வாலிக்குச் சமர்ப்பணம்
ஆ. கிஷோர்குமார்
வாலி
தமிழ்ப் பயிரை வாடாமல் காத்த வேலி…
இவன் எழுத்துகள் தமிழ்க் கரும்பைச் சுவைப்பவர்களுக்குக் கூலி…
திரையுலகு சூடிக்கொண்ட மாலி
இலக்கிய மேதாவிலாசத்தின் சீலி..
திருவரங்கத்தின் வித்து..
திரையுலகத்தின் சொத்து…
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்கும்
எனும் வரிகளால் தமிழினைத் தேர் வைத்துத் தோளில் சுமந்தவன்..
காசுக்கு எழுதியபோதும் விருது கண்டவன்..
தேசுக்கு எழுதியபோதும் விருது கண்டவன்..
இவன் காதல் எழுத்துகள், படிப்பவரைப் புணர தூண்டின..
பக்தி இலக்கியமோ, படைத்தவனை உணரத் தூண்டின…
இருவிரல் இடுக்கில் பேனா கொண்டு
இளமைத் தமிழை பிரசவித்தவன்…
இந்த வாலிபக் கவிஞனுக்கு வயதான போதும்
இவன் நெற்றியும் சுருங்கவில்லை
வெற்றியும் சுருங்கவில்லை..
எவனோ ஒருவன் எதிர்க்கேள்வி கேட்டானாம்
வாலி என்ற பெயரிருக்க வால் எங்கே? என.
கணத்தில் உரைத்தான் கவிஞனிவன்..
வாலின்றி வாலியாக முடியாதா?
காலின்றிக் கடிகாரம் ஓடாதா! என…
எதிர்ப்பட்ட எதிர்ப்புகளை
எதுகை மோனையால் தகர்த்தவன்…
அசையும் சீரும் இவன் எழுத்துகளின்
அசையாச் சொத்துகள்..
புவனம் இருக்கும் வரை இவன்
புகழ் இருக்கும்..
வாலி! வாழி…..!
வணக்கம்! வாலி பாராட்டுக்குரியவரே! மேற்கண்ட கவிதையில் எழுதியவரின் விருப்பம் வெளிப்படுகிறது. வறுமையில் இடர்ப்பட்டதால் அவருக்குப் பொருள் தேவைபட்டது. அவர் காசுக்காகத்தான் எழுதினார் என்பதை அவருடைய கறாரான கொடுக்கல் வாங்கல் பற்றிய பதிவுகளே சான்று. அது தவறு ஒன்றுமில்லை. இரண்டு நிகழ்வுகள் இந்தக் கவிதையில் இடம் பெற்றிருந்தால் கவிதை நிலைபெற்றிருக்கும். 1. ஒரு வைணவர் இறுதிவரை திருமண் பூசாமல் திருநீற்றைப் பூசிக் கொண்ட வரலாறு. 2. மதம் பிடித்துக் காஞ்சி யானை ஓட, அது மதம் பிடிக்காமல்தான் ஓடியது என் வரலாற்றுச் சிலேடை பாடி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையே அசர வைத்தது! மற்றபடி ‘காலில்லாமல் கடிகாரம் ஓடாதா?’ என்பது ‘நீரூற்றாமல் நகம் வளராதா?’ என்னும் சுரதா வரிகளின் அப்பட்டமான நகல்! வாலி பாராட்டுக்குரியவரே! நன்றி!