ஏறன் தமிழ்த்தாய் வாழ்த்து!

ஏறன் சிவா

சிந்தனை மிகவே தந்தும்;
சிறுமைகள் விலகச் செய்தும்;
நிந்தனை செய்தார் பேச்சின்
நிலைகடந் தேற வைத்தும்;
சந்தனம் போல் மணக்கும்
பாடலைத் தாளில் தந்த,
செந்தமிழ்த் தாயே நின்றன்
திருவடி வாழ்த்து வோமே!

அறவொளி; உயிர்கள் மீதே
அன்பொளி; நமை வளர்க்க
அறியாமை மறைய வைக்கும்
அறிவொளி; நாட்டைக் காக்கும்
மறம்திறம் இரண்டும் ஊணில்
மனத்தினில் ஊற வைத்த
நறுஞ்சுவைத் தமிழே நின்னை
நாளெலாம் வாழ்த்து வோமே!

உண்மைகள் உணர வைத்தும்;
உரிமையை உரைக்க வைத்தும்;
பெண்மையை மதிக்க வைத்தும்;
பெரும்பொருள் ஆசை பற்றும்
புன்மைகள் புதைய வைத்தும்;
பொழுதெலாம் பயனாய்ச் செய்யும்
வண்டமிழ்த் தாயே உன்றன்
மலரடி வாழ்த்து வோமே!

இலையிடை ஆட வைத்தும்;
இசையிடைப் பாட வைத்தும்;
மலையிடை மயங்க வைத்தும்;
மலரிடை மணக்க வைத்தும்;
சிலையிடை உயிரே உள்ள
சிலைபோல நிற்க வைத்தும்;
கலையிடைப் பணிய வைத்த
கனித்தமிழ் வாழ்த்து வோமே!

எத்தனை கலைச்செல்வங்கள்!
எழில்மிகு தோற்றம் கண்டோம்!
அத்தனை இன்பம் யாவும்
அருளிய உமக்கெம் ஆவி
மொத்தமீந் தாலும் சற்றும்
முற்றாதெம் பற்றே என்று
முத்தமிழ்த் முகையே நின்னை
முடிதாழ வாழ்த்து வோமே!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க