குறளின் கதிர்களாய்…(320)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(320)
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்.
– திருக்குறள் – 420 (கேள்வி)
புதுக் கவிதையில்...
காதால் நுகரப்படும்
கேள்விச் செல்வத்தை
நுகராமல் விட்டுவிட்டு,
வாயால்
உண்ணும் உணவு வகைகளின்
சுவை தேடி நுகரும்
மாக்கள்
மாண்டாலென்ன,
உயிரோடிருந்தால் என்ன..
ஒன்றுதான் எல்லாம்…!
குறும்பாவில்...
செவியால் கேள்விச்செல்வம் நுகராமல்
வாய்க்கு ருசியாய் உணவுநாடி நுகர்வோர்,
வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன்றுதான்…!
மரபுக் கவிதையில்...
கற்றோ ருரைக்கும் செவிச்செல்வம்
காதால் கேட்டே நுகராமல்,
பெற்றே யுணவு பலவகையாய்
பேணிக் காக்க உடலதையே
முற்றும் வாய்க்கே ருசிதேடி
முழுது மவற்றைச் சுவைத்துண்ணும்
வெற்று மனித மாக்களவர்
வாழ்வும் சாவும் வேறிலையே…!
லிமரைக்கூ..
செவிச்செல்வம் நுகர்ந்திடக் காது,
உணராததை வாயால் உணவுச்சுவையுணரும் மாக்கள்
வாழ்வுசாவில் பயன்தான் ஏது…!
கிராமிய பாணியில்...
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்,
படிச்சவுங்க சொல்லுறதக்
கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்..
படிச்சறிஞ்சவன் சொல்லுறதக்
காதாலக் கேட்டுப் பயனடையாம,
திங்கிறதுக்கு ஒணவு
வகவகயாத் தேடித் தின்னு
வாய்க்கு ருசி பாக்கிறவன்
இருந்தா என்ன,
செத்தாத்தான் என்ன..
தெரிஞ்சிக்கோ,
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்,
படிச்சவுங்க சொல்லுறதக்
கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்…!