எட்டுக் கோணல் பண்டிதன் – 8

தி. இரா. மீனா

இரட்டைகளை விடுவதால் பரஞானம் உண்டாகும் என்றும், ஸம்ஸ்கார நாசமே ஸம்சார நாசமென்றும், அதுவே உண்மை நிலை என்றும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் போதிப்பதே இந்த அத்தியாயமாகும்.

                 அத்தியாயம் ஒன்பது

1. செய்ததும், செய்யாததும் பிற இரட்டைகளும் எப்பொழுது எவருக்கு ஓய்ந்தது என்றிங்கே அறிந்து உதாசீனமுற்று சங்கல்பமற்று தியாகமே சிறந்ததென்றிருப்பாய்.

2. அன்பனே! யாரோ ஒரு புண்ணியவான் உலகியலை உணர்ந்து வாழ்க்கை வேட்கையும், போகவிருப்பும், அறிதல் வெறுப்பும் அடங்கப் பெறுகிறான்.

3. இவையனைத்தும் நிலையாதது, சாரமற்றது. இகழ்ந்து தள்ளக் கூடியது என்று நிச்சயித்தவன் சாந்தி அடைகிறான்.

4. எங்கே மனிதர்களுக்கு இரட்டைகளே இல்லையோ அங்கே கால மென்பதென்ன, வயதாவதென்ன? அவற்றைப் புறக்கணித்தவன் பூரணனாவான்.

5. மகரிஷிகளும், சாதுக்களும், யோகிகளும் வெவ்வேறு கொள்கை யில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்தவானால் சாந்தியடைய முடியுமா?

6. உதாசீனம், சமத்துவமென்னும் யுக்திகளால் ஞான ஸ்வரூபானுப வத்தை உலகச் சுழலிலிருந்து காப்பாற்றுகின்றவன் குருவாவான்.

7. பஞ்சபூதத் திரிபுகளைப் பூதங்களாகவே காணமுடியும் போது அந்தக் கணத்திலேயே நீ உண்மையில் கட்டறுந்து சொரூபநிலையடைவாய்.

8. ஸம்ஸ்காரங்களே சம்சாரமென்று அவையனைத்தையும் விட்டு விடு. இந்நிலைதான் உண்மை.

                    அத்தியாயம் பத்து

நிலையாதவைகளாக உள்ள அறம், பொருள், இன்பங்களை அறவே நீக்கி ஆசைகளற்று ஓய்ந்து சுகமாக இருக்க வேண்டுமென்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இவ்வத்தியாயமாகும்.

1. காமப் பகையையும், பொருளாசையையும் விட்டு, இந்த இரண்டிற்கும் முன்னதான தர்மத்தையும் விட்டு அனைத்திலும் உதாசீனம் கொள்வாய்.

2. நண்பரும், நிலமும், செல்வமும், வீடும், மனைவியும், சுற்றமும், சம்பத்து அனைத்தும் நாலைந்து நாட்களே. இதையோர் கனவென, மாயத் தோற்றமெனப் பார்ப்பாய் .

3. எங்கெங்கோ ஆசையிருக்கிறதோ அங்கங்கே சம்சாரம் என்றுணர் வாய். திட வைராக்கியமோடு ஆசையற்றுச் சுகமாக இருப்பாய்.

4. ஆசையே பந்தம்; அதை அறுப்பதே முக்தி. உலகத்தின் மீது பற்று ஒழியும் போதெல்லாம் அவ்வப்போது ஆன்ம இன்பமுண்டாகும்.

5. நீ ஒருவன். அறிவுமயமானவன். தூய்மையானவன். உலகமோ அசத்தும், ஜடமுமாகும். அவித்தை என்பது ஒன்றுமேயில்லை. ஆனாலும் நீ அதை அறிய விரும்புவதேன்?

6. பிறவிதோறும் ராஜ்யமும், மக்களும், பெண்களும், உடலும், சுகங்களும் ஆர்வத்தோடிருந்தும் அழிந்து போயின.

7. அறம், பொருள், இன்பம் எல்லாம் போதும். உலகக் காட்டில் இவற்றால் மனம் அமைதியடையவில்லை.

8. எத்தனை பிறவிகள்தான் உடலாலும், மனதாலும், வாக்காலும் பாடுபடவில்லை? கருமம் துன்பம்; களைப்பைத் தருவது. ஆதலால் இப்போதாவது ஓய்ந்திருப்பாய்.

              அத்தியாயம் பதினொன்று

உலகியல் முழுவதும் பிரகிருதியின் தர்மமென்றும், நினைப்பே துக்கத்தின் காரணமென்றும், அனைத்திற்கும் ஆதாரமாம் ஆத்மாவில் நிலைத்தவனே சாந்தி சுகத்தை அடைந்தவனென்றும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் விளக்குவது இவ்வத்தியாயமாகும்.

1. ஆதலும், அழிவதும் இயற்கையால் என உணர்ந்தவன் ஐயமின்றி துயரமின்றி சுகமாக அமைதியடைவான்.

2. இறைவனே எல்லாவற்றிற்கும் காரணம் வேறொருவருமில்லை என உணர்ந்தவன் மனதில் ஆசைகள் நீங்கி அமைதியுடையவனாகி எதிலும் ஒட்டமாட்டான்.

3. செல்வமும், விபத்தும் அந்தந்தக் காலத்தில் விதியால் வருபவை எனத் துணிந்தவன் பொறிகள் நிலைக்கப் பெற்று என்றும் நிறைந்த வனாக ஒன்றையும் விரும்ப மாட்டான். வருந்தவும் மாட்டான்.

4. இன்ப துன்பங்களும், ஜனன மரணங்களும் விதி வசமெனத் துணிந்து தன்னால் ஆவதொன்றுமில்லை எனக் கவலையில்லாமல் இருப்பவன் பற்றற்றவன்.

5. நினைப்பாலன்றி வேறெவ்வாறும் துக்கம் இங்கு ஏற்படாதெனத் தெரிந்து கவலையற்று அனைத்திலும் ஆசை தீர்ந்தவனே இன்பமும் அமைதியும் அடைந்தவன்.

6. உடல் நானல்ல. என்னுடையதுமல்ல.அறிவே நான் எனத் துணிந்த வன் முக்தி அடைந்தவன் எனலாம். செய்ததையும் , செய்யாததையும் அவன் நினைக்க மாட்டான்.

7.பிரமன் முதல் புழு வரை அனைத்தும் நானே எனத் துணிந்தவன் அடைந்ததிலிருந்தும், அடையாததிலிருந்தும் முற்றிலும் விலகித் திரிபற்றுத் தூய்மையுடையவனாக இருப்பான்.

8. பல விந்தைகளை உடைய இந்தவுலகம் ஒன்றுமேயில்லாதது என உணர்ந்து ஆத்ம விளக்கமாக இருப்பான்.

 [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *