்டாகும்” என்றார். அதைக் கேட்ட நான், ”இதைப் படித்துப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று உற்சாகமாகக் கூறிவிட்டு இராமசாமி முதலியாரிடமிருந்து விடைபெற்றேன்.

நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய சிந்தாமணிப் பிரதியை படித்துச்  சிறிது நாளில் இராமசாமி முதலியாருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினேன். படிக்கப் படிக்கச் சீவக சிந்தாமணி மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. அநபாயச் சோழரைக் கவர்ந்த காப்பியமாகச் சிந்தாமணி இருந்ததில் வியப்பில்லை என்று எண்ணிக் கொண்டேன்.

இதற்கிடையில் முதலியார், தம் முன்சீப் வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்குச் சென்று வழக்கறிஞராக இருக்கலாமெனக் கிளம்பினார். அப்போது என்னிடம், ”சிந்தாமணியின் அருமையை இப்போது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காப்பியம் படிப்பாரற்றுப் போகாமல் இதனைப் பாதுகாக்க வேண்டும். அச்சிட்டு இதனை வெளிப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சென்னைக்குப் போகுமுன் சிலப்பதிகாரப் பிரதியை என்னிடம் கொடுத்துச் சென்றார். சென்னைக்குச் சென்ற பிறகு நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தம்மிடம் இருந்த மணிமேகலைப் பிரதியையும் அனுப்பினார்.

கடுமையாக உழைத்துச் சிந்தாமணியை அச்சிட்டு முடித்து பைண்டு செய்யப்பட்ட அதன் பிரதியை எடுத்துக்கொண்டு முதலியாரிடம் சென்றேன். அவரிடம் புத்தகத்தைக் காட்டியபோது அவரடைந்த இன்பம் இவ்வளவென்று சொல்லமுடியாது.

”அரிய பெரிய செயலை மேற்கொண்டு நிறைவேற்றிவிட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இவ்வாறே அச்சிட்டுப் பூர்த்திசெய்யவேண்டும்” என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.”

என உணர்ச்சியும் உயிரோட்டமுமாக இராமசாமி முதலியாரைப் பற்றி ’என் சரித்திரம்’ நூலில் உவேசா அவர்கள் பதிவு செய்திருக்கும் இந்தச் செய்திகள் இராமசாமி முதலியாரின் அளவிடற்கரிய தமிழ்ப்பற்றையும் அவருடைய பெருந்தகைமையையும் உணர்த்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இலக்கியத்துறைக்கு அரும்பணிகள் ஆற்றிய இராமசாமி முதலியார் அரசியல் துறையிலும் சாதனைகள் பல நிகழ்த்தியவர். முதன்முதலாக அவர் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தது 1882-ஆம் ஆண்டில். அந்த ஆண்டில் சென்னை நிர்வாக சபையிலிருந்து ஓய்வுபெற்ற வெள்ளையரான D F கார்மைக்கல் (D.F. Carmichael) என்பவருக்கு நம் மக்கள்  நினைவுச்சின்னம் எழுப்ப முயன்றபோது, ”நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆளவந்த வெள்ளையருக்கு  நினைவுச்சின்னமா?” என்று அதைப் பலமாக எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர் இராமசாமி முதலியார்.

இராமசாமியாரின் அரசியல் வாழ்வில் மணிமுடியாகத் திகழ்ந்தது அவருடைய இங்கிலாந்துப் பயணம். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்கள் விடுதலை வேட்கையை இங்கிலாந்து மக்களிடம் எடுத்துச் சொல்ல விரும்பிய இந்திய தேசியவாதிகள், அதற்குத் தேசபக்தியும் நாவன்மையும் மிக்க மூன்று பேரை இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுத்தனர். அவர்களுள் ஒருவரே சென்னையின் பிரதிநிதியாகச் சென்ற இராமசாமி முதலியார். இந்தியாவின் தணியாத விடுதலை வேட்கையை இங்கிலாந்து சென்று அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்த முதல் தமிழர் இராமசாமி முதலியாரே என்பதைத் தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

முதலியாரின் எழுச்சிமிகு ஆங்கில உரைகளும், அவருடைய கம்பீரத் தோற்றமும் இங்கிலாந்து மக்களைப் பெரிதும் கவர்ந்தன. தம் இங்கிலாந்துப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தமிழகத்தின் தலைநகருக்கு அவர் திரும்பியபோது சென்னைக் கடற்கரையில் மக்கள் அலைகடலெனத் திரண்டுவந்து அவரை வரவேற்று வாழ்த்தினர்.

தேசிய உணர்ச்சி மிக்கவரான இராமசாமி முதலியார், காங்கிரஸ் மகாசபையைத் தொடக்க காலத்தில் பேணிவளர்த்த பெருமக்களுள் ஒருவர் என்பது நம்மில் பலரும் அறியாதது.  சென்னை நகர நிர்வாகக் குழுவில் உறுப்பினராய் இருந்து அவராற்றிய அரும்பணிகள் அளவிடற்கரியன.

அளப்பரிய தமிழ்ப்பற்றும் தாய்நாட்டுப்பற்றும் கொண்டவராய்த் திகழ்ந்து தமிழுலகிற்கும் இந்தியத் திருநாட்டுக்கும் கைம்மாறு செய்யவியலாத் தொண்டுகள் புரிந்த இராமசாமி முதலியாரைத் தமிழ்மக்கள் விரும்பியதுபோலவே காலனும் விரும்பினான் போலிருக்கின்றது. அதனால்தான் அந்தச் செந்தமிழரை அவருடைய நாற்பதாம் அகவையிலேயே தன்னிடம் அழைத்துக்கொண்டு விட்டான்.

முதலியாரின் அகால மரணமறிந்து துடிதுடித்துப் போனோர் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் உ.வே.சா. தம்முடைய தாளமுடியாத் துக்கத்தை – துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் சில இரங்கற் பாக்களை எழுதியிருக்கின்றார் அவர். அவற்றில் ஒன்று:

”ஊர்க்குழைப்பான் போனானென்று  உலைவாரும் போனான்இப்
பார்க்குழைப்பான் என்று பதைப்பாரும் தமிழெனும்முந்
நீர்க்குழைப்பான் என்றுருகி நிற்பாருமாய்க் கலங்க
ஆர்க்குழைப்பான் சென்றாய் அளியுடைய அண்ணலே!”

வாழ்ந்த காலம் சிலவாயினும் அதற்குள் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்துமுடித்த சாதனையாளர் தமிழ்ப் பெரியாரான சேலம் இராமசாமி முதலியார்.

தமிழுக்குப் பெரிதாக எதனையும் செய்யாத அரசியல் தலைவர்களுக்கெல்லாம் தெருவுக்குத் தெரு சிலைவைத்துத் தலைவணங்கும் நாம், பழந்தமிழைத் தமிழ்த் தாத்தாவுக்கே அறிமுகம் செய்துவைத்து, அந்நூல்களை அழிந்துபடாமல் காத்த அருந்தமிழரான சேலம் இராமசாமி முதலியாரை முற்றாக மறந்துபோனது வேதனைக்குரியது. இனியேனும் அவருடைய அருமையை உணர்ந்து நாம் போற்றவேண்டும்! உண்மையான அந்தத் தமிழ்த் தொண்டருக்கு நினைவுமண்டபம் எழுப்பிக் கொண்டாட வேண்டும்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. இருபெருந்தலைவர் – ந. சஞ்சீவி எம்.ஏ., பாரி நிலையம், 59 பிராட்வே, சென்னை 1.
  2. என் சரித்திரம் – மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
  3. https://en.wikipedia.org/wiki/Salem_Ramaswami_Mudaliar

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க