கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 13

0

-மேகலா இராமமூர்த்தி

பஞ்சவடி நோக்கி அடிவைத்து நடந்தனர் இராம இலக்குவரும் சீதையும். ஒரு மலையுச்சியில் அமர்ந்திருந்த கழுகரசனான சடாயு, அவ்வழியே வந்துகொண்டிருந்த மூவரையும் காண்கின்றான். ’கழுகு’ப் பார்வையொடு அவர்களைக் கூர்ந்துநோக்கியவன், ”ஒருவன் கருத்த மலைபோல் இருக்கிறான்; இன்னொருவன் செம்மலையாய்க் காட்சிதருகின்றான். வெற்றித் திருமகள் உறைகின்ற மார்பினையும், சிவந்த கண்களையும் கொண்ட இவர்கள் இருவரும் அருங்குணங்கள் நிரம்பிய என் இனிய நண்பன் தயரதனின் தோற்றத்தை ஒத்திருப்பதுபோல் தோன்றுகின்றதே…இவர்கள் யாராக இருக்கக்கூடும்?” என்று தன்னுள் சிந்தித்தான்.

கரு மலை செம் மலை அனைய காட்சியர்
திரு மகிழ் மார்பினர் செங் கண் வீரர்தாம்
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ.
(கம்ப: சடாயுகாண் படலம் – 2795)

அவர்கள் யார் என அறியும் ஆவல் மேலிட்டதால் தானே அவர்களின் எதிர்சென்ற சடாயு, ”நீங்கள் யார்?” என்று அவர்களை ஆர்வத்தோடு வினவுகின்றான்.

பொய்யுரைத்தல் அறியா இராமனும், ”நாங்கள் தயரதனின் மக்கள்” என்றுரைக்க, அவர்களைத் தன் சிறகுகளால் அன்போடு தழுவிக்கொண்ட சடாயு, ”என் நண்பன் நலந்தானே?” என்று கேட்கின்றான் ஆவலோடு.

தயரதன் வானகம் ஏகிவிட்ட செய்தியறிந்து கண்ணீர்விட்டுக் கதறிய சடாயு, ”நண்பா! சம்பராசுரப் போரின்போது, ”சடாயு! நீயே என் உயிர்; நான் உடல்” என்று என்னிடம் இயம்பினையே! இன்று உயிராகிய நான் இருக்க உடலாகிய உன்னை மட்டும் எமன் கொண்டு போனதென்ன விந்தை!” என்று சிந்தை நொந்து புலம்பினான்.

அதைத் தொடர்ந்து…”என் மக்களே! என்னுயிர் நண்பன் தயரதன் போன பின்னரும் நான் உயிர்வாழ விரும்பவில்லை! இப்போதே எரியில் மூழ்கி என் உயிரைவிட எண்ணுகின்றேன்; எனக்கும் ஆற்றுவீர் ஈமக்கடன்!” என்று சாற்றவே, ”எந்தையை இழந்தோம்; இப்போது எந்தை போன்ற நீரும் இறப்பேன் என்றால் எங்களுக்கு ஆருளர் ஆதரவு?” என்று இராம இலக்குவர்கள் வருந்திக்கூறினர்.

அவர்கள் வார்த்தையில் நெஞ்சம் நெகிழ்ந்த சடாயு, ”நீங்கள் கானகம் நீங்கி அயோத்தி சேர்ந்தபின் நான் வானகம் சேருவேன்!” என்றுகூறி அவர்களின் துன்பத்தை மாற்றினான்.

பின்னர் அவர்கள் கானகம் வந்த காரணத்தைக் கேட்டறிந்து, இராமனின் உயர்ந்த செயலுக்காக அவனை உச்சிமோந்தான். மூவரும் தங்குவதற்காகச் சென்றுகொண்டிருக்கும் பஞ்சவடி எனும் இடம் வரையில் அவர்களுக்குத் தன் சிறகை விரித்து நிழல்தந்தபடி உடன்வந்தான் அந்தக் கழுகரசன்!

சடாயு போனபின்னர், பஞ்சவடியில் தாங்கள் மூவரும் தங்குதற்கேற்ற அழகியதோர் இலைக்குடிலை (பர்ணசாலை) கலைநயத்தோடு அமைத்தான் குடிலமைப்பதில் தேர்ந்தவனான இலக்குவன்.

பஞ்சவடிக்கருகே நெஞ்சையள்ளும் வகையில் பாய்ந்துகொண்டிருந்த கோதாவரி ஆற்றின் அழகைப் பார்க்கின்றனர் இராமனும் இலக்குவனும். இந்நிகழ்ச்சியைப் பாடவந்த கவிவலார் கம்பர்,

”புவிக்கோர் அணிகலன்போல் அழகூட்டுவதாய் அமைந்து, சிறந்த பொருள்களைத் தந்து, வயல்களுக்குப் பயன்படுவதாய் ஆகித் தன்னுள் பல நீர்த்துறைகளைக் கொண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்நிலப் பகுதிகளின் வழியே பரவிச்சென்று, செவ்வையாய், தெளிவுடையதாகிக் குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய்க் கல்விவல்ல சான்றோரின் செய்யுள்போல விளங்கிய கோதாவரி ஆற்றை இராம இலக்குவராம் வீரர்கள் பார்த்தனர்” என்று விவரிக்கிறார்.

புவியினுக்கு அணிஆய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்றுஆகி
அவிஅகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிஅளாவி
சவிஉறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும்தழுவிச் சான்றோர்
கவிஎனக் கிடந்த கோதா வரியினை வீரர்கண்டார்.
(கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2829)

கோதாவரியை மட்டுந்தான் இப்பாடல் பேசுகின்றதா? இல்லை!

சான்றோர் கவியையும் அதனோடு இணைத்தே பேசுகின்றது. அந்த அடிப்படையில் இப்பாடல் நல்கும் இன்னொரு பொருளையும் காண்போம்!

”உலக மக்களுக்குப் பல அணியாகி (வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் – நன்னூல்-268), சிறந்த அறம், பொருள், இன்பம், வீடு எனும் உறுதிப் பொருள்களை உணர்த்தி, அறிவிற் தங்கி, செவ்விதாய் அமைந்த அகப்பொருள் துறைகளை ஏற்று, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்த அக ஒழுக்கங்கள் விரவப்பெற்று, ஐயத்திற்கிடமின்றிப் பொருள்தெளிவுற அமைந்து, நல்லொழுக்கத்தையும் மக்களுக்கு உணர்த்தி நிற்கும் சான்றோரின் செய்யுள்” என்பது அப்பொருள்.

இவ்வாறு கோதாவரி ஆற்றுக்கும், சான்றோர் கவிக்கும் பொருந்துகின்ற வகையில் அணி, பொருள், திணை, துறை முதலியனவற்றைப் பாங்குறப் பொருத்திக்காட்டி இரட்டுற மொழிந்துள்ள (சிலேடை) கம்பரின் கவிநயம் இரசிக்க வைக்கின்றது.

இலைக்குடிலில் இராம இலக்குவரும் சீதையும் இனிதே வாழ்ந்துவந்த காலத்தில் புதியதோர் பிரச்சினை முளைத்தது பெண்ணொருத்தி வடிவில்!

அவள்தான் இராவணனின் தங்கை சூர்ப்பனகை!

கூனியைத் திடுமென்று காப்பியத்தில் நுழையவிட்டது போலவே சூர்ப்பனகையையும் எவ்வித முன்னறிவிப்புமின்றிக் கம்பர் காப்பியத்தில் கொண்டுவருகின்றார்.

இராமாயணக் கதையின் முதல் திருப்புமுனையாகத் திகழ்பவள், தூயவளான கைகேயியைத் தீயவளாக்கிய கூனி. இரண்டாவது திருப்புமுனையாகத் திகழப்போகின்றவள் இந்தச் சூர்ப்பனகை. இவளை நான்கு பாடல்களில் நமக்கு அறிமுகம் செய்யும் கம்பர்,

”நீலமணி போலும் நிறத்தையுடைய இராக்கதர் அரசனும், பராக்கிரமசாலியுமான இராவணனை வேரோடு அழியுமாறு சூழ்ச்சிசெய்யும் வலிமை உடையவளும், முற்காலத்தில் உயிரோடு கூடவே பிறந்து தான் செயல்படுவதற்குத் தக்க காலத்தை எதிர்பார்த்து, அவ்வுயிருடனேயே தங்கியிருக்கும் கொடிய நோய் போன்றவளுமானவள் இந்தச் சூர்ப்பனகை” என்கிறார்.

ஆக, அவளால் இராவணனின் குலமே வேரோடு அழியப்போவதை இங்கேயே நமக்கு அறியத் தந்துவிடுகின்றார்.

நீல மாமணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளை
காலம் ஓர்ந்து உடன்உறை கடிய நோய் அனாள்.
  (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2836)

”நம் உடன்பிறந்தாரையெல்லாம், நமக்கு நன்மைசெய்யும், சுற்றத்தார் என்று எண்ணி ஏமாறவேண்டாம்; ஏனெனில் நம்முடம்பில் தோன்றிய நோயானது நம்மையே அழித்துவிடும் தன்மைகொண்டது. ஆனால் எங்கோ மலையிலிருக்கும் மருந்தானது நம் நோயைத் தீர்க்கின்றது அல்லவா? அதுபோல் நமக்குத் தொடர்பே இல்லாத சிலர் நம் துன்பத்தைத் தீர்க்க உதவுவதும் உண்டு!” என்ற மாதரசி ஔவையின் மூதுரை இங்கே எண்ணிப்பார்க்கத் தக்கது.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
(மூதுரை: 20)

பஞ்சவடியை ஒட்டிய காட்டுப்பகுதியில் வசித்துவருபவளான சூர்ப்பனகை, தொலைவில் தெரிந்த ஓர் இலைக்குடிலின் வாயிலில் அமர்ந்திருந்த இராமனைக் கண்டாள்; அவன் அழகில் சொக்கிப் போய் அவன்மீது ஆசை கொண்டாள். எனினும் அந்த அழகனின் தவ வேடம் அவளுக்கு வித்தியாசமாகப் படுகின்றது.  

”இன்பம் அளிக்கும் இப்படிப்பட்ட அழகையும், புதுமையை உண்டாக்கத்தக்க தாமரை மலர் போன்ற கண்களையும் உடைய இவன் எதைப் பெறுவதற்காகத் தன் அழகிய திருமேனி வருந்தத் தவம் செய்கிறான்?” என்று சிந்திக்கின்றாள்.

உடனே தன் எண்ணத்தை மாற்றி, ”அதனாலென்ன? இவன் தவம் செய்வதற்கு அந்தத் தவம் அல்லவா முன்னாளில் தவம் செய்திருக்கவேண்டும்!” என்று சமாதானமும் செய்துகொள்கிறாள்.

எவன் செய இனிய இவ்
     அழகை எய்தினோன்
அவம் செயத் திரு உடம்பு
     அலச நோற்கின்றான்
நவம் செயத்தகைய இந்
     நளின நாட்டத்தான்
தவம் செய தவம் செய்த தவம்
     என் என்கின்றாள். (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2846)

தவம் செய்வது அரக்க குலத்தோர்க்கு வெறுப்பைத் தருவது; ஆனால், இராமனின் தவக்கோலம் அரக்கர் குலமகளின் மனத்திலும் தவத்தைப் பற்றி உயர்வானதோர் எண்ணத்தை விதைக்கின்றது! எனினும், தவம் செய்வதால் அந்த அழகனின் திருமேனி வருந்துமே என்றெண்ணித் தானும் வருந்துகின்றாள் சூர்ப்பனகை!

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *