பகற்கொள்ளை
வை.கோபாலகிருஷ்ணன்
கப்பல் போன்ற அந்த ஏ.சி. கார், காட்டுப் பாதையில் தடுத்து நிறுத்தப்பட்டது. தெருவின் குறுக்கே மூன்று மோட்டார் பைக்குகள். காரைச் சுற்றிலும் முகமூடி அணிந்த ஆறு இளைஞர்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமோ, வீடுகளோ, வாகனப் போக்குவரத்துகளோ ஏதுமின்றி சாலை முழுவதும் சுத்தமாக இருந்தது.
ஒருவன் டிரைவரின் கழுத்தருகே கத்தியை நெருக்கிப் பிடிக்க, மேலும் இருவர், மாலையும் கழுத்துமாக வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த புதுமணத் தம்பதியினரின் அனைத்து நகைகளையும் கழட்டச் சொல்லி, கைகளில் பளபளக்கும் கத்திகளுடன் மிரட்டிக் கொண்டிருந்தனர்.
விபரீதத்தின் விளைவை உணர்ந்ததும், மிரண்டு போய் ஒவ்வொன்றாக சுமார் நூறு பவுன் நகைகளையும் கழட்டிக் கொடுத்தனர்.
தாலியில் உள்ள தங்கத்தை மட்டும் தயவு செய்து விட்டுக் கொடுக்கும்படியும், தனக்கோ தன் கணவனுக்கோ எந்த விதமான காயமும் ஏற்படுத்தாமல் விட்டு விடும்படியும், மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள், அந்தப் புது மணப்பெண்.
இந்த மூன்று கொள்ளையர்களின் கூட்டாளிகளான மற்றொரு மூவர், மோட்டார் பைக்கில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்து புறப்படத் தயார் நிலையில் இருந்தனர்.
பின்னால் சற்று தொலைவில் ஒரு லாரியும், ஜீப்பும் வருவதை அறிந்த, அந்தக் கும்பல், இதுவரை பறித்த நகைகளுடன், மோட்டார் பைக்குகளில் ஏறி, வெகு வேகமாகத் தப்பிச் சென்று விட்டது.
மிகுந்த பதட்டத்துடனும், மனக்கவலையுடனும், காரில் பயணத்தைத் தொடர்ந்து, கணவருடன் தன் புகுந்த வீட்டைச் சென்றடைந்தாள் அந்தப் புது மணப்பெண். அங்கு ஏற்கனவே நான்கு வேன்களிலிருந்து இறங்கி, பொண்ணு மாப்பிள்ளையாகிய இவர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர், இரண்டு வீட்டு முக்கியஸ்தர்களும்.
பிரபல நகைக்கடையின் அதிபரும், மணப்பெண்ணின் தந்தையுமாகிய சதாசிவத்திடம், கண் கலங்கிய நிலையில், உடம்பில் ஒரு நகை கூட இல்லாமல், நடுவழியில் நடந்த கொள்ளையைப் பற்றிக் கூறினாள், அந்தப் புதுமணப்பெண்.
பயங்கரமான ஆயுதங்களுடன் நின்ற ஆறு கொள்ளையர்களை, தான் ஒருவனாக ஏதும் செய்ய முடியாமல் போனதை, மாப்பிள்ளையும் தன் மாமனாரிடம் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.
“இது நான் எதிர்பார்த்தது தான் மாப்பிள்ளை! கடந்த ஆறு மாதங்களாகவே அந்தக் காட்டுப் பாதையில் இதுபோல அவ்வப்போது முகமூடிக் கொள்ளை நடப்பதாகச் செய்தித்தாளில் படித்து வருகிறேன். பகல் வேளை தானே, பயமில்லை என்று நினைத்து உங்களைத் தனியாக ஒரு காரில் அனுப்பி விட்டேன்; அதனால் பாவம் உங்களுக்கு இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டுப் போய் விட்டது.
நல்லவேளையாக என் மகளின் திருமாங்கல்யம் தவிர அனைத்து நகைகளையும் கவரிங் நகைகளாகப் போட்டு அனுப்பி வைத்திருந்தேன். அவைகள் தான் இப்போது கொள்ளை போய் விட்டன. அதனால் கவலைப்படாதீர்கள்.
உங்கள் இருவரின் ஒரிஜினல் தங்க நகைகள் பூராவும், இந்தப் பெட்டியில் போட்டுத் தனியாக பத்திரமாக எடுத்து வந்துள்ளேன்” என்று கூறி, ஒரு பெரிய நகைப்பெட்டியை தன் பொண்ணு மாப்பிள்ளையிடம் ஒப்படைத்தார், அந்த நகைக்கடை அதிபர்.
மிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர்.