அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 282

  1. மூன்றெழுத்து வாழ்த்து

    ‘அணில்’ என்னும்
    மூன்றெழுத்துப் பெயர் கொண்ட
    பிராணியே !

    ‘ராமன்’ எனும்
    மூன்றெழுத்து புராண நாயகனுக்கு
    ‘உதவி’ என்ற
    மூன்றெழுத்தைச் செய்ததால்
    ‘முதுகு’ என்ற
    மூன்றெழுத்து உடலுறிப்பி‌ல் பொறித்த
    மூன்றுகோடுகளால்
    ‘புகழ்’ என்னும்
    மூன்றெழுத்தை அடைந்தாய்,
    புராண காலத்தில்!

    ‘சேமியா’ என்ற
    மூன்றெழுத்து உணவுப்பொருளிலும்
    பிரபலமடைந்தாய்
    கலியுகத்திலும்!

    ‘வாழ்க’ என்னும்
    மூன்றெழுத்துச் சொல்லால்
    வாழ்த்துகிறேன்
    உன்னை இன்று!

    கோ சிவகுமார்
    மண்ணிவாக்கம்

  2. அணிலே வா…

    அண்ணல் ராமன் கைபட்ட
    அணிலது கடித்தால் கனிசுவைக்கும்
    எண்ணம் நமக்கே இருப்பதாலே
    எல்லா அணிலையும் விரும்புகிறோம்,
    உண்ண ஒன்றும் கிடைக்காமல்
    ஓலையில் இருக்கும் அணிலேவுன்
    கண்ணது கலங்க விடமாட்டேன்
    கனியும் பாலும் தருவேனே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. ராமர் போட்ட மூன்று கோடு உங்கள் இனத்திற்கு
    நாளுமது சேதி சொல்லும் எங்கள் மனத்திற்கு
    சேதுப்பாலம் கட்ட வந்த அழகு மனங்களே
    ராமகாதை சரித்திரத்து முக்கிய இனங்களே

    இங்குமங்கும் தாவித் தாவி ஓடித் திரியவே
    இறைவன் உங்களையே படைத்து மகிழ்ந்திட்டானே
    பழங்களையும் காய்களையும் தின்னும் அழகிலே
    பார்த்து பார்த்து மகிழ்ந்திட நாங்கள் இருக்கிறோம்

    சுதா மாதவன்

  4. தேவைகள்

    ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும்
    அமைதியாய் இருக்கும் திடம் வேண்டும்
    வாட்டம் கொடுக்கும் துயரம் வருகையில்
    தெளிவோடு சிந்திக்கும் திறன் வேண்டும்

    கூட்டம் கூடிக் களிக்கும் போதும்
    சுயத்தை மறக்காத அறிவு வேண்டும்
    காட்டுத்தீ போல் தகிக்கும் வேளையில்
    கனிவும் இனிமையும் தர வேண்டும்

    கூச்சல் குழப்பம் பொய்மைகள் நடுவே
    உண்மையை அறியும் அறிவு வேண்டும்
    வீண் படாடோப ஆடம்பரம் நடுவே
    தன்நிலை உணரும் மெய்ஞானம் வேண்டும்

    கட்டுகளின்றிக் களிக்கும் போதும்
    கண்ணியம் இழக்காத தெளிவு வேண்டும்
    தனிமையில் தனித்து ஒதுக்கும் போதும்
    சமூகம் உய்விக்கும் எண்ணம் வேண்டும்

  5. எதைப் பார்க்கிறாய்?
    என்ன கேட்கிறாய்?
    உன்னைச் சுற்றிய
    உலகின் ஓட்டத்தை
    உற்று நோக்கியே
    உன்னுள் நகைப்பா?

    கிடைத்ததை உண்டு
    காலத்தை வென்று
    வாழ்வினை முடிக்கும்
    வாடிக்கை உனக்கு
    சந்ததி வளர்க்கும்
    சங்கதி அறிவாய்

    எடுத்தவை அனைத்தையும்
    எடுத்ததும் முடித்திடாமல்
    பின்னொரு வேளைக்காய்
    முன்னரே சேர்த்திடுவாய்

    முதுகினில் வரிகளையும்
    மூளையில் அறிவையும்
    துணையாய்க் கொண்டே
    துணிவுடன் தாவிடுவாய்

    உருண்டிடும் உலகினில்
    உன்னையும் என்னையும்
    உழன்றிட வைத்திட்டவன்
    உண்மையில் வித்தகனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.