ஏறன் சிவா 

சோலைதரும் எழிலென்றும் அங்கே தோன்றித்
துள்ளிவந்து குளுமைதரும் தென்றல் என்றும்
ஆலைதரும் அடிக்கரும்புச் சாறே என்றும்
அமுதென்றும் அறமென்றும் நல்லன் பென்றும்
பாலைதரும் கள்ளென்றும் பறவை பேசும்
பனியொத்த ஒலியென்றும் இசைப்பாட் டென்றும்
கோலமிகு மொழியென்றும் தமிழைக் கொஞ்சிக்
குலைத்ததெல்லாம் போதுமினித் தீயே என்போம்!

கனியென்றும் சுளையென்றும் அதிலெ டுத்த
களிப்பூட்டும் கனிச்சாறே என்றும் நல்ல
அணியென்றும் அணிதந்த அழகே என்றும்
அரும்பென்றும் மலரென்றும் அதன்தேன் என்றும்
பனியென்றும் பனிபோன்ற குளுமை என்றும்
பஞ்சென்றும் பஞ்சொத்த மென்மை என்றும்
இனியென்றும் தமிழ்த்தாயை இவ்வா றெல்லாம்
இயம்பாதீர் தீயென்றும் இயம்பு வீரே!

இறைமுகத்தை எல்லோரும் அறிவார்! உன்றன்
எழில்முகத்தை எல்லோரும் அறிவார்! தூய
அறமுகத்தை அகமுகத்தை அறிவார்! நல்ல
அன்பொத்தத் தாய்முகத்தை அறிவார்! உன்றன்
கறையில்லா கனிமுகத்தைக் கண்ட போதும்
கடுகளவும் காணவில்லை பகைவர் உன்றன்
புறமுகமாய்ப் பொங்கியெழும் தீ முகத்தை
புறப்படுவாய் அம்முகமும் காட்டு வாயே!

மென்காற்றும் ஒருநாளில் புயலாய் மாறும்
மேல்வானும் சினம்வந்தால் இடியாய்ச் சீறும்
அன்பினையே தந்தவளாய் இருந்தாய் போதும்
அடங்காத சினத்தீயை இங்கே காட்டி
முன்னைக்கும் முன்பிருந்த வளமை யோடு
முடிதாழா முடிசூடும் நிலைய டைந்து
தென்மொழியே பெருந்தீயாய்ப் பரவ வேண்டும்
தமிழென்றால் தீயென்றும் காட்டல் வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *