ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை (நெறியான வாழ்க்கை)

மீ.விசுவநாதன்

 (நெறியான வாழ்க்கை) 

கற்ற தொழுக வேண்டும்
கனிவு வாக்கில் வேண்டும்
பெற்ற பொருள்கள் யாவும்
பெருமாள் செல்வ மென்னும்
பற்றி லாத பாதை
பால பருவந் தொட்டே
முற்றி யுள்ளே நின்று
மோகம் கொன்று வென்றார். (11)

தந்தைக்கு உதவி யாகத்
தானும் வைதீ கத்தில்
சிந்தையினை வைத்து நித்தம்
வேத நெறியைக் கற்றார்
முந்தைவினைப் பேற்றி னாலே
முகிழ்ந்த பக்தி யாலே
சந்தித்தார் குருவை ஊரில்
சாந்தி கொண்டார் உள்ளே.  (12)

   “1960ல் குருதரிசனம்”

நரசராவ் பேட்டை வந்த
நம்குரு வித்யா தீர்த்தர்
இரவிலே பூஜை செய்தார்
இளைஞராஞ் சநேய லுவங்கே
சிரசிலே கையை வைத்து
செகத்தையே மறந்தி ருந்தார்
வரமது குருவின் பார்வை
வாய்த்ததில் சாந்தி கொண்டார். (13)

 “1961ல் மீண்டும் குருதரிசனம்”

“விஜய வாடா” ஊர்க்கு
விஜயம் அடுத்த ஆண்டு!
நிஜமா பொய்யா என்று
நினைக்க வைத்த பேறு !
சமஸ்கி ரதத்தில் பேசி
சபையைக் கவர்ந்த சீடன்
தமக்காம் குருவின் நெஞ்சத்
தவத்துள் நிறைத்து விட்டார்.  (14)

ஆங்கிலம், தெலுங்கு, மற்றும்
ஆர்வமாய்க் கணிதம் கற்கும்
பாங்கினைக் கொண்ட தாலே
படிப்பிலே முன்னே நின்றார்.
ஏங்கினார் மேலும் மேலும்
வேதமே கற்க வேண்டி;
தாங்கினார் தந்தை அன்பால்
தமையனின் ஆசை வெல்ல.   (15)

“1966ல் உஜைனியில் குருதரிசனம்”

சாதுர் மாச காலம்
சன்யாசி யாரும் எங்கும்
ஊரூர் சென்றி டாமல்
ஓரிடத்தில் தங்கிக் கொண்டு
வேத நெறிகள் சொன்ன
விதிப்படியே பூஜை செய்து
பூமி வாழும் மக்கள்
பொலிவுபெற வாழ்த்து வார்கள். (16)

அபிநவ வித்யா தீர்த்தர்
அப்படியோர் காலம் தன்னில்
புவியிலே புண்ய மான
உஜைனியிலே” விரதம் ஏற்றார்!
செவியிலே வேத நாதம்
தேன்போலே கேட்கும் நித்தம்!
கவியெலாம் அங்கு கூடி
காவியங்கள் தர்க்கம் செய்வர்! (17)

 “உஜைனிக்கு சுவாமி வித்யாரண்யாருடன்”

அந்த அழகைக் காண
ஆஞ்ச நேயலு சென்றார்
சொந்த ஊர்க்கு வந்த
சுவாமி ஒருவரை நாடி!
எந்தக் கவலை, துன்பம்
ஏதும் கொண்டிடா நெஞ்சில்
இந்தக் குருவை மட்டும்
இருத்தி தியானமே செய்தார். (18)

கண்டார் குருவை நேரில்
கண்களில் சாந்தி பொங்க !
வாண்டாய் அலைந்த எண்ணம்
மௌனமாய் நின்ற தங்கே
கொண்டார் இன்பம் உள்ளே
குருவிழி வழியி னாலே!
உண்டார் இல்லை இன்ப
ஊற்றினால் உறக்க மில்லை. (19)

அடுத்தநாள் தரிசனப் போதில்
ஆசார்யர் தாளைப் போற்றித்
தொடுத்தனர் தன்னுடை ஆசை!
“உங்களுக்குத் தொண்டு செய்து
படித்திட வேண்டுறேன்; ஈசா
பக்தனைநீர் கொள்ளு மென்றார்”.
பிடித்தது சீடனின் பேச்சு
பிரியமாக ஆசி தந்தார்.   (20)

பதிவாசிரியரைப் பற்றி