பிரகாஷ் சுகுமாரன்

தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சிறுவர்கள் போட்ட கூச்சல் மிகவும் பிடித்தது. சண்டையிடுவதும் மீண்டும் விளையாடுவதுமாக இருந்த பிள்ளைகளை வீட்டின் வாசற்படியில் அமர்ந்திருந்த அம்மாக்கள் தங்களுக்குள் பேசியபடியே  கண்காணித்தனர். பெரும் சப்தங்களை எழுப்பியபடி விரைந்து கொண்டிருந்த வாகனங்களின் குறுக்கே ஓடி வந்த சிறுவர்களை வாகன ஓட்டிகள் திட்டுவது கூட பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை அளித்ததால் சப்தம் அதிகரித்தபடியே இருந்தது. விளையாடிய சிறுவர்களுடன் சேராமல் தனியாக அமர்ந்திருந்த அவன் தெருமுனையை அடிக்கடி பார்த்தபடி இருந்தான். நேரம் செல்ல செல்ல அவனுக்கு விளையாட்டில் கவனம் குறைந்து தெரு முனையிலேயே கண்களை பதித்தான். ஒவ்வொரு முறை வாகனங்கள் தெருவில் நுழையும் போதும் கண்கள் விரிய எழுந்திருக்க முயன்றவனை நிற்காமல் சென்ற வாகனங்கள் வாட்டமடையச் செய்தாலும் மீண்டும் மீண்டும் தெரு முனையைப் பார்த்தபடியே இருந்தான்.

அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்த அவன் பூட்டியிருந்த வீட்டின் படிக்கட்டுகளில் புத்தகப் பையை வைத்துவிட்டு எழுந்து சாலைக்குச் செல்வதும் மீண்டும் வந்து அமர்வதுமாக இருந்தான். காலையில் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் மற்ற பிள்ளைகள் தங்கள் அப்பாக்களுடன் வருவதைப் பார்த்து அவனுக்குள் ஆதங்கம் பொங்கும். சிறுபிள்ளையாக இருக்கும்போதே அவனுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதைப் பார்த்து பயந்து அழுவான். பின் அப்பா வீட்டுக்கு வருவதே இல்லை. அதன் பிறகே அம்மா சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தான். அம்மாவுக்கு அப்பாவைப் பிடிக்காமல் போனது ஏன் என்பது அவனுக்குத் தெரியாவிட்டாலும் இப்போது சுதந்திரமாக இருப்பதாக அம்மா கூறுவது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

இரவு நேரங்களில் பல தடவை அவன் பயத்தில் அழும் போது அம்மா அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு கதைகள் கூறுவாள். அவனைப் பள்ளியில் கொண்டு விட்டு விட்டு தினமும் வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டாலும் எதையும் அவனிடம் காட்டிக் கொள்ள மாட்டாள். சித்தி, அத்தை, பாட்டி எல்லாம் அடிக்கடி வந்து பார்த்து அவனுக்குப் பிடித்த உடை மற்றும் பொம்மைகளை வாங்கித் தந்து விட்டுச் செல்வார்கள். ஆனால் பள்ளிக்குச் செல்லும் போது மட்டும் மற்ற குழந்தைகளுடன் அப்பாக்களைப் பார்த்து தனக்கும் அது போல் ஒரு அப்பா இல்லையே என யோசிப்பான்.

ஒரு நாள் இரவு திடீரென அவன் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது, பக்கத்துத் தெருவில் வழக்கமாகப் பார்க்கும் ஒரு ஆளுடன் அம்மா சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவின் கையைப் பிடித்து எதற்கோ கெஞ்சிக் கொண்டிருந்த அவனைப் பிடித்து வெளியே தள்ளிய அம்மா பின் ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தாள். அப்புறம் இரண்டு நாட்களுக்கு பாட்டி வந்து அவர்களுடன் தங்கியிருந்ததோடு, வீட்டு மாடியில் இருந்த கதவை அடைத்து சுவர் எழுப்பியதால் மாடிக்கு சென்று அவன் விளையாட முடியாமல் போனது. சீக்கிரம் பெரியவனாகி அம்மாவை அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவனுடைய ஆசை. தெருமுனையில் ஒவ்வொரு வாகனம் நுழையும் போதும் அவன் ஆவலுடன் எழுந்து ஓடிச் சென்று பார்த்தான்.

முன்பு ஒரு முறை பாட்டி வீட்டில் அம்மாவுடன் சென்ற போது ஒரு ஆள் வந்தான். பாட்டி பலமுறை சொல்லியும் அம்மா எதற்கோ ‘ஒப்புக் கொள்ள மாட்டேன் என் பிள்ளைதான் முக்கியம்’ என்று சொல்லியதைக் கேட்டுச் சந்தோஷப்பட்ட அவனுக்கு அம்மாதான் உலகம். அத்தை, சித்தியெல்லாம் கூட அம்மா அவனுக்காக ரொம்பக் கஷ்டப்படுவதாகச் சொல்லும் போது அவனுக்குப் பெருமையாக இருக்கும். இப்படி ஒரு அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டாள் என மற்றவர்கள் சொல்லும்போது அம்மாவை ஆசையோடு கட்டிக் கொள்வான். அவளும் அவனைக் கட்டிக் கொண்டு தலைமுடியை வருடிக் கொடுப்பாள்.

தெரு முனையில் நுழைந்த ஆட்டோ சப்தம் அவனுடைய கவனத்தைக் கலைத்தது. ஆசையுடன் எழுந்தவன் அம்மாவைப் பார்த்ததும் முகத்தில் தன்னிச்சையாக சிரிப்பு மண்டி  புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டான். அம்மா வந்த உடனே பள்ளியில் நடந்த விஷயங்களையும், கணக்கு டீச்சர் வெரிகுட் சொன்னதையும், மத்தியானம் டிபன் பாக்சிலிருந்த இட்லியை, கூடப் படிக்கும் பையன் அவனுக்குத் தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டு விட்டதையும் சொல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டான். ஆட்டோவிலிருந்து இறங்கிய அம்மா இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

உள்ளே ஒரு ஆள் பேசிக் கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. அம்மா முகத்தில் இருந்த சிரிப்பு அவனுக்குப் புதிதாக இருந்தது. சிறிது நேரம் கழித்து ஆட்டோ கிளம்பியதும் தெருவைக் கடந்து வந்த அம்மா வீட்டுக் கதவை திறந்தபடியே கேட்டாள் “என்ன செல்லம் சீக்கிரமே வந்துட்டியா, மத்தியானம் ஒழுங்கா சாப்பிட்டியா? என சப்தமாக கேட்டவளுக்கு, “சாப்டேன்..” என்ற பதில் மெல்லிய குரலில் வந்தது. ” வா, வா..  அம்மா இன்னிக்குச் சந்தோஷமா இருக்கேன், உனக்குப் புது டிரஸ் வாங்கி வந்திருக்கேன், சீக்கிரம் போட்டுக்கோ, இன்னிக்கிப் பாட்டி வீட்டுக்குப் போய்த் தூங்கலாம்…” அம்மாவின் முகத்தைப் பார்க்காமல் புத்தகப்பையை கீழே வைத்த அவன் “ நான் உன் கூட பாட்டி வீட்டுக்கு வரமாட்டேன் போ..” மழலை மொழியில் சொல்லி விட்டு, ” நான் விளையாடப் போறேன்..  ”  என்றபடி ஓட்டமெடுத்தான் தெருமுனைக்கு.

“பொண்ணாப் பொறந்திருந்தா ஒருவேளை அவன் என்னப் பத்திப் புரிஞ்சிட்டு இருந்திருப்பான் இல்லம்மா.. இனி ஒருதரம் கல்யாணம் செய்துட்டு வாழணும்ன்ற ஆசைய எனக்குள் வர விட மாட்டேன். மீதி இருக்க வாழ் நாள் முழுதும் இனி அவனுக்காக மட்டுமே.. ” மடியில் விழுந்து அழுத மகளைத் தேற்ற முடியாத அந்தத் தாயின் கண்களில் இருந்து நீர் அருவியாய் வழிந்தது.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *