என் தேசம் தூயதேசம்
வித்யாசாகர்
ஆம் அப்போதெல்லாம் என் தேசம் தூயதேசம்..
மனிதர்கள் அன்றெல்லாம், மழை பெய்யும்
ஈரத்தின் வாசம்போல் மனதிற்கு
ஈர்ப்பாக வாழ்ந்திருக்கின்றனர்;
பிறருக்குக் கொடுப்பதும் பிறரை மதிப்பதும்
உயிர்விடும் செயலிற்கரிய –
மனிதரின் மாண்பாக விளங்கியிருக்கிறது;
விலங்குகளுக்கு மட்டுமே பயந்து
வேலியமைத்தோம், மானம் மறைக்கவே ஆடையுடுத்தினோம்
தேவைக்குட்பட்டே வாழ்தலிருந்தது;
வேற்றுமொழி திணித்துப் பேசத்
தெரிந்திருக்கவில்லை, வேற்று மனிதராய் யாரையும் பிரிக்க
அவசியப்படவுமில்லை;
விவசாயம் சுயமாக நடந்ததில்
வாரி மறைக்கவோ, உழைப்பின்றி உயிர்கொள்ளும்
நோயுறவோ வாய்ப்பேற்பட்டிருக்கவில்லை;
தானம் பரிவு ஒழுக்கம் உண்மை
தைரியம் தெளிவு வேகம் வரலாறெல்லாம்
உணவு மறுக்கப் பட்டாலும் பாடத்தில் போதிக்கப் பட்டது;
இப்போது நாங்கள் கால் வைத்த தேசம்
களங்கப் பட்டுப் போனது.
ஒரு வயிற்றிற்குச் சோறுகிடைத்தால் போதும்
வாயடைத்து ஒடுங்கிப் போகிறோம்;
வேலையில் திட்டினாலும் பயம்
வெளியில் திட்டினாலும் பயம்
வெள்ளைக் காரனை விடுத்து,
பெற்றக் குழந்தை முறைத்தால் கூட பயம்
பயம் விழுங்கிய மிச்சத்தை
உயிர் போனபின் மட்டும் அசட்டையாகப் பிணமென்கிறோம்;
யார் உண்டார் உறங்கினார்
உயிர் விட்டார் எதற்கும் வருத்தப் படாத
நாங்கள் வாழும் தேசம் மட்டும்
எப்படியோ வல்லரசு தேசமாகிறது;
இதெல்லாமென்ன –
சுதந்திரம் அன்று எம் மூச்சாக இருந்தது
விடுதலையை மட்டுமே பேச்சாகப் பேசினோம்
அந்நியன் அவமதித்த இடத்திலெல்லாம்
ரத்தத்தை வாரியிறைத்தோம்;
ஆனால் உயிர் பல விட்டுப் பெற்ற தேசத்தில்
இன்றும் முழு விடுதலையில்லை
சுதந்திரம் எம் பேச்சிற்கே இல்லை
ரத்தத்தை வாரியிறைக்கிறோம் உலகத்தின் கண்களில்
ஆனால் அடிபட்டவன் அவன்; நாங்களல்ல!
நாங்கள் இதோ ஜனநாயகக் கொடியேத்தி
மதம் கலந்த மிட்டாய் தின்போம், வாங்கிய லஞ்சப் பணத்தில்
சேலை வேட்டி இனாமளிப்போம், எதைக் கட்டியும் எதை இடித்தும்
வரலாற்றில் எம் பெயரைத் தினிப்போம், எவந் தாலியறுத்தாவது
எங்கள் ஊரின் மிராசென்று பேரெடுப்போம், இருட்டை மதுவில் கலந்து
எம் இனத்தையே குடிப்போம்!!
என் தேசம் அன்று தூய தேசம்..