எது சரி?
சாந்தி மாரியப்பன்
சிவகாமிக்குக் கோபம் கோபமாக வந்தது.. “என்ன மனுஷர் இவர்?.. ஊர்ல உலகத்துல இல்லாததையா நான் கேட்டுப்பிட்டேன். வாங்கித் தரத் துப்பில்லைன்னாலும் ஆ..ஊ..ன்னா ஒண்ணொண்ணுக்கும் லெக்சர் கொடுக்கறதுல ஒண்ணும் குறைச்சலில்லை. போயும் போயும் இப்படி ஒரு கசத்துல தள்ளினாளே எங்கப்பாம்மா.. அவங்களைச் சொல்லணும்…”. இப்ப புரிந்திருக்குமே யார் மேல் கோபமென்று. கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்துவிட்டாள் போலிருக்கிறது. கூடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த சியாமளி வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தது.
“அம்மா.. குளிச்சி சாமி கும்பிட்டாச்சு. டிபன் ரெடியா?.. ஸ்கூலுக்கு நேரமாகுது..” என்றபடி வந்த பாபுவின் கண்களில் சியாமளி மாட்டினாள்.
“நீ ஏண்டி காலங்காத்தால லூசு மாதிரி சிரிச்சுட்டிருக்கே..”
“ஐயோ.. அண்ணா, கத்தாதே. அப்பாவுக்கு அர்ச்சனை நடந்துட்டிருக்கு. நீ அம்மாட்ட மாட்டினா உனக்கும் நடக்கும்.. உஷ்..” உதடுகளை ஆட்காட்டி விரலால் சிறை வைத்து, குறும்பாய் எச்சரித்தாள்
“அர்ச்சனை எதுக்காம்?..”
“இன்னிக்கு அட்சய திருதியையாமில்ல.. அதுக்குத்தான் அப்பாக்கு சாவி கொடுத்தாறது”
“இந்த அம்மாவுக்கும்… “ என்று என்னவோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டான். அம்மா மேல் பயமெல்லாம் ஒன்றுமில்லை. குளிக்கப் போன அப்பா திரும்பி வந்து செருப்பை வாசல் நடையில் கழட்டி விடும் சத்தம் கேட்டதுதான் காரணம்.
வீட்டில் சகல வசதிகள் இருந்தபோதிலும் பெருமாளுக்கு ஆற்றில் போய்க் குளிப்பதுதான் பிடிக்கும். காலையில் எழுந்ததும், கரகரவென்று தலையில் ஒரு கை, உடம்பில் ஒரு கை எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, பல் துலக்கும் ப்ரஷ், பற்பசை, உடம்புக்கும் துணிக்கும் தனித்தனி சோப்புகள், நாகர்கோவிலுக்குப் போயிருந்தபோது தலை துவட்டவென்று வாங்கி வந்த ஈரிழைத் துண்டு என்று சகலமும் அடக்கிய ஒரு சின்ன பிளாஸ்டிக் வாளி சகிதம் சைக்கிளில் ஆற்றுக்குக் கிளம்பி விடுவார்.
அவரைப் பொறுத்தவரை அந்தப் பயணம் குளிக்கப் போவதற்கு மட்டுமானதல்ல. வழியெங்கும் எதிர்ப்படும் அறிமுகமான மனிதர்களிடம் ரெண்டொரு வார்த்தைகள் பேசியபடி, ஆற்றுக்குப் போய் ஏற்கனவே வந்திருக்கும் நண்பர்களுடன் நாட்டு நடப்புகளையும் அணிந்திருக்கும் துணிகளையும் துவைத்து அலசிப் போட்டு விட்டு, கரையிலிருக்கும் ஆலயத்துக்குப் போவார். அமைதியான, கல் பாவிய, சில்லென்ற பிரகாரத்தில் கால் வைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோவொரு உணர்வு அவரைச் சூழ்ந்து கொள்ளும். பழகி விட்டால் சிலருக்குப் பக்தியும் போதையூட்டத்தான் செய்கிறது.
கால் மணி போல் அந்தச் சூழ் நிலையில் லயித்து விட்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, பூவையோ துளசியையோ வலது காதில் செருகிக் கொண்டு விட்டு வீடு திரும்புவார். இது நல்லபடியாக நடந்து விட்டால் அன்றைய நாளுக்கான எனர்ஜி அவருக்கு உத்தரவாதம்.
வீட்டுக்கு வந்து ஈரத்துணிகளைக் கொடியில் காயப் போட்டு விட்டு, ‘அப்பாடா’ என்று பேப்பரும் கையுமாக வந்தமர்ந்தார். ‘ணங்’கென்று தம்ளர் வைக்கப்பட்ட விதத்திலேயே வைத்தவள் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்து போனது. தம்ளர் வைக்கப்பட்ட வேகம் தாங்காமல் அப்படியும் இப்படியும் ஆடி, காப்பி அலையடித்துக் கொண்டிருந்தது.
“அலை வர்ற வேகத்தைப் பார்த்தா அடுத்தது சுனாமி வரும் போலிருக்கே” காப்பியைக் கையிலெடுத்துக் கொண்டவர் செய்த கேலி அவளது கோபத்தை விசிறி விட்டது.
“சுனாமி அழிக்கிறதுக்கு மட்டுமில்லை.. சிலசமயம் ஆக்கறதுக்கும் புறப்படறதுண்டு.. உங்களுக்குத் தெரியாததா என்ன”
“ஏம்மா.. நான் நேரிடையாவே கேக்கறேன். இன்னிக்குத் தங்கம் வாங்கியே ஆகணும்ன்னு அடம் பிடிச்சு ரெண்டு நாளா கண்ணைக் கசக்கறது எதை ஆக்கறதுக்காம்”.. காப்பியை ஒரு வாய் உறிஞ்சிக் விட்டு கேட்டார்.
“ஏங்க,.. நான் என்ன எனக்காகவா நகை நட்டு சேர்க்கிறேன். நமக்கு ஒரு பெண் குழந்தை இருக்குங்கறதையே நீங்க அடிக்கடி மறந்துடுறீங்க. இப்படியாப்பட்ட சந்தர்ப்பங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சாத்தானே அவ வளர்ந்து நின்னு நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு வரும் போது நாமளும் கௌரவமா செய்ய முடியும்.”
“சிவகாமி,.. அவளை அவளுக்காகவே கொத்திக்கிட்டுப் போக எந்த ராஜகுமாரனாவது வராமலா போயிடுவான்..?”
“நீங்க இப்படியே விதண்டாவாதம் செஞ்சுக்கிட்டே இருங்க.”
“அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லதுன்னுதான் இது நாள் வரைக்கும் சொல்லிட்டிருந்தே. இப்ப திடீர்ன்னு ப்ளாட்டினத்துல வாங்கினாத்தான் ஆச்சுன்னா எப்டிம்மா?…”
“இன்னிக்கு வெண்மையான கலர்ல வாங்கினா இன்னும் விசேஷமாம். சொல்லிக்கிட்டாங்க. கோடி வீட்டு பூர்ணாவுலேர்ந்து பக்கத்து வீட்டுக் கீதா வரைக்கும் முன்னாடியே போய் நகைக்கடையில டிசைன் செலக்ட் செஞ்சு ஆர்டரும் கொடுத்துட்டாங்க. இன்னிக்குப் போய் வாங்கியாரப் போறாங்க. நான் ஒரு சின்ன மோதிரமாச்சும் வாங்கலைன்னா, அப்றம் உங்களுக்கு என்ன பெருமை?.. பாங்க் மானேஜர் பொண்டாட்டின்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் என்ன கௌரவம் இருக்கும்?.. நான் என்ன எனக்காகவா கேக்கறேன்?..”
“இப்ப என்னதான் செய்யணும்ங்கறே?..”
“எங்கூட கடைக்கு வாங்க.. அது போதும்…” என்றபடி காலி டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
“இட்லிக்கு என்ன தொட்டுக்கறீங்க?.. தக்காளிச்சட்னியா?.. முட்டைக்கோஸ் சட்னியா?..” என்று கேட்டபடி மறுபடியும் வெளியே வந்தவள், கூடத்தில் அவரைக் காணாமல் திகைத்தாள்.
“எங்கேடா உங்கப்பா?…”
“இப்பத்தான் சட்டையைப் போட்டுக்கிட்டு வெளியே கிளம்பினார்”
‘சாப்பிடக் கூட செய்யாம எங்க போயிட்டார்?.. ‘ என்று புருபுருத்தபடியே அடுக்களை வேலைகளில் மூழ்கிப் போனாள். டிபன் தயார் செய்து பிள்ளைகளைச் சாப்பிட வைத்து விட்டு, அடுப்பிலிருந்த பொரியலைக் கிளறி விட்டாள்.
“செவாமி.. இந்தா… இந்தப் பைகளைக் கொஞ்சம் பிடி..” என்ற கணவரின் குரல் கேட்டு வாசலுக்கு விரைந்த சிவகாமி அந்தப் பொருட்களைப் பார்த்ததும் திகைத்து நின்றாள்.
“ஏங்க,.. இதெல்லாம் எதுக்கு. அதான் வீட்ல ஏற்கனவே இருக்கே. வேலை மெனக்கெட்டு இத வாங்கறதுக்காகவா காலைல வெளிய கெளம்புனீங்க..”
“செவாமி,.. அட்சய திருதியைக்கு வெண்மையான பொருட்களை வாங்கணும்ன்னு நீதானே சொன்னே..”
“ஆமா சொன்னேன்..”
“அப்படி வாங்கினா வீட்ல வாழ் நாள் முழுக்க அந்தப் பொருட்களுக்கான பஞ்சம் ஏற்படாதுன்னும் சொன்னே.. இல்லியா?..”
“அதுக்கென்ன இப்ப..?”
“அதுக்காகத்தான் இதுகளை வாங்கியாந்தேன். இதுகளும் நல்ல வெள்ளை நிறத்துலதானே இருக்கு. எதுக்குத் தட்டுப்பாடு வந்தாலும் இந்த ரெண்டுக்கும் தட்டுப்பாடு வராம இருந்தாலே நமக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமா இருக்குன்னு அர்த்தம். அந்தக் காலத்துல அட்சய திருதியை கொண்டாடுன நோக்கமே வேற செவாமி. பக்தி, அன்னதானம்ன்னு இருந்தது இப்ப வியாபார நோக்கத்தால திசை திரும்பி தடுமாறிக்கிட்டு இருக்கு. மத்தவங்கல்லாம் செய்யறாங்கன்னு சொல்லிச் சொல்லியே ஒவ்வொண்ணிலயும் உண்மையான நோக்கத்தை நாம நம்ம வசதிக்காக மறந்துடறோம். இருக்கப்பட்டவன் நிலை பரவாயில்லை. ஆனா, வசதி குறைஞ்சவங்களும் கந்து வட்டி அது இதுன்னு கடன் பட்டாவது இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு அடிமையாகறதைப் பார்க்கறச்சே கஷ்டமாருக்கு செவாமி..”
“கடன் பட்டாலும் அதைக் கொண்டு தங்கம் தானே வாங்குறாங்க?.. இல்லைன்னா, ஏழைகள் கண்ணுல தங்கத்தைப் பார்க்க முடியுமா..?”
“வாங்குறதை மட்டும்தான் நீ பார்க்கறே.. அப்டி வாங்கினப்புறம் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாம மறுபடி அதே தங்கத்தை அடகு வெச்சு கடனைக் கட்டறாங்க. இதுல எத்தனை பேரோட பொருட்கள் மூழ்கிப் போயிடுதுன்னு உனக்குத் தெரியுமா?.. அவங்க இன்னும் கடனாளியா ஆகறதுதான் மிச்சம். பாங்க்ல தினம்தினம் எத்தனை பாக்கறேன். சரி.. சரி,.. இந்த உப்பைக் கொண்டு போய் சமையலறையில் வை. இந்தப் பாலைக் காய்ச்சிப் பால் பாயசம் பண்ணி சுவாமிக்கு நைவேத்தியம் செய். என்ன பார்க்கறே?..இதுகளும் வெண்மை நிறத்துலதானே இருக்குது. நீ சொன்னபடி அட்சய திருதியைக்கு வெண்மை நிறப் பொருட்களை வாங்கியாச்சு.”
கையில் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு தலை சுற்றி வாசற்படியிலேயே அமர்ந்திருந்தாள் சிவகாமி.