இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

அவ்வைமகள்

21. ஞானோதயக் காலம் 

இந்தியாவில், மக்களிடையே காணப்பட்ட சுதந்திரம் மிகுந்த சமயப் பழக்கங்களும் பயிற்சியும் மற்றும் மன்னர்களின் மூன்று தட்டு, தர்மபரிபாலனத்தில், அன்று காணப்பட்ட  செம்மையான முறைமைகள் ஆகியன  ஐரோப்பாவில் உதித்த, Age of Enlightenment எனப்படும் ஞானோதயக் காலம் பிறக்க முன்னோடிகளாக இருந்தன. ஞானோதயக் காலத்தின் நோக்கம் என்னவென்றால், ஆட்சிமுறைமை மூன்று தட்டுகளாக (சட்டம், நீதி, நிர்வாகம்) இருக்கவேண்டும் என்பதும், சமயம் என்பது  ஆட்சியாளர்கள் கையில் இல்லாமல், மக்கள் வாழ்வியலில், அவர்களது பரிபூரண மனச் சுதந்திரத்தில், சனாதனமாகப்   பொருந்தியிருக்க வேண்டும் என்பதாகும்.

இந்நிலையில், சனாதனம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் நலம். சனாதனம் என்பது, இனம், நிறம், குலம், சாதி, பிறப்பிடம், வாழுமிடம், பேசும் மொழி, சமயம் சார்ந்த பழக்கங்கள், பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகள், இவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கவேண்டிய இன்றியமையா நல்லொழுக்கங்கள்  (virtues) ஆகும். இந்த நால்லொழுக்கங்கள் யாவன என்றால்:  தூய்மை, நேர்மை, ஜீவகாருண்யம், நற்சிந்தை, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக் கட்டுப்பாடு, பெருந்தன்மை, விரதம் ஆகியன. இங்கு விரதம் என்பதைத் தியாகம் என்றும் கொள்ளலாம். அவரவர் வாழும் வாழ்முறை மற்றும் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் இந்த நல்லொழுக்கங்களை அவர்களால் இயன்ற வகையால் ஆற்றுதல்  வேண்டும் என்பது தான் சனாதனத்தின் சாராம்சம். சமயத்தைவிட சனாதன தர்மம் தான் முக்கியமானது.

சமுதாயம் என்பது தோப்பு; இதில் தனி மனிதர்கள், தனித்தனி தாவரம் போன்றவர்கள். தனி மனிதர்கள் சேர்ந்து சமுதாயம் எனும் தோப்பை உருவாக்கும்போது, தனிமனித ஒழுக்கங்கள் மற்றும் தனிமனித வளம் ஆகியனவற்றைப் பொறுத்தே, சமுதாயமெனும்  தோப்பின் ஒழுக்கமும் வளமும் அமைகிறது. எனவே, நல்லொழுக்கப் பண்புகள் யாவையும் உடைத்தவராய் தனிமனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும்  என்பது மட்டுமே சனாதன தர்மத்தின் நோக்கம்.

இத்தகைய உன்னத  மார்க்கமான சனாதன தர்மத்தை அடைவதே, ஐரோப்பிய ஞானோதய காலத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. எனவே, ஞானோதய  கால முன்னோடிகளின் சித்தாந்தம் என்னவென்றால் – அவர்களால் வேண்டப்பட்டது, என்னவென்றால்: சனாதன தர்மம் கூறும் நல்லொழுக்கங்கள், தமக்கும், தம் சந்ததிகளுக்கும், பயிற்றுமாறு, பயிற்சிக்குமாறு அவரவர் தமக்குத் தோதான சமயப் பண்பாட்டு முறைமையை மேற்கொள்ளும் சுதந்திரம் வேண்டும் என்பதே. சமயம் என்பது தனிமனிதர்களின் கையில் இருக்கவேண்டிய கருவியே தவிர, ஆட்சியாளர்கள் கையில் இருக்கவேண்டிய ஆயுதம் இல்லை

சமயத்தை ஆட்சியாளர்கள் தம் கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களையும் சமயத்தையும் ஆளக்கூடாதுசமயத்தை ஆளவேண்டியவர்கள்  மனிதர்களே தவிர, ஆட்சியாளர்கள் அல்லர்.

இவ்வாறாக, ஞானோதய காலத்தில், ஐரோப்பா முழுவதும், சமயத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விலக்கப் போர்களும் போராட்டங்களும் நடக்க, அதே காலக்கட்டத்தில், மதவெறி பிடித்த, மதம் மூலம் மட்டுமே ஆட்சி நடத்தவேண்டும் என்கிற குறிக்கோள் கொண்ட ஐரோப்பியக் காலனி  ஆட்சியாளர்களோ,  தமது குடியேற்ற நாடுகளில், தமது ஆட்சிபலத்தின் முலம் கிறித்துவ மதத்தை, வன்முறையாக நிலைநாட்டலானார்கள். துரதிருஷ்டவசமாக, அன்று நம் தாய்நாடு காலனியாளர்கள் கைப்பிடியில் இருந்தது.

புண்ணிய பூமி, ஞான பூமி, என்று ஆதி காலந்தொட்டே ஞானோதயக்  களஞ்சியமாக இருந்து வரும் பூமியாக நம் நாடு இருப்பினும், ஐரோப்பிய ஞானோதய காலத்தில், அந்த ஐரோப்பிய ஞானோதயத்துக்கே நம் நாடுதான் முன்மாதிரி நாடாய்க் கருதப்பட்டது என்றாலும் கூட, நம் நாட்டில், சுதேசி சமயமான இந்து சமயம், காலனி ஆதிக்க மதவெறியாளர்களால் கடுமையான சமய நெருக்கடிக்கு இலக்காகிறது.

எனவே, அக்காலக்கட்டத்தில், இந்து சமயம்,  முன்னெப்போதும் இல்லாத முனைப்போடு எழுந்து நின்று, தனது கால்களைத் தன் சொந்த பூமியில் நிலைநாட்ட வேண்டிய  நிர்ப்பந்தம்  எழுந்தது.

இந்தக் காலக்கட்டத்தை, இந்தியாவின் புதிய ஞானோதய காலம் என்று அழைப்பது பொருந்தும். சொல்லப்போனால், அது, மிகவும் சிக்கலானதொரு காலக்கட்டம். வரலாறு காணாத, இடர்ப்பாடு மிகுந்த காலம் அது. வெளியிலிருந்து வந்தவன், ஆட்சியைப் பிடித்தது மட்டுமில்லை;  தன் சமயத்தைப் பலம்கொண்டு பரப்பியது மட்டுமில்லை;  சுதேசி இந்து சமயத்தைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புளுகினான் – இழித்துரைத்தான் – கேலி செய்தான் – கிண்டலடித்தான், தண்டித்தான், இந்துசமய தெய்வங்களை “Demons” பேய்கள் என்றான்,  இந்து சமயத்தில் இருப்பவர்கள் காட்டுமிராண்டிகள் – நாகரீகமற்றவர்கள் என்றான் – கோயில்களை, வழிபாட்டுத் தலங்களை இடித்தொழித்து, சர்ச்சுகளைக் கட்டினான். மக்கள் புத்தி பேதலித்தாற்போல் ஆகி, உண்மையெது பொய்யெது என்று புரியாமல் திணறலானார்கள். எனினும், ஆட்சியாளனை எதிர்த்துக்கொண்டு வாழ்வது சுலபமில்லை என்று சிலர் பய உணர்விலேயே  மதம் மாறிப் போயினர். வெகுபலரோ, ஆட்சியாளர்கள் மற்றும் கிறித்துவ மதக்கருவிகள் தந்த வெகுபல சலுகைகளினால் மதம் மாறினர், பிறரையும் மதம் மாற்றினர்.

இந்நிலையில்தான், இந்து சமயப் பண்பாட்டு இயக்கங்கள் தோன்றுகின்றன. 1828இல் பிரம்ம சமாஜம்; 1857இல் பிரார்த்தனை சமாஜம்; 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1875இல் பிரம்ம ஞானசபை; 1897இல் ராமகிருஷ்ணா  மிஷன் என்று தொடர் சங்கிலியாய் ஒரு எழுச்சி நடக்கிறது.

இவற்றுள், வள்ளலார் நிறுவியது: சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1872இல்.  சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் என்று பெயர் திருத்தம் செய்து வள்ளலார் இந்தச் சமயப்  பண்பாட்டு  இயக்கத்தை, அவ்வமயம்  நடாத்திச் செல்கிறார்.

வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம், மஹாராஷ்டிராவில் தோன்றிய பிரார்த்தனை சபை ஆகியவற்றிலிருந்து வள்ளலாரின் சமரச வேத சன்மார்க்க சங்கம் (சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம்) எவ்வாறு வேறுபட்டது? ஏற்கெனவே இரண்டு இயக்கங்கள் எழும்பி நிற்க, அவற்றுடன் சேர்ந்து இயங்காமல், தான் தனியாக ஒரு இயக்கம் துவங்க வேண்டிய தேவை வள்ளலாருக்கு ஏன் ஏற்பட்டது என்கிற இரண்டு கேள்விகள் இப்போது நம்முள் எழுகின்றன.

விந்திய சாத்பூரா மலைத்தொடருக்குக் கீழே தெக்கணத்தில் தோன்றிய முதல் சுதேசி சமயப் பண்பாட்டுப் புரட்சி எதுவென்று பார்த்தால்,  அது வள்ளலாருடையதுதான்.

விந்திய சாத்பூரா மலைத்தொடருக்கு மேலே வட இந்தியாவில், மிகக் குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவில், வங்காளத்தில்,  கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) தோன்றியது பிரம்ம சமாஜம், வடமேற்கில், மகாராஷ்டிரத்தில், குறிப்பாக, பாம்பேயில் (இன்றைய மும்பை) தோன்றியது பிரார்த்தனை சமாஜம்.

இவை இரண்டுமே நடப்பில் இருப்பதான சுதேசி சமயமான இந்துசமயப் பண்புகளை ஆதரிக்காது அவற்றை எதிர்த்தவை. இரண்டிற்குமே அரசியல் சார்பு இருந்தது.

இதிலே, பிரம்ம சமாஜம் என்பது, முழுக்க முழுக்க ஆங்கிலேயரின் கைக்கூலி இயக்கமாகும். இதனை பிரமோ சமாஜ் என்ற பெயரில், முதலில் தொடங்கியவர் ராம் மோகன் ராய். இவர் ஒரு செல்வந்தச் சீமான். குலின் எனப்படும் அரசகுல பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி அவ்வப்போது இந்தியச் செல்வந்தர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்குவதுண்டு. ராம் மோகன் ராய் இவ்வாறு, கிழக்கிந்திய கம்பெனிக்கு  வட்டிக்குப் பணம் தந்து உதவி வந்தார்; இவ்வாறான பழக்கத்தில் தான்,  ராம் மோகன் ராயின்  கணக்குப் போடும் துல்லியத்தையும், கில்லாடிக்குக் கில்லாடியாய் அவர் நடந்துகொள்ளும்  சாமர்த்தியத்தையும்,  பேச்சுச் சாதுரியங்களையம்  கிழக்கிந்திய கம்பெனி கவனிக்கிறது. இந்தியாவில், தான் வேரூன்றி நிலைநிற்க வேண்டுமென்றால்,  இவனைக் கூட்டாளியாக்கிக் கொள்ளுவது வேண்டும் என்கிற எண்ணம் கிழக்கிந்திய கம்பெனிக்குத் தோன்றுகிறது. எனவே, ராம் மோகன் ராயை, கிழக்கிந்திய  கம்பெனியில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு வர இயலுமா எனக் கேட்க,  அவரும் ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு,   கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்தியாகிறார் ராம் மோகன் ராய்.

ஏற்கெனவே, முகலாய அரசர், இரண்டாம் அக்பருக்கும் இவருக்கும் கொஞ்சம் நெருக்கம் இருந்து வந்தது. கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் பணி என்ற பதவி. கம்பெனியின் கணக்கு வேலை, வழக்குகளுக்கு எனக் கோர்ட்டுக்குத் தேவையான எழுத்துவேலை செய்வது, இந்தியர்கள் தொடர்பான பிரச்சினைகளில் வாய்ச் சவடால் செய்து பஞ்சாயத்துப்  பேசுவது, இந்துச் சட்டம் என்ற பெயரில், ஆவணங்களை எழுதி அவற்றை ஒரு சட்ட நூலாக கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களுக்கு எதிராகப் பயன்படுத்துமாறு செய்வது போன்ற வேலைகளைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக, ராய் செய்துவந்தார்.

இத்தோடு, கிழக்கிந்திய கம்பெனியின் சொற்படி, கிறித்துவ மதத்தை உயர்த்தியும் சுதேசி மதங்களைத் தாழ்த்தியுமான நூல்கள் எழுதுவதும் அவர் வழக்கம். ஆங்கிலேயர்களும் கிறித்துவ மதமும் உயர்வானவை என்பதைத் தொடர்ந்து ருசுப்படுத்துவதற்காக, ஆங்கிலக் கிறித்துவ மதபோதகர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு, அவ்வப்போது, சுதேசி மக்களிடையே மறைமுகமாக, சமய பண்பாட்டுப்  பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அவற்றிற்கு, தான் முன்னின்று, ஆங்கில அரசின் மூலம், கிறித்துவர்கள் மூலம், கிறித்துவக் கொள்கைகள் மூலம்  தீர்வு காணுவதுபோல நாடகமாடுவது என்பதெல்லாம் ராம் மோகன் ராயின் வேலைகள்.

இவை ஒவ்வொன்றுக்கும் அவருக்கு ஆங்கிலேயர்களால் சம்பளத்தைத்  தாண்டி, கூடுதல் சன்மானம் வழங்கப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு, இந்து சமயத்தில் குழப்பம் விளைவித்து அதன் ஸ்திரத்தைக் குலைக்கமுடியுமோ முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்குச் சன்மானம் வழங்கப்பட்டது. ஏனெனில், அவ்வாறான ஒவ்வொரு நிகழ்விலும், ஆங்கிலேயர்கள் அப்பிரச்சினையில் தலையிட்டு, தீர்வு காண்பதற்கான ஒரு சூழல் ஏற்படும்; ஆங்கிலேயர்கள், புதுப் புதுச் சட்டங்கள் இயற்றி, ஒரு பக்கம் நற்பேரும் மற்றோர் பக்கம், இந்திய மக்களை ஆள – பிரித்தாள வசதியும்  ஏற்படும் – பொய் வழக்கு போட்டு அவர்களைத் தண்டித்து அடக்கி ஆள வழி பிறக்கும். கிறித்துவ மதமாற்றத்தையும் அப்படியே சுலபமாக நடத்தி விடலாம்.

ஆக, ராம் மோகன் ராய்க்கு வழங்கும் சன்மானம் என்கிற ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்திக் கொண்டுவிட முடியும் என்பது தான் ஆங்கிலேயரின் கணக்கு.

1803இல் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்த ராம் மோகன் ராய், அதே ஆண்டில், வேலையில் சேர்ந்த ஒரு சில மாதத்திற்குள்,  கம்பெனியின் ஆதிக்கம் ஓங்கவும், கிறித்துவ மதம் ஓங்கவும் ஓர் அற்புதமான சதித்  திட்டம் தீட்டிவிடுகிறார் – அதை நடைமுறைப்படுத்தியும் காட்டுகிறார். அதனால், ஆங்கிலேயர்களின் கிறித்துவ மதமாற்றம் செய்வோரின் மிகுந்த நம்பிக்கைக்கும் நெருக்கத்துக்கும் உள்ளாகிறார். அந்த நிகழ்ச்சிதான்  “சதி” எனும் உடன்கட்டை ஏறுதல் எனும் நிகழ்ச்சி.

1803இல் திடீரென்று வில்லியம் கேரி என்பவர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்: “கல்கத்தாவைச் சுற்றிய  30 மைல் சுற்றுவட்டாரத்தில் 1803இல் மட்டும் 438 உடன் கட்டை ஏறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன – இந்து சமயத்தில் நிகழும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது” என்று.

இந்த வில்லியம் கேரி யாரென்று பார்த்தால், அவர் ராம் மோகன் ராயின் நண்பர்;  கிறித்துவ மதபோதகர்;  மதமாற்ற வித்தகர்; ஏற்கெனவே, இவ்விருவரும் வித்யா வாகிஷ் எனும் ஒரு சம்ஸ்கிருத பண்டிதரும் சேர்ந்து, “மஹா நிர்வாண தந்த்ரா”எனும் நூலை வடமொழியாம் சமஸ்கிருதத்தில் எழுதி வெளியிட்டார்கள் (வடமொழி அறியாத கேரி இந்நூலை எழுதியிருக்க வாய்ப்பே  இல்லை என்பது உலகோர் கருத்து – பின்னாளில் வித்யாவாகிஷ் கேரியை தம் நட்பு வட்டத்திலிருந்து விலக்கிவிட்டார் என்பதும் இந்நூலை எழுதியது வித்யாவிகாஷ்  என்பதற்குச் சான்று. இந்நூல், வித்யாவிகாஷால் எழுதவைக்கப்பட்டது என்பதும் கூடத் தகும்). வில்லியம் கேரி, கிழக்கிந்திய கம்பெனியின் தொடர்பில் 1803இலிருந்து இருந்து வந்ததையும் நாம் அறிகிறோம்.

1803க்குப் பிறகு,  சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும், உடன்கட்டை ஏறுதல் பற்றிய சேதி, மீண்டும் வருகிறது: 1815-1818 காலக்கட்டத்தில் உடன்கட்டை ஏறுதல், வங்காளத்தில் இரட்டிப்பாகிவிட்டது என்று.

ஆக, பொய்யுரையும், பணம் கொடுத்துத் தூண்டிவிடப்பட்ட நிகழ்வாகவும் தான் உடன்கட்டை ஏறுதல் அன்று ஆங்கிலேய ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதை நம்மால் ஊகிக்கமுடிகிறது.

கேரியும், மோகன் ராயும், ஆங்கிலேயர்களும் நடத்திய இந்த நாடகத்தில், அடுத்த கட்ட அரங்கேற்றம் என்னவென்றால். ராம் மோகன் ராய், இவ்விஷயத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்து, இந்து சமயத்தில் இவ்வாறு நடக்கும் இழிவான செயல்களில் தலையிட்டு – அவற்றைச் சட்டத்தின்  மூலம் தடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் வருகிறது. ராம் மோகன் ராய், இந்து சமயத்தின் சீர்த்திருத்தவாதி என்று  மிகப்பெரிய புகழை அடைகிறார்.

இவ்வாறு, ராம் மோகன் ராய், இந்தியர்கள் சார்பான விஷயங்களில், ஆங்கிலேயர்கள் தமக்கு வசதியான முடிவெடுக்க, ஆலோசனை தரும் உயர்நிலை ஆலோசகராகவும், இந்திய மக்கள் பிரதிநிதியாகவும் ராம் மோகன் ராய்,  பல விஷயங்களில் பகிரங்கமாகவே செயல்படலானார். இவற்றுள், பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணத் தடையும் அடக்கம்.

இவையாவும், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித்  தந்திரமே தவிர, எந்த ஒரு இந்திய பிரஜையும், ராம் மோகன் ராயைத் தம் தலைவராக கிழக்கிந்திய கம்பெனியிடம் மொழிந்துரைக்கவில்லை. ஆக, கைக்குள் கையாக ஆங்கிலேயருக்காகச் செயல்பட்டவர் ராம் மோகன் ராய். அதனால் தான் அவருக்கு அத்தனைப் பெரும் புகழும் பதவிகளும் அந்தஸ்தும் செல்வாக்கும் கிடைத்தன.

ஒரு பக்கம், கிழக்கிந்திய கம்பெனிக்கு இத்தனை நெருக்கமாக இயங்கிய அதேவேளையில், இன்னொரு பக்கம்,  இரண்டாம் அக்பருக்கும் அவர் நெருக்கமாகவே நடந்துகொள்ளலானார். கிறித்துவ மதத்தை உயர்த்திப் பேசும் நூல்களை எழுதுவது போலவே, இஸ்லாமியத்தை உயர்த்தும் சில நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார். “மீரட் உல் அக்பர்” என்று இஸ்லாமியர்களுக்கான ஒரு செயதித்தாளையும்  பெர்சிய மொழியில் வெளியிட்டு வந்தார்.

பிரிட்டிஷாரின் வலு பெருகப் பெருக, முகலாய மன்னர்கள் தாக்குப்பிடிக்க இயலாமல் போன நிலையில், பிரிட்டிஷாருக்கு நெருக்கமாயிருந்து  தேர்ச்சி பெற்ற  ராம் மோகன் ராயின் தயவு, இரண்டாம் அக்பருக்கு மிகவும் தேவைப்பட்டது. ராம் மோகன் ராய் அவ்வப்போது காட்டி வந்த இஸ்லாமிய வாஞ்சையும் இந்தத் தயவுத் தேவையில் அடக்கம். இரண்டாம் அக்பரிடம் ராய்க்கு இருந்த நெருக்கத்தை, கிழக்கிந்திய கம்பெனியும், இந்திய மக்களிடையே தமது “இமேஜ்” வளர, மிக அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

சுதேசி சமயப் பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவதைக் குறைகூறும் அதிருப்தியாளர்களின் வாயை அடைப்பதற்காகத் திட்டம் தீட்டப்படுகிறது. ராம் மோகன் ராய் பிறருக்காகப் பாடுபடுவதாகக் காட்டவும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் சமயப் பண்பாடுகளைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது என்று மக்கள் நம்புமாறும் ஒரு தந்திர அரசியல் செயல் வடிவம் பெறுகிறது.

இரண்டாம் அக்பர், தமது பணச்செலவில், ராம் மோகன் ராயை, தமது தூதுவராக பிரிட்டனுக்கு அனுப்புகிறார். அனுப்புமுன், ராம்  மோகன் ராய்க்கு ராஜா என்ற பட்டத்தைச் சூட்டி, இவரே இந்திய நாட்டு மக்களின் மானசீக ராஜா என்பதாக,  “ராஜா ராம் மோன் ராய்” பிரிட்டன் செல்கிறார்.

உடன்கட்டை ஏறுதலைத் தடை செய்து,  வில்லியம் பென்டிங்க் இயற்றிய Bengal Sati Regulation of 1829 மறுக்கப்படாமல் உறுதி செய்யவேண்டும் என்றும், இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையை (Stipend) அதிகரிக்க வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளுடன் பிரிட்டன் சென்ற ராஜா ராம் மோகன் ராயின் கோரிக்கைக்கு ஏற்ப, பிரிட்டிஷ் அரசும் இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையில்  30,000 பவுண்டுகள் சேர்த்து அதிகத் தொகையாக அளிக்க ஆணையிடுகிறது.

“ராஜா” பட்டத்துடன், ராம் மோகன் ராயின் புகழ் இன்னமும் பெருகுகிறது.

ராம் மோகன் ராய் கெட்டிக்காரத்தனம்  நிறைந்த அரசியல்  தந்திரவாதி, பணம், புகழ், அந்தஸ்து மட்டுமே அவருக்கு முக்கியம், சுதேசி சமயப் பண்பாடுகளோ, நாட்டின் சுயமரியாதையோ அவருக்கு முக்கியம் இல்லை என்பதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அவற்றைத் தரவுகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கேரியுடன் அத்தனை நெருக்கமாகப் பழகினாரோ, பின்னாளில், அதே கேரியுடன் பிணக்கு ஏற்படுகிறது, கேரியின் பாப்டிஸ்ட் கிறித்துவம் தாழ்ந்தது என்றும்  “Unitarianism” எனப்படும் நவீன யூத மதமே உயர்ந்தது என்றும் கேரியைப் பழித்து அதனை ஆதரிக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனியைத் தாண்டி, ஐரோப்பியர்கள் இந்தியாவில் குடியேற்றம் செய்ய – விவசாயம் செய்யவும் ஆதரிக்கிறார். (கிழக்கிந்திய கம்பெனியில்  வேலை பார்த்த வகையில், அவர்கள் இந்தியாவில் ஈட்டிய பெரும் செல்வம் கண்டு பொறாமை பட்டவராக இதைச் செய்ததாக உணர்கிறோம்).

குழந்தைகள் திருமணத் தடைச் சட்டத்தைக் கொண்டவர் என்ற புகழை ஈட்டுவதில் மட்டுமே அவருக்கு ஆசை இருந்தது; அதனைப் பின்பற்றும் நோக்கம் அவருக்கு இல்லை என்பதும் உண்மை. இவருடைய மகளை, குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்தவர்.

ஆத்மீய சபா, யூனிடேரியன் கம்யூனிட்டி ஆகியனவற்றையும் தொடங்கி பல்வேறு வகைகளில் தம்மை பிரபலப்படுத்திக்கொண்டவர்.

இன்று, நம்மிடையே இருக்கும் பல அரசியல்வாதிகளின் தந்திரங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக அன்றே ராம் மோகன் ராய் பரிமளித்தார்.

ஆக, பணம், புகழ், அந்தஸ்துக்காக, அந்நியர்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் இச்சைக்காய் எதனையும் செய்யத் தலைப்பட்டவராகவே ராம் மோகன் ராய் இயங்கி வந்தார்.  சுதேசி சமயம், சுதேசி மொழிகள், சுதேசிப் பண்பாடுகள், பற்றிய அக்கறை இல்லாத அவர்,  அந்நியரைக் குளிரவைத்து, அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை அவர்களுக்காகச் சாதித்துத் தரவேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்டவர்.  சர்ச்சுகளின் கைக்கூலியாகச் செயல்பட்டு சுதேசி சமயப் பண்பாட்டுக்கு அவர்  செய்து போந்த நாசவேலைகள் பற்பல.

சொந்த மக்களையும், சுதேசிப்  பண்பாடுகள், மொழி, இலக்கியம், கலை, காவியங்கள், கல்வி என எதனையும் பழிக்கவும் அழித்தொழிக்கவும் அவர் துணிந்தவரானார்.

துரதிர்ஷ்ட வசமாக, அந்நிய ஆட்சியாளர்களுக்குக் கைக்கூலியாகச் செயல்பட்டவர்கள் மட்டுமே அன்று கவுரவிக்கப்பட்டார்கள். பட்டம், பதவிகள் தந்து உயர்நிலையில் வைத்து,  ஆராதிக்கப்பட்டார்கள் என்ற நிலையில் பிரம்ம சமாஜம் மற்றும் அதனை அடுத்துத் தோன்றிய பிரார்த்தனை சமாஜம் போன்றவற்றின்  சுதேசி சமயப் பண்பாட்டுச் சேவைகள் என்று சொல்லும்படியான விஷயம் இல்லை என்பது தெளிவு.

இங்கு தான் வள்ளலார் எனும் தனிமனிதர், ஒரு சுதேசி சமயப் பண்பாட்டுப் பாதுகாவலராக எழுகிறார். அவரது  சுதேசி சமய இயக்கம் தோன்றுகிறது. ஆன்மீக உலகில், அது ஒரு விடிவெள்ளிக் காலம்.

(மேலும் பேசுவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.