கருவூர் கன்னலின் ‘மழை’ நாவல் – நனைந்தவனின் அனுபவப் பதிவு

0

ச. சுப்பிரமணியன்

முன்னுரை

பெரும்பாலும் இலக்கணத்திலும் கவிதைகளிலும் தோய்ந்தாலும் வாய்ப்புக் கிட்டுகிற நேரங்களில் சிறுகதை, நாவல் முதலிய படைப்புகளையும் சுவைப்பது எனக்கியல்பு.  கருவூர் கன்னல் அவர்களின் ‘மழை’ என்னும் ஒரு சிறிய நாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. சிறுகதை, குறுநாவல், நாவல் என்னும் ஆய்வுகளுக்குள் நான் கவனம் செலுத்துவதில்லை. அது வடிவ ஆராய்ச்சியாளர்க்கு உரியது. இலக்கியம்,  அனுபவத்தின் மொழிவழிப் பதிவு.  அதன் உடனடி நோக்கம் அது சுவைக்கப்பட வேண்டும் என்பதே.  படைப்பைப் படிப்பதும் சுவைப்பதும் சுவையனுபவங்களைப் பிறருக்குச் சொல்லி மகிழ்வதும் வாழ்வின் நெருடல்களைத் தற்காலிகமாகவேனும் சமப்படுத்தும் என்பது என் கருத்து. அதன் அடிப்படையில் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் நோக்கத்தில் அந்த நாவலைப் படித்துணர்ந்த என் அனுபவங்களை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

இலக்கியத்தில் நான் ஒரு பழைமைவாதி என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பழைமைவாதிகள் புதுமைகளை இனங்கண்டு தரங்கண்டு வரவேற்பதைப் போல புதுமைவாதிகள் செய்யவில்லையே என்னும் ஏக்கமும் எனக்குண்டு. இதனை ஓர் ஆய்வுக் கட்டுரையாகக் கருத வேண்டியதில்லை. ஒரு படிப்பாளியின் அல்லது வாசகனின்  அனுபவ வெளிப்பாடாகவே கருத வேண்டும். ஆய்வுக் கட்டுரைக்கும் அனுபவப் பதிவுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு இந்தக் குழப்பத்தை நான் முதலிலேயே தீர்த்துவிட வேண்டியது என் கடமையல்லவா?

இலக்கிய வடிவங்களும்  சுவையும்

இலக்கிய வடிவங்களுக்கும் பொருண்மைக்கும் தொடர்புண்டு. ஆனால் இலக்கிய வடிவங்களுக்கும் சுவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வைரமுத்தின் கவிதையையும் சுவைக்கலாம். சிறுகதையையும் சுவைக்கலாம். நாவல்களையும் சுவைக்கலாம். கடடுரைகளையும் சுவைக்கலாம். வடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சி, ஆய்வுலகத்திற்கு மட்டுமே பயன்தரும். இலக்கிய நுகர்ச்சி என்பது எல்லாருக்கும் பயன்தரும்.  ஆய்வில் ஆய்வாளர் திறன் மட்டுமே வெளிப்படும்.  இலக்கியச் சுவையுணர்வில் உணர்வார் உள்ளம் மகிழும். முன்னது வரையறைக்கு உட்பட்டது. பின்னது வரையறைக்கு உட்படாதது. எனவேதான் கவிதையையும் இலக்கணத்தையும் மட்டுமே சுவைக்கின்ற என்னைப் போன்றவர்கள் இதுபோன்ற கதைகளையும் சுவைக்க முடிகின்றது.  ஆய்வுகளுக்கு மூலதனம் மூளை. இலக்கியச் சுவைத்தளம் இதயம் மட்டுமே! மூளை  உள்ளவர்கள் இலக்கியங்களை ஆராயலாம். இதயம் உள்ளவர்கள் மட்டுமே இலக்கியங்களை அனுபவிக்க இயலும்!

கால மாறுபாடுகளும் பொருண்மைகளும் இலக்கிய வடிவங்களைத் தீர்மானிக்கின்றன. ‘சிலப்பதிகாரம்’ என்னும் நெடுங்கதை, கவிதையில் எழுப்பட்டுள்ளது. எனினும் அது பாரதியின் நெஞ்சை அள்ளியது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சென்று படியாத  தமிழ் உள்ளங்களே இல்லை. எனவே இலக்கியச் சுவைக்கு வடிவங்கள் காரணமாக அமைவதில்லை என்பது தெரியவரும். சிக்கல்கள், அவற்றைக் களையும் முயற்சிகளில் படைப்பாளனின் சித்திரிப்பு, பாத்திரப் படைப்புகள், கள வண்ணனைகள், அரிய தத்துவங்களை எளிய மொழியில் பொருத்தமான பாத்திரங்களின் வழியே பதிவு செய்தல், கதை சொல்லும் நேர்த்தி, கருத்துகளின் வெளிப்பாட்டு உத்தி முதலியனவே ஓர் இலக்கியம் பிறரை ஈர்ப்பதற்கும் காலங்கடந்து நிலைப்பதற்கும் காரணமாகும். அந்த வகையில்  ‘மழை’ என்னும் சிறு படைப்பின் மூலம்  நாவல் இலக்கியத்திற்குத் தன்னாலான சிறு தொண்டினைக் கருவூர் கன்னல் செய்திருக்கிறார். என்பதையே நான் இந்த நாவலுக்குத் தரும் அறிமுக உரையாகத் தந்துவிடுகிறேன்.

நாவல்களும் நானும்

இந்தப் பத்தியில் கண்டுள்ள கருத்துகள் எனக்கு மட்டுமே பொருந்தும். பிறர் அறிந்துகொள்ள மட்டுமே. பொதுக் கருத்து ஆகாது. என்பதை நான் முன்னமேயே சொல்லிவிட வேண்டும்.  தமிழில் ‘வித்வான்’ படிப்பு என்னை நாவல், சிறுகதை, புதுக்கவிதை முதலிய களங்களில் இருந்து காப்பாற்றியது என்றே சொல்லவேண்டும். அதற்குக் காரணம் ‘அறம்பொருள் வீடு அடைதல் நூற்பயனே’ என்னும் நூற்பாவை என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் நினைவுபடுத்தாத பொழுதில்லை.

பின்னால் நான் முதுகலைத் தேர்வு பாடத் திட்டத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களைப் படிக்க நேர்ந்தது. தமிழின் தொடக்கக் கால நாவல்கள், கு.ப.இராசகோபாலன், மாதவையா, அறிஞர் மு.வ., கல்கி, அகிலன், ஜெகசிற்பியன், சாண்டில்யன், மணிவண்ணன், கி.ராசேந்திரன், மணியன், இராஜம்  கிருஷ்ணன் முதலியோர் நாவல்களைப் நான் படித்து முடித்திருந்தேன். என்னை மறந்தும் நான் ‘பட்டுக்கோட்டை’ பக்கம்  தலைவைத்துப் படுத்ததில்லை. என்ன அதிசயம்? படித்த நாவல்களிலும்  ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எள்ளின் முனையளவும் எனக்கு இலக்கியச் சுகத்தையோ தத்துவ விசாரணையையோ நீதிக் கருத்துகளையோ அறியத் தந்ததாக எனக்கு நினைவில்லை.

கருத்துரை நாவல்களாக அமைந்த அறிஞர் மு.வ. நாவல்களுக்கும் அவருடைய  கட்டுரைகளுக்கும் என்னால் பெரிய வேறுபாட்டை உணர முடியவில்லை. ஆனால் ஒரு கருத்துப் பதிவில் இருக்க வேண்டிய உயர் பண்பாட்டை நான் அவரிடமே கற்றுக்கொண்டேன். ஆற்றொழுக்கான  நடையும், இனிய தமிழும் மரபார்ந்த உணர்ச்சி வெளிப்பாடுகளும் பண்பாடும் நிறைந்த நா.பார்த்தசாரதியின் நாவலாகிய ‘குறிஞ்சி மலர்’ என்னைக் கொஞ்சம் அசைத்தது. அந்த நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அவர் தரும் முத்தாய்ப்பான சில கருத்து வரிகள் எனக்குள் பெருஞ் சிந்தனையைத் தோற்றுவித்தன. பாத்திரங்களை இலக்கியத் தமிழில் பேசவைத்த ஒரு செயற்கைத் தன்மையைத் தவிர வேறு எந்தத் தவறும் அதில் அவர் செய்திருப்பதாக நான் எண்ணவில்லை. அரவிந்தனும் பூரணியும் திருப்பரங்குன்றத்துக்கு அழகு சேர்த்தனர். அரவிந்தன் மரணத்தோடு முடியும் அந்த நாவல் ஒரு காப்பியத்தைப் படித்த நிறைவினைத் தந்தது.

எல்லாம் முடிந்தது தமிழ் நாவல் பற்றிய கருத்துரையை 35 மதிப்பெண் கட்டுரை வினாவில் வினவியிருந்தார்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தார். அந்த எட்டுப் பக்கக் கட்டுரையில் ஒரு பக்கம் ‘குறிஞ்சி மலருக்கு’ ஒதுக்கிய நான் ஒரே ஒரு வரியைத்தான் சாண்டில்யனுக்கு ஒதுக்கியிருந்தேன். அந்த ஒரு வரியில் நான் எழுதியது என்ன தெரியுமா? ‘சாண்டில்யன் வரலாற்று நாவல்களில் வரலாறும் இல்லை! நாவலும் இல்லை’ என்பதுதான். தேர்வு மையத்திற்கு வெளியே வந்த என் நண்பர்கள் நான் ‘தேரமாட்டேன்’ என்றுதான் சென்னார்கள். இது என் அனுபவம். இந்த  அனுபவமே எல்லாருக்கும் வரவேண்டும் என நான் சொல்லமாட்டேன். எதிர்பார்க்கவும் மாட்டேன்!. என் நாவல் அனுபவங்களை நான் தனியாகச் சொல்ல வேண்டும்.

‘படைப்பு, படைப்பாளன் கையில் இல்லை’ என்பது தவறு என்பதைத் திரு ஜெயகாந்தன் ‘அக்னி பிரவேசம்’ சிறுகதையை வாசகர்களின் கருத்துகளுக்கு இணங்கிச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று எழுதிய பிறகு உணர்ந்துகொண்டேன். அது பின்னாளில் ‘கங்கை எங்கே போகிறாள்? என்றும் விரிந்தது. நான் மலைத்துப் போய் நிற்கும் ஒரே நாவல் கல்கியின் ‘பொன்னியின் செல்வனே!’ இவ்வளவு களங்களை அவர் எப்படித் தன் மனத்தில் சுமந்திருந்தார்? இவ்வளவு பாத்திரங்களை எப்படி அவரால் சித்திரிக்க முடிந்தது? கதைப்பின்னலில் எள்ளின் முனையளவும் நெருடல் அல்லது சிக்கல் என்பதே இல்லாமல் எப்படி அவரால் கதை சொல்ல முடிந்தது? இன்னும் பல வினாக்கள்  இருக்கின்றன. அவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்…………?  ‘மழை’ யில் நனைவதை மறந்துவிடக் கூடும்.

உண்மையில் என்னுடைய முதுகலை படிப்பிற்குப் பின்னால் இந்த என்னுடைய எழுபதுகளில்தாம் நான் நாவல்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சிலர் சொல்வதைப்போல நான் வாசிப்பதில் சுகம் காண்பவன் அல்லன். கற்பதில் களிப்படைபவன் . என் கல்லூரி வாழ்க்கை முடிந்து காலனின் உறுதியான கைகளில் தள்ளாடும் இநத இறுதி நேரத்திலும் இலக்கியம் என்பது ஒரு பயன் நோக்கியதே என்னும் கருத்தினை மாற்றிக்கொள்ளும் எந்தச் சூழலும் எனக்கு வாய்க்கவில்லை  பயனில்லாத படிப்பு எதற்கு?

‘மழை’ — கதைச்சுருக்கம்

மழை வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஆதித்யா அடுக்ககத்தில் வாழ்ந்த பலதரப்பட்ட மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். கனிமொழியும் செம்மலரும் முன்னாள் கல்லூரித் தோழிகள் கணிப்பொறித் துறையில் பணியாற்றும் அவரிருவரும் இன்று அறைத்தோழிகள். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சென்னை நகரமே வெள்ளத்தில்.

தன் வீடு தேடிவந்த ஆயிஷா, அவர் மகள் பர்வீன் ஆகியோரை உபசரித்த கனிமொழி, பர்வீனை ஒரு வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்று, அவசரத் தேவைக்கான பொருட்களை வாங்கி வந்தனர். அலுவலகம் சென்று திரும்பிய நிலையில் கிண்டியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட செம்மலர், கோழிக்கடை கோவிந்தன் உதவியோடு அடுக்ககத்தை அடைகிறாள். அடுக்ககத்தின் உரிமையாளர் மோகன்லால், அவர் மனைவி கமலாதேவி. செம்மலர் அறைக்குள்.

அந்த நேரத்தில் அடுக்ககத்தின் மற்றொரு பகுதியில் குடியிருந்த இராமகிருட்டிண அய்யங்காரும் அவர் மனைவி ஆண்டாளும் வெள்ளத்தில் மிதந்த தம் வீட்டைவிடடு வெளியேறிச் செம்மலர் வீட்டுக்கு வந்தனர். ஏற்கெனவே ஆயிஷா தன் வீட்டுக்கு வருமாறு பலமுறை வற்புறுத்தியதால் ஆசாரம் மிகுந்த அய்யங்கார், இஸ்லாமியப் பெண்ணான ஆயிஷா வீட்டில் தங்கினார். அதனைப் பெரும்பேறாகக் கருதிய ஆயிஷா, அவர்களுக்கு வேண்டிய எல்லாப் பணிவிடைகளையும் செய்து தந்ததோடு அவர்களுக்குத் தனியறையும் ஒதுக்கித் தந்தாள். கடுமையான வெள்ளத்திற்கிடையே மானுட வாழ்க்கை கலககலத்துக்கொண்டிருந்தது.

இளமாறன் கணிப்பொறித் துறையில் ஒரு மென்பொருள் வல்லுனன். பொதுநலன் நாடும் மனப்பக்குவம் உடையவன். வெள்ளத்தில் பலருக்கும் பலவகையில் உதவி வந்தவன். மோகன்லாலின் சித்தப்பாவும் சித்தியும் தியாகராயநகர் வெள்ளத்தில்  சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்த மோகன்லால், அவர்களைக் காப்பாற்றப் புறப்படுகிறார். அவரோடு இணைந்துகொள்ளும் இளமாறன், தியாகராய நகர் சென்று அவர்களைக் காப்பாற்றிக் கொண்டுவருகிறார்கள். ஆதித்யா அடுக்ககத்திற்கு வரும் வெள்ள வழியில் இளமாறனும் மோகன்லால் சித்தப்பா மகள் சுநந்தாவும் உணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள். அந்த உணர்வுகளுடனேயே பிரிகிறார்கள்.

செங்கற்பட்டு ஆட்களைக் கொண்டு மோகன்லால் சித்தப்பா வீட்டைத் தூய்மை செய்துவிட்டு மனத்தில் சுநந்தாவைச் சுமந்து கொண்டு ஆதித்யா அடுக்ககம் திரும்பும் இளமாறன், நேராக கமலாதேவியின் வீட்டுக்குச் செல்கிறான். அங்கே தனியாக இருக்கும் சுநந்தாவுடன் பாலியல் விருப்ப உறவில் அவளுடைய இசைவுடன் ஈடுபடுகிறான். அந்த உறவை வெகு சாதாரணமாகக் கையாளும்  சுநந்தாவை ஆசிரியர் அறிமுகம் செய்கிறார்.

செம்மலர், கனிமொழி, சுநந்தா ஆகியவர்களோடு உரையாடும் கமலாதேவி, தன் மும்பை வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுகிறாள். ஆசிரியர் கதையின் இரண்டாவது பகுதி இங்கே தொடங்குவதாகக் கொள்ளலாம். கமலாதேவியின் தாய், பாலியல் தொழிலாளி. பன்னாட்டு அளவில் அந்தத் தொழிலை பல உயர்ந்த செல்வந்தர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நாளொதுக்கி, மணியொதுக்கிச் செய்து வருபவர்.  செழித்து வாழ்பவர். மும்பையில் வெள்ளம்  வந்த காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய துடிப்பில் தான் ஐந்து கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தது, நேரலையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அறிவித்த பிறகுதான் அந்தத் தொகையை எப்படித் திரட்டுவது என்ற கவலை அவளுக்கு வந்தது. ஆனால் அடுத்த நொடியே அந்தக் கவலையைத் துரத்திப் பணத்துக்காகத் தன் தாயின் தொழிலைத் தொடர முடிவு செய்தாள். தாயும் அதற்கு உதவி செய்தாள்.

“அப்பன் வருவான் அவன்பின் மகன் வருவான்
தப்புமுறை என்று நீ தப்பாதே” (விறலிவிடுதூது 223)

என்பது பழந்தமிழ்த் தூது இலக்கியத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. இதற்கு இருபத்தோராம் நூற்றாண்டு எடுத்துக்காட்டாகச் சித்திரிக்கப்பட்டிருப்பவள் இலட்சுமிதேவி. கமலாதேவியின் தாய். தன் வாடிக்கையாளர் பட்டியலை மகள் கையில் கொடுத்து, அவள் தொழிலுக்குத் தேவையான  அறிவுரையுடன் கூடிய உதவி செய்கிறாள். கமலாதேவி அனுப்பிய கடிதங்களுக்கு அடுத்த சில நாள்களிலேயே அவளுடன் இருக்க நாள்கேட்டு, நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்தன.

அவற்றுள் ஒன்று ரிஷிகேஷத்தில் இருக்கும் ஆத்மானந்தா என்னும் போலித் துறவி, கமலாதேவியும் அவள் கணவரும் இணைவதை நேரில் பார்த்து ரசிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்களிக்கிறான்.

இதற்கிடையே  தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என்பதற்காக இலட்சுமிதேவி, தன்மகளை அழைத்துக்கொண்டு மும்பையின் மிகப் பெரிய வைர மற்றும் தங்க வணிக வளாக உரிமையாளரான சங்கர்லால் கடைக்குச் செல்கிறார்.  இருபத்தைந்து இலட்ச ரூபாய் நெக்லேசை எடுத்துக்கொண்டு கிரடிட் கார்டு மூலம் பணம் கொடுக்கிறாள். தன் திட்டப்படி இலட்சுமி தேவி தனது போனை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறாள்.

இலட்சுமிதேவி எதிர்பாரத்தபடியே சங்கர்லாலின் மகன் அதாவது கடையில் கமலாதேவியைக் கண்டு மனத்தைப் பறிகொடுத்த  மோகன்லால், கடையில் ‘மறந்து’ விட்டுவிட்டு வந்த  போனை எடுத்துக்கொண்டு இலட்சுமி தேவியின் விட்டுக்கு வருகிறான். வெள்ள நிவாரண நிதிக்கான தனது திட்டத்தை (ஆத்மானந்தா விருப்பத்தை) எடுத்துச் சொன்ன கமலாதேவி அவனுடன் மிகவும் நெருக்கமாகிறாள். கமலாதேவியின் விருப்பத்தை நிறைவேற்ற மோகன்லால் இசைகிறான்.

அவளுடைய சிந்தனையால் உழன்ற மோகன்லால், ஒருநாள்  கமலாதேவியின் வீட்டுக்கு வந்து அவளுடன் உறவுகொணடு மோதிரம் ஒன்றனையும் அவள் விரலில் அணிவிக்க, சில நாள்களில் சங்கர்லாலின் மருமகள் ஆகிறாள் கமலாதேவி!. மகன் மோகன்லாலும் மகள் கமலாதேவியும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர, அவற்றுள் ஒன்றான ஆதித்யா அடுக்ககமே நாவலின் வெள்ளத்தில் சிக்கிய முன்களக் கதைத்தளமாகிறது.

சுநந்தா ஒரு நாள், இளமாறனைச் சந்தித்து உடலுறவு கொண்டு மகிழ்கிறாள். ஒரு பெண் தன் உடம்பை எப்படிச் செலவழிக்க வேண்டும் என முடிவு செய்யும் உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு என்பதையும் அவள் அதனை எப்படி வேண்டுமானாலும் செலவழித்துக் கொள்ளலாம் என்பதையும் தெளிவாக உணர்த்தித் திருமணம் என்னும் சிறைக்குள் அடைபடுவதைத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி விடைபெற்றுக் கொள்கிறாள். அவளோடு கூடிய வாழ்வை எதிர்பார்த்திருந்த இளமாறனுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும் உடன்  தன் பணியிடத்தைச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு மாற்றிக்கொண்டு அங்கே தன் பெற்றோர்களையும் வரச்சொல்லி ஒரு வீட்டில் இருந்து வருகிறான்.

இளமாறன் தன் அலுவலகப் பணியாளரான கீர்த்தி பண்டிட்டால் கவரப்படுகிறான்.  அவனுடைய வீட்டிற்கே அவள் செல்கிறாள்.  இருவரும் தங்கள் பழைய வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இளமாறன் வீட்டிற்குச் செல்வதைக் கீர்த்தி வழக்கமாகக் கொண்டிருந்தாள். விடுமுறையில் டெல்லி சென்றிருந்த கீர்த்தி திரும்பி வந்தபோது, விமான நிலையம் சென்று அவளை அழைத்து வந்தான் இளமாறன்.

ஒரு நாள் மாலை சோழதேவன ஹள்ளி அம்மன் ஆலயத்திற்கு கீர்த்தியும் இளமாறனும் செல்கிறார்கள். அங்கே கீர்த்தி, தன் டெல்லி கல்லூரி வாழ்க்கையில் கண்ட வாழ்க்கை அனுபவத்தைச் சொல்கிறாள்.

“காஷ்மீர் அகதிக் குடும்பத்தைச் சார்ந்த ஆசிரியப் பெற்றோர்களுக்குப் பிறந்த அவள், டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் பிடெக் மாணவி. அவளோடு படித்த மாணவர்களில் தமிழகத்தின் திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்ட இராமநாதன் ஐஏஎஸ் என்பவரின் மகன் வைத்தியநாதனும் ஒருவன். கீர்த்தியின் அழகில் மயங்கிய வைத்தியநாதன், அவள் அம்மா ஒரு இசையாசிரியை என்பதைக் கேள்விப்பட்டுக்கொண்டு இசை கற்றுக்கொள்ளும் பேரில் கீர்த்தியின் வீட்டுக்கு வருகிறான்.  தன் தந்தையின் ஐஏஎஸ் பதவியினால், கீர்த்தியின் குடும்பத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து தந்து அவளையும் தன் வலையில் சிக்க வைத்து விடுகிறான். காலம் இருவரையும் திருமணம் ஆகாமலேயே படுக்கையறையில் ஒன்று சேர்க்கிறது.

ஒருநாள் காலை. கீர்த்தியைத் தன் வீட்டுக்கு வருமாறு வைத்தியநாதனின் போன் அலறியது. கீர்த்தி சென்றாள். ஆனால் அங்கே வைத்தியநாதன் இல்லை. அவன் வெளியூர் போயிருந்தான். அவனுடைய தந்தை இராமநாதன் தனித்திருந்தார். திருவாரூரிலிருந்து தனது அந்தரங்க உதவிக்காகவும் அனைத்துக்காகவும் அழைத்துக் கொண்டுவந்த விதவையோடு காலம் கழித்த அவர், கீர்த்தியைத் தனது இச்சைக்கிணங்க வற்புறுத்துகிறார். மறுத்த நிலையிலும் அவளைச் சீரழிக்கிறான் இராமநாதன். அந்தச் சூழ்நிலை தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத கீர்த்தி, கசப்பான அனுபவங்களுடன் தன் பெற்றோரோடு பெங்களூர் மாற்றம் பெற்று வாழ்ந்து வருகிறாள். கீர்த்தி தனது இந்த கடந்த கால வரலாற்றைக் கூறியபின் இருவரும் திரும்புகிறார்கள்.

மற்றொரு நாள் இளமாறனின் நினைவால் அவனைச் சந்திக்க வரச்சொல்லும் கீர்த்தி, தான் தன் தோழியின் திருமணத்திற்காகத் திருச்சியை அடுத்த குணசீலம் என்னும் கோவில் ஊருக்குச் சென்றதாகவும் அங்கே வைத்தியநாதனை மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கிடந்ததாகவும் அவனைச் சென்னை மருத்துவமனையில் சேர்க்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்  அவளுடைய மனிதநேயத்தைக் கண்டு இளமாறன் உருகுகிறான். இதற்கிடையே வைத்தியநாதனின் தந்தை இராமநாதன், மிசெளரி ஏரியில் தவறி விழுந்து, இறந்து போன சேதி கிடைக்கிறது.

குளியலறையில் தவறி விழுந்த இராமகிருட்டிண அய்யங்கார் அப்போலாவில் அனுமதிக்கப்பட்டும் தேறாது உயிரிழக்கிறார். அவர் உயிரிழந்த அடுத்த நொடியே மீனாட்சியின் ஆவியும் பிரிகிறது.  அய்யங்காரின் பையன் முகுந்தன், அமெரிக்காவில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணந்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிப் பெற்றோரை மறந்துவிடுகிறான். இந்த வேதனை, அய்யங்காரைப் பெரிதும  பாதித்தது. தந்தையை கிறிஸ்தவ மதம் மாறினால் கல்லறைத் தோட்டத்தில் புதைப்பதாகச் சொன்னதும் அய்யங்கார் அதிர்ந்து போனார். இதனைத் தொடர்ந்தே அவருக்கு இறுதி வந்தது.

கனிமொழியின் கணவன் தாயுமானவனும் செம்மலரின் காதலன் கனிக்கண்ணனும் இறுதிச் சடங்கில் இசுரத் அலியுடன் இணைந்துகொள்கிறாரகள். கமலாதேவியின் தகவலால் கீர்த்தியுடன் இளமாறனும் வந்து சேர்கிறான்.  செம்மலர் கொள்ளிச் சட்டியை ஏந்திக்கொண்டு ஊர்வலத்திற்கு முன்னால் செல்கிறாள். மறுநாள் அறையைக் காலி செய்து இளமாறனும் கீர்த்தியும் திருச்சி செல்லும் விமானத்தில் ஏறி அமர, கதை நிறைவடைகிறது.

கட்டுமானச் சிறப்பு

மனித நேயம், இலட்சிய வேட்கை என்னும் இரண்டு கருக்களை மையமாக வைத்து இந்தக் கதையைப் பின்னியிருக்கிறார் ஆசிரியர். இவ்விரண்டு கருக்களையும் கதைப்பின்னலின் ஊடுபாவாக்கி அவர் செய்து காட்டியிருக்கும் சித்திரிப்பில் எந்த இடத்திலும்  மிகையில்லை. சென்னையைத் தாக்கிய புயல் மழையில் அனைத்துச் சமயத்தினரும் இனத்தினரும் வேறுபாடு கருதாத மனிதநேய வெளிப்பாடுகளாயினும், பாலியல் தொழிலையே மையமாக்கிக் கொண்ட கமலாதேவியின் தாயார் இலட்சுமிதேவி தன் மகளுக்கு ஒரு சிறப்பான  வாழ்க்கையை அமைத்துத் தந்த இலட்சியப் போராகட்டும் எந்த இடத்திலும் இப்படியும் நடக்குமா என்னும் ஐயம் வராமற் போனதற்குக் காரணம்  யதார்த்தத்தின் இருண்ட பக்கங்களின்மேல் ஆசிரியர் தெளிவான மொழியில் வெளிச்சம் பாய்ச்சியிருப்பதே.

இராமகிருட்டிண அய்யங்காரின் முன்னோர்கள் இராமனுக்குக் கோயில் கட்டுவதற்காக அயோத்தி சென்றதும் அவர்கள் இராமர் கோயில் இருப்பிடம் தெரியாமல் தடுமாற, அங்குள்ள இஸ்லாமியப் பெருமக்கள் எல்லா வகையிலும் உதவிக் கருட சேவையிலும் பங்கு கொண்டதாகச் சித்திரித்துக் காட்டும் உலகப் பார்வை, கதைக் களத்தைக் கொடைக்கானல் ஆக்குகிறது. தமிழறிஞர் சீனிவாசன், சென்னை வெள்ளத்தில் மூழ்கியது கதை நகர்வுக்குத் துணை புரிகிறது என்றால், கீர்த்தி பண்ட்டிட்டை ஏமாற்றிய வைத்தியநாதனின் தந்தை இராமநாதன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, கதையின் வேகத்திற்குத் துணை புரிகிறது. விதியின் கைகளில் வசமாகச் சிக்கிய வைத்தியநாதன், குணசீலம் கோவிலில் சங்கிலிகளுக்குள் சிறைபட்டிருந்தது கதாசிரியரையும் மீறிய இயற்கை நிகழ்வாகவே நான் காணுகிறேன். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பாலியல் வல்லுறவுகளை அறைக்குள்ளேயே அரங்கேற்றி,  யோக்கியர்களைப் போல வெளியில் நடமாடும் இத்தகையோர் இருக்க வேண்டிய இடம் குணசீலம் அல்லது ஏர்வாடி என்பதே இந்தக் காட்சியைப் படிப்பவரின் சிந்தனைக்குள் நிற்கும் செய்தியாகும்.

திருப்பதி வேங்கடவனுக்கும் ஷேக்சின்ன மௌலானா சாகிப்பின் நாதசுரத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் சித்திரிக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் பலிகடாவான கீர்த்தி பண்டிட்டை அவளுடைய தாய் நீராட்டிப் புனிதம் செய்தபோது, ஜெயகாந்தனின் ‘அக்னி பிரவேசம்’ நினைவுக்கு வராமல் போகாது. சித்திராபதியாகிய தாய், தன் மகள் மாதவியைப் பாலியல் தொழிலுக்கே தகுதியானவள் என்று நினைத்த காலத்திலிருந்து கமலாதேவியின் தாய் இலட்சுமிதேவி வேறுபடுகிறாள்.  தன் மகளை நெறிசார்ந்த இல்லறத்திற்கு ஆயத்தப்படுத்தும் இலட்சுமிதேவி, தன் எதிர்கால மருமகன் மோகன்லால் என்னும் உறுதியில் திருமணத்திற்கு முந்தைய உறவிற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்பது மிக நாசுக்காகச் சொல்லப்பட்டுள்ளது.

இராமகிருட்டிண அய்யங்காரரின் மூதாதையர்களின் சைவ வெறுப்பும் இராமர் கோவில் கட்டுதற்குக் கனவில் வந்த சேதியும் அதற்காகச் சரயு நதி ஓரத்தில் கோவில் கட்டிய விவரமும் கற்பனையாக இருந்தாலும் இன்றைய இந்தியச் சூழலில் மதநல்லிணக்கத்திற்கு உரமாகிறது. செம்மலர் என்னும் நாத்திகர் வீட்டில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டு பழுத்த ஆத்திகர் அய்யங்கார் வெளியில் வருகிறார். ’ஒரு புதிய அனுபவத்தோடு அய்யங்கார் வெளியில் வந்தார்” (22) என மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதே  மாதிரியான சித்திரிப்பை “ஆபத்திற்குப் பாவமில்ல என்று சொல்லிக்கொண்டே அய்யங்கார் மனைவி, ஆயிசா வீட்டிற்குள் வந்து சேர்ந்தாள் (23) என்றெல்லாம் காணப்படும் சித்திரிப்புகள் ஒரு நாவல் சமுதாயத்தை எப்படி எதிரொளிக்க (Reflection) வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

சென்னை மழை மற்றும் வெள்ளம், புயல் சூழலில்  செம்மலர், கனிமொழி, ஆயிஷா, பர்வீன், இஷ்ரத் அலி, இராம கிருட்டிண அய்யங்கார், மீனாட்சி, ஆயிஷா வீட்டில் தனிஅறை, வழிபாடு என்றெல்லாம் அமைந்த முரண்கள் கதாசிரியரின்  அடிமனத்தை வெளிக்காட்டுகின்றன. மரணம்தான் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில்லை. மழையும் ஒன்று சேர்க்கலாம் என்னும் கருத்தியல், கலை வண்ணமாகியிருக்கிறது  கமலாதேவியின் தாய் இலட்சுமியின் டைரி இந்த நாட்டுப் புனிதர்களின் பெயர்ப்பட்டியலைத் தாங்கி நிற்பதும் ஆத்மானந்தா போன்ற போலிச் சாமியார்கள் விதிவிலக்காக அமையாது எல்லாச் சமய அமைப்புகளிலும் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதும் மிகத் துணிச்சலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் சமயவாதிகள் பலரின் இருப்பிடத்தை நோக்குங்கால், முற்றும் துறப்பது துறவு என்பதை விட்டு முற்றிலும் விலகி, முற்றும் துய்ப்பதே துறவு என்னும் இடம் நோக்கி நடப்பதாகவே தெரிகிறது. 

கன்னல் கதையில் பிரச்சாரம் இருப்பதுபோல் தோன்றக்கூடும். அறிஞர் மு.வ. அவர்களின் கருத்துரை, நாவல்களைப் பயின்றாருக்கு இது தோன்றாது. புதுமைப்பித்தன் அணுகிய முறையில்தான் கன்னல் அணுகியிருக்கிறார். ஜெயகாந்தன் கொஞ்சம் வேறுபடுவார். அவர் என்ன செய்வார் என்றால் சிக்கலான சூழ்நிலை வருவதற்கான காரண காரரிய விளக்கங்களில் வாசகர்களை மயங்கச் செய்துவிடுவார். சொல்லப் போனால் அதுதான்  ஜெயகாந்தனின் வலிமையே.

மழையில் குளிர்ந்த மனித நேயம்

மனிதநேயம் – ஆயிசா வீட்டுச் சமையலை அய்யங்காரும் ஆண்டாளும் உண்பது, ஆயிசா போட்டுத் தரும் காபியை அவர்கள் அருந்துவது (20) அய்யங்கார் மனைவி ஆண்டாளுக்குச் செம்மலர், மேரி பிஸ்கட் பாக்கட்டை அய்யங்காரிடம் தந்து ஆண்டாளிடம் கொடுக்கச் சொல்லும் பாச உணர்வு (21)  ஆண்டாளுக்கும் அய்யங்காருக்கும் ஆயிஷா வீட்டில் நடக்கும் சைவச் சமையல் (28) மோகன்லால் தந்த ஊறுகாயை அய்யங்கார் வாங்கி நன்றிப் பெருக்கால் கண்கலங்கி நின்றது (30) பெண்களுக்கு நாப்கினும் குழநதைகளுக்குப் பாலும் வழங்கும் இஸ்லாமியச் சகோதரர்களின் மனிதநேயம் (31 அய்யங்கார் குடும்பத்திற்கு ஓட்சு கஞ்சி வைத்துக்கொண்டு வந்து கொடுத்த கமலாதேவியைச் சீதாலட்சுமியாக நோக்கும் அய்யங்கார் (36) எனச் சென்னையை மழையால் நனைத்துப் பார்த்ததைவிட மனிதநேயத்தால் குளிரவைத்துப் பார்த்திருக்கிறார் ஆசிரியர்.

கவிதை தவிர்த்த படைப்புகளில் உவமங்கள்

கவிதைகளில்தாம் உவமங்களைச் சுவைப்பது வழக்கம். ஆனால் கல்கி, அறிஞர் மு.வ., பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, நா.பார்த்தசாரதி முதலியோர் தமது படைப்புகளின் ஆசிரியர் கூற்றாகவோ பாத்திரங்கள் வழியாகவோ பல நேரங்களில் மிகச் சிறந்த உவமங்களைக் கூறிக் கருத்து விளக்கம் செய்திருக்கிறார்கள். இங்கே ஒரு கருத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். எந்த ஒரு புதிய சிந்தனையையும் கருத்தியலாகப் பதிவு செய்கிறபோது உடனே மறுத்துவிடுகிற போக்கு இங்கு அதிகம். சான்றாக ஒன்று சொல்கிறேன்.

கவிதைகளைத் தவிர வேறு எந்தப் படைப்புகளின் உவமங்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனவா? படைப்புகள் எல்லாம் பொருண்மைக்கேற்ப அமைந்த மாறுபட்ட வடிவங்கள்தாமே? கவிதையென்றால் உவமத்தைக் கவனிக்கிற நாம் சிறுகதைகளில் கவனித்தோமா? நாவல்களில் கவனித்தோமா? கட்டுரைகளில் கவனித்தோமா? இதனைக் கண்ணுறுகிற ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று இதனைச் சரியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையாயின் சான்றுடன் இந்த ஆய்வு இந்தக் கதையில், இந்த நாவலில் உள்ள உவமங்களை ஆய்கிறது என்று எடுத்துக்காட்ட வேண்டும். செய்வாரா? செய்யமாட்டார். உடனே மறுப்பதற்கு எத்தனிப்பார். அதிலே அடியும் இருக்காது நுனியும் இருக்காது. நாம் சொல்ல வந்தது என்ன? ஒரு படைப்பை அதன் வடிவம் நோக்காது, முழுமையாக உள்வாங்கிச் செரித்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதுதான்!

‘மழையில்’ உவமங்கள்

சென்ற பத்தியில் குறிப்பிட்டவாறு கவிதை தவிர்த்த ஏனைய சிறுகதை, நாவல் முதலிய படைப்புகளில் உவமங்கள் நோக்கப்படாமைக்குக் கதை படிக்கும் வேகத்தில் உவமங்கள் கவனத்தை ஈர்க்காது போவதுதான் காரணம். கல்கியின் பொன்னியின் செல்வனில் அவர் காடடியிருக்கும் உவமங்கள் தனித்த சுவைக்கும் தனி ஆய்வுக்கும் உரியவையாகும். அந்த அடிப்படையில் திறனாய்வுக்கு உட்படும் இந்த ‘மழை’ என்னும் நாவலில் பல்துறை சார்ந்த உவமங்களைக் காண முடிகிறது.

 • குருவாயூர் கோயில் யானையைப் போல அடையாறு அமைதியாகப் படுததுக் கிடந்தது (3)
 • திருமணமாகும் வரை காத்திருக்கும் இளம்பெண் போல் கூவம் இரு கரைகளுக்குள்ளும் ஒடிக் கொண்டிருந்தது (4)
 • சோழர் காலத்தில் செய்த திருபுரந்தான் உமாமகேசுவரி சிலையைப் போல (5)
 • முதலாம் தீர்த்தங்கரரைப் போல் அமர்ந்தாள் (6)
 • வெள்ளக் கடலுக்குள் நிற்கும் கப்பல் போல் ஆதித்யா அடுக்ககம் (14)
 • “பணம் தந்தால் நடிகைகள் எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள் என நினைக்கும் தயாரிப்பாளர்களைப் போல (65)
 • தப்பு தப்பா எழுதிய காகிதத்தைக் கசக்கித் தூக்கி எறிவது போல (67)
 • ஒபாமா மனைவி மிட்செல்லைப் போல (69)
 • மிதிலையில் சீதையை இராமன் பார்த்தது போல (69)
 • இளமைக்காலக் கமலஹாசனைப் போல (70)
 • முழுநிலா முக்கால் அம்மணத்தில் நிற்பது போல (70)
 • நாள்தோறும் தலைவரைச் சந்திக்கச் செல்லும் தொண்டன் ஒருநாள் போகாதிருந்தால் அவன் மனம் என்ன பாடுபடுமோ அதுபோன்ற (94)

என்றெல்லாம் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும் உவமங்கள்’ கதைப்பாத்திரங்களை உணர்ந்துகொள்ளச் செய்கின்றன. அழகியல் உணர்வை மனத்தில் தூண்டுகின்றன. கதைப்போக்கை விளக்கம் செய்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகப் படைப்பாளனின் நுண்ணோக்கைப் புலப்படுத்துகின்றன.

உரைநடை, கவிதையான கதை

செதுக்குவது என்பது வேறு, சிதைப்பது என்பது வேறு. எந்த நிலையிலும் எதனைப் பற்றிய திறனாய்வும் அந்தப் படைப்பைச் சிதைத்துவிடக் கூடாது. ‘மழை’ ஆசிரியர், இயல்பாகவே கவிஞர். கவிஞர்கள் நாவல் எழுதுவது புதியதன்று. அதில் எந்த அளவு வெற்றி பெறுகிறார்கள் அதாவது அவர்கள் எழுதிய நாவல்கள் வாசகர்களை எந்த அளவுக்கு ஈரத்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும். மேத்தா, கண்ணதாசன், கலைஞர், வைரமுத்து முதலியோர் இந்த அலைவரிசையில் வருகிறார்கள். இவர்களைப் பற்றிய திறனாய்வு இங்கு முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் அத்தனை பேரின் படைப்புகளிலும் உரைநடை அவ்வப்போது கவிதையாகும். இது தனி ஆய்வுக்கு உரியது. கன்னல் அவர்களின் இந்தப் படைப்பிலும் உரைநடை, கவிதையான இடங்கள் பல. .

 • பொழுது விடிந்தது என்பதை, அடக்குமுறையை எதிர்த்துச் சூரியன் கிழக்குத் திசையில் நெருப்பு வைத்துக் கொண்டிருந்தான் (4)
 • இடுப்போடு கமுக்கமாகப் பேசிக்கொணடிருந்த கூந்தல் (5)
 • (நுட்பம்) அவள் அணிந்திருந்த சிவப்பு கையில்லாப் பனியன், இரதியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டிருந்தது (6)
 • செம்மலரின் பொன்மேனியில் இருந்து காணாமல் போயிருந்த உடைகள், போதையில் பேசிக்கொண்டிருந்தன (7)
 • மன்மதன் மயக்கம் போட்டுக் கிடந்தான் (7)
 • ஓய்வெடுக்காமல் மழை தூறிக்கொண்டே இருந்தது (13)
 • மின்சாரம் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணமாய் நின்றுகொண்டிருந்தது. (15)
 • கனிமொழி கதவாகவே மாறியிருந்தாள் (16)
 • கொசுக்கள் காபரே ஆடிக்கொண்டிருந்தன (19)
 • ஆயிசா ; 24, வயது எல்லோரா (25)
 • குழந்தை, சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது (25)
 • விண்மீன்கள், நிலவிடம் ஒவ்வொன்றாய் விடைபெற்றுக் கொண்டிருந்தன (76)
 • சிரிப்புகள் கைகுலுக்கிக் கொண்டன (90)
 • ஏரிக் கரையோரம் விழுதுகளைப் பரப்பிக்கொண்டு நிற்கும் ஆலமரம். ஆலமரத்தை பேச்சுக்கழைக்கும் ஓர் அரசமரமும் வேப்ப மரமும் இணைந்து நின்று கொண்டிருந்தன. (96)
 • அவள் லோகிப், தூக்குக் கயிற்றை என் மேல் தூக்கி வீசியது! (98)
 • மயக்க மருந்து செலுத்தாமலே நான் மயக்கமடைந்து கொண்டிருந்தேன் (98)

நூற்றிருபது பக்கமுடைய இந்த நாவலில் இத்தகைய கவிதை நடை   அழகாக இருக்கலாம். படிப்பவரைப் பரவசப்படுத்தச் செய்யலாம்.  ஆனால் இது  படைப்பாளரின் ஆற்றலை வியந்து நோக்குதற்குரிய காரணிகளில் ஒன்றாக அமையுமே தவிர, கதையில் மூழ்கித் திளைப்பதற்கு உதவுமா? என்றால் ‘உதவும்’ என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் இதைப் படைப்பாளரின் திறமைகளில் ஒன்றாகத்தான் நினைக்க முடியும் நாவலோடு ஒன்றுதற்கு உதவுகிறதா என்பதைச் சிந்திக்க  வேண்டியிருக்கிறது. ‘குழந்தை, சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது’ (25) என்பது போன்ற ஒரு சில இடங்களில் மிகச் சிறப்பாக அமைந்துவிடுகிற இந்த நடை, எல்லா  இடங்களிலும் அதே அனுபவத்தைக் கொடுப்பதாக என்னால் கருத முடியவில்லை. அதனால்தான் இது போன்ற படைப்புகளை மேலே நான் சுட்டிய கவிஞர்கள் எழுதிய நாவலோடுதான் ஒப்பிட முடியும். எந்த நிலையிலும் ஜெயகாந்தன் முதலியோர் எழுதிய நாவல்களோடு அதாவது அந்த நடையோடு ஒப்பிட இயலாது.

தடுமாற்றமும்  நெருடல்களும்

படைப்பாளர், தொழிலால் தமிழாசிரியர். கொள்கையால் தனித்தமிழ் பேணுபவர். நாவல் படைக்க வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவர். நாவல்களின் வெற்றிக்குக் காட்சிச் சித்திரிப்பும் பாத்திரப் படைப்புகளுமே தலையாய காரணங்களாக ஆசிரியர் சொல்லுவது பழைய நெறி. மேற்கண்ட இருவகை உத்திகளாலும் நகரக்கூடிய கதைகள், வாசகர்களை ஈர்க்கும். ஆசிரியர் கூற்று  தவிர்க்கப்பட்டுப் பாத்திரங்களின் பேச்சே முதன்மை பெற வேண்டும். அந்தப் பேச்சு பாத்திரங்களின் இயல்புநிலை மாறாமல் அமைந்திருக்க வேண்டும்.  இது ஒரு குழப்பமான நிலை. பாத்திரங்களுக்காகப் படைப்பாளர் தம் உரிமையை இழக்க வேண்டிய  நிலை. தள்ளுவண்டிக்காரனைச் சங்கத்தமிழ் பேசச் சொல்வது செயற்கையின் உச்சம்! இம்முறையில் வெற்றி பெற்றவர் எண்ணிக்கை மிகக் குறைவே!

ஆய்வுக் கட்டுரையில் காட்ட வேண்டிய தனித்தமிழ் அணுகுமுறையைப் படைப்பிலக்கியத்தில் காட்ட முடியாது. காட்டினால் வெற்றி பெற இயலாது.  

நூலாசிரியர் பல இடங்களில் தனித்தமிழைக் கையாளுகிறார். தற்சமம், தற்பவத்தையும் கையாளுகிறார். ஆங்கிலத்தை அப்படியே கையாளுகிறார். ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துகளாலும் சொல்கிறார். நூலாசிரியருக்குத் தனித்தமிழ் பற்றிருக்கலாம் ஆனால் கணிப்பொறிப் பொறியாளர் கனிமொழிக்கும் இருக்க வேண்டியது கட்டாயமில்லை. கனிமொழி கணிப்பொறியாளர். கன்னலைப் போலத் தமிழாசிரியர் அல்லர். “கழுத்தில் நேற்று அணிந்திருந்த தொடரியை அணியவில்லையா?” (8) என்று செம்மலரை நோக்கிக் கேட்பது, செயற்கையான சித்திரிப்பு.  இப்படித் தனித்தமிழில்தான் எழுதுவேன் என்றால் நாவல் முழுமையும் அந்தப் பாங்குப் பின்பற்றப்பட்டுள்ளதா என்றால் அதுவுமில்லை (VIBRATOR).  ‘வைப்புரேட்டர்’ (13) பணியைச் செய்யவிடாமல், மழை பெய்துகொண்டிருந்தது என்று எழுதுகிறார். (SWEATER) ‘சொட்டரும்’ போர்வையும் அணிவித்தாள் என்று எழுதுகிறார். “சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஒரு கார் ஏசன்சியையும் (AGENCY) நடத்த ஏற்பாடு செய்தார்”  என எழுதுகிறார்.

மனிதன் குறையோடுதான் பிறக்கிறான். இலக்கிய கர்த்தா ஒரு மனிதன். எனவே அவனது படைப்புகளில் குறையே இல்லாதிருப்பது அரிது. ‘இன்மை அரிதே வெளிறு’ என்பார் திருவள்ளுவர்.

ஒரு  மராட்டியப் பெண், சிலப்பதிகாரக் காலத்திற்குச் சென்று அன்றைய சமுதாய நிலைப்பாட்டில் பெண் ஓர் ஏலப்பொருளாக இருந்ததைத் (61) தனது செயலுக்கு வலு சேர்ப்பதற்காகப் பேசுவது எரணத்திற்குப் (LOGIC) பொருந்துவதாக இருந்தாலும் செயற்கையாக இருப்பதோடு கதைக்குத் தேவையற்றதுமாகும். இதுபோன்ற கட்டமைப்புகளை நாவல் வடிவம் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் அதற்குப் பின்னாலே ‘புதுமைப்பித்தன்’ அதன் வேறு வடிவத்தைப் பொன்னகரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதனை ஆசிரியர் காட்டி, தன் கணவனுக்காக அம்மாளு அப்படிச் செய்தாள்’ என்கிறாள். மாதவியின் வாழ்க்கையையோ,  அவள் முச்சந்தியில் நிறுத்தப்பட்ட அக்காலச் சூழ்நிலையையோ எந்தவகையிலும் புதுமைப்பித்தனுக்கும் ஜெயகாந்தனுக்கும் கன்னலுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. ஒரு பக்கம், புராணம், இதிகாசம் என்பதையெல்லாம் ஆபாசக் குப்பைகள் என்னும் கருத்தியலை முன்னிறுத்துவது, மறுபக்கம் தங்கள் படைப்புகளில் வாழ்வியல் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பாத்திரங்களை அந்தப் புராண இதிகாசங்களோடு இணைத்துக் காட்டி விளக்கமளிப்பது. இவையெல்லாம் படைப்பில் சத்தியத்தை எதிர்நோக்கும் ஒரு சாதாரண படிப்பாளிக்குக் குழப்பத்தையே உண்டாக்கும்.

மேலும் ‘காமம் சான்ற கடைக்கோட் காலை’ என்னும் தொல்காப்பிய நூற்பாவின் இருப்பிடத்தைப் பேராசிரியப் பெருமக்களே இன்னும் தேடிக்கொண்டிருக்கிற நிலையில் கீர்த்தி பண்டிட் (93) அதனைச் சொல்லி விளக்குவது நம்புமாறு இல்லை.

அதுபோலவே “சிந்தை செல்லா சேண நெடுந்தொலைவு” என்னும் சிலப்பதிகாரத் தொடர்களைக் கீர்த்தி பணடிட் சொல்வதாக எழுதுவது பொருந்தாது (95). நான் கிடாரியைத் துரத்திக் கொண்டு போய் அதன் மேல் ஏறிக் கொண்டிருந்த எருமைக் கிடாவையே பார்த்துக் கொண்டிருந்தேன் (98)  என்பது தரங்கெட்ட சித்திரிப்பு. நிறைதமிழ் ஆய்ந்த படைப்பாளர், ஒருக்கனித்து (4) என எழுதுவது நெறியா? மேலும் ‘சிவப்புக் கையில்லா பனியன்’ என்று எழுதுவது சரியா?  கையில்லாத சிவப்பு பனியன் (6) என்று எழுதுவது சரியா? ‘கமுக்கமாக’ என்னும் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவது சலிப்பை உணடாக்குகிறது

நிறைவுரை

பாலியல் தொழிலைப் பகிரங்கமாக்குவதும் போலி அரசியல் மற்றும் சமுதாயவாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறிவதும் பெண்கள் குடிப்பதும் போதைக்கு அடிமையாவதும் ஒருத்தி அம்மணத்தை இன்னொருத்தி பார்க்க விழைவதும் மகன் பாழ்படுத்தியவளையே தந்தையும் அனுபவிக்க  எண்ணுவதும் அறம் தூங்குவதில்லை என்பதும் ஆண்பெண் சேர்க்கையைப் பார்த்துத் துறவிகள் (?) ரசிப்பதும் திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வதும் கொண்ட அப்பாலுறவை  ஏதோ சிற்றுண்டியை உண்பதுபோல எண்ணிக் கடந்துபோவதும் எள்ளின் முனையளவும் மிகையானவை அல்ல. எல்லா இடத்திலும் நடப்பதல்ல என்பர் சிலர். எங்காவது நடந்துகொண்டுதான் இருக்கிறது வெளிச்சம் போட்டுக் காட்டுவது படைப்பாளர் நோக்கமல்ல. யதார்த்தத்தை விட்டு விலகினால் இலக்கியம் சிறக்காது! இவற்றை யதார்த்தம் இல்லையென்றால் ஆயிசா வீட்டில் ஆண்டாள் உண்டது யதார்த்தம் இல்லையென்றாகிவிடும். சீரழிந்த கீர்த்தியும் இளமாறனும் மணப்பது செயற்கையாகிவிடும். ஆசாரம் பார்க்கும் அய்யங்கார்,  இசுரத் அலியால் அடைக்கலம் பெற்றிருக்க இயலாது. படைப்பு என்பது கற்பனையில், நடப்பியலில் எங்கோ தோன்றுவதுதான், நடப்பதுதான். அதனைப் புனைவால் பொருளாக்கித் தருவதுதான் படைப்பிலக்கியம். அதில் கன்னல் பெற்றிருக்கும் வெற்றி பிரம்மாண்டமாக இல்லாதிருக்கலாம். ஆனால் வெற்றி பெற்றிருக்கிறார்.

===========================================

பின்குறிப்பு ‘கன்னல்’ (நூலாசிரியர்)  ஓர் சுருக்க அறிமுகம்

முறையாகத் தமிழ் பயின்று முனைவர்ப் பட்டம் பெற்றவர். 35 ஆண்டுக்காலம் பள்ளிக் கல்வி மற்றும் மேநிலைக்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகளையும் பேரனையும் மருத்துவர்களாகக் காணும் பேறு பெற்றவர். பழகுதற்கு மட்டும் இனியவராகும் பாசாங்குப் பேர்வழி அல்லர். பண்பாலும் உயர்ந்தவர். கருவூரை அடுத்த காணியாளம்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர்.  செந்தமிழில் உள்ளம் தோய்ந்தவர். அவ்வூரில் செயல்படுத்தப்படும் அரசின் எந்தத் திட்டங்கள் ஆனாலும் தன் சொத்துகளின் மீது தனக்கிருந்த சொந்தங்களை முறித்துக்கொண்டு வாரி வழங்கும் வள்ளல்.  படைப்பாளர்களுக்கு மொழிதான் சேவை செய்யும். இவருக்கு வைரமுத்து அவர்களைப் போல வடிவங்களும் ஏவல் கேட்கும்.

‘இரவு நதிக்கரை ஓரம்’,’ ‘இரு வேறு உலகம்’, ‘வேடிக்கை மனிதர்கள்’, ‘ஓர் ஊரின் கதை’, ‘காணாமல் போன கவிதை’, ‘மழை’ என்பன அவருடைய நாவல்களில். சில. ‘பாரதிதாசன் பாடல்களில் பழந்தமிழ் இலக்கியச் செல்வாக்கு’, ‘திருக்குறளில் அன்பு நட்பு காதல் ஓர் அறிமுகம்’ – ‘தமிழினத்தின் தொன்மையும் தமிழ் மொழியின் தொன்மையும்’ ‘கவிதை ஓர் அறிமுகம்’ ‘வள்ளுவர் வழங்கும் வெற்றிக்குச் சில வழிகள்’ ‘வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்’  என்னும் சில ஆய்வுநூல்களின் ஆசிரியர். ‘முல்லை’, ‘புயலைத் தாக்கும் பூக்கள்’, ‘நிலாப் பறவைகள்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை மரபிழைகளால் பின்னியவர்.

இவர் கவிதை மாதிரி எழுதிக்கொண்டு கவிஞர் எனச் சொல்லிக்கொணடவர் அல்லர். கவிஞராய்ப் பிறந்ததால் கவிதை எழுதியவர். இவருடைய படைப்புகளோடு நான் கொண்ட உறவினைவிட இவரோடு கொண்ட நெருக்கம் மிக மிகக் குறைவு. அதனால் சண்டை சச்சரவு என்று ஏதுமில்லை. பெற வேண்டிய பெருமையைப் பெறாது ‘மலையகத்து நெல்லியாக’ மறைந்திருக்கும் இத்தகைய மாபெரும் படைப்பாளர்களின் சிந்தனைகளை அறிமுகம் செய்யும் ஒரே குறிக்கோளோடு எழுதப்பட்ட மதிப்பீடு இது! நூலாசிரியர் எனக்குத் தெரிந்தவர்தான். ஆனால் இந்த மதிப்பீடு நட்புக்கு அப்பாற்பட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *