Tag: சேஷாத்திரி பாஸ்கர்

  • காட் ப்ளஸ் யூ

    காட் ப்ளஸ் யூ

    -சேஷாத்ரி பாஸ்கர்.

    சார். மன்னிக்கணும் ஒரு முப்பது ரூபாய் கொடுக்க முடியுமா ?

    யார் நீங்க , உங்களை எனக்கு தெரியாதே?

    எனக்கும் உங்களை தெரியாது , நான் தாம்பரம் போகணும் .எனக்கு ஒர்த்தர் மூவாயிரம் ருபாய் தரனும் பஸ்ல போக காசில்லை .இந்த பக்கம் நீங்க திரும்ப வரும்போது நான் பார்த்து கொடுத்துடறேன் .

    சார் உங்க வயசுக்கு நான் வச்சிண்டு இல்லன்னு சொல்றது தப்பு . இந்த அம்பது ரூபாயை வச்சுக்குங்க

    எதுக்கு சார் .நான் பாபா கோவில்ல சாப்டாச்சு . முப்பது போதும்

    இல்லை சார் .உங்களுக்குத் தர வேண்டியவர் இல்லேன்னா உங்களுக்கு பஸ்ல வர காசு .வேண்டாமா ?

    ஏன் சார் இப்படி அபசகுனமாய் சொல்றீங்க என் பணம் . என் உழைப்பு .எனக்கு உங்க பணம் வேணாம் –

    அய்யா , நான் நல்ல எண்ணத்துல சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க இந்தாங்க .

    கொஞ்சம் வேகமாக வாங்கி கொண்டு காட் ப்ளஸ் யு என்றார்

    சிரித்தேன் .

    என்ன சார் .

    இல்லை சொல்லுங்க .

    உங்களை அந்த காட் ப்ளஸ் பண்ணலையே என்றேன்

    கொஞ்சம் முறைத்து விட்டு என் பஸ் வருகிறது என்று புறப்பட்டார்.

    உள்ளே அமர்ந்து என்னை பார்த்து விட்டு அம்பது ரூபாய் நோட்டோடு கையாட்டினார் .

    நான் கை கூப்பினேன்

    மாலை என் மகன் என்னிடம் வந்து ஒரு குட் நியூஸ் என்றான்

    என்ன என கேட்டேன் .

    இல்லை . நீ எப்ப பார்த்தாலும் தானம் பண்ணு , தர்மம் பண்ணுன்னு சொல்வ இல்ல

    ஆமாம் . அதுக்கென்ன இப்ப ?

    இல்லை . இன்னிக்கு ஒருத்தர் குளத்து கிட்ட என்கிட்டே பத்து ரூபாய் கேட்டார் . பாவமா இருந்தது பா .

    என்ன சொன்ன .

    என்கிட்டே இருபது ரூபாய் இருந்தது .அப்பிடியே கொடுத்துட்டேன் .

    குட் .

    என்னப்பா என்னை பாராட்டுவேன்னு நினச்சேன் .

    அவர் உன்கிட்ட பணம் வாங்கிண்டு காட் ப்ளஸ் யூன்னு சொன்னாரா ?

    காட் . கரெக்ட் . எப்படிப்பா உனக்கு தெரியும் .

    கொஞ்சம் கெஸ் பண்ணேன் .

    அவருக்கு தரக்கூடாதாபா .

    இல்லை.அடுத்த வாட்டி பார்த்தா அவர் கேட்காவிட்டாலும் கொடு என்றேன் .

    Share
  • பெரிய மரம்

    பாஸ்கர்

     

    எவ்வளவு பெரிய மரம்அது ?

    கோடாலி கொண்டு வெட்டவே வாரம் ரெண்டாகும்

    கனிகள் பொறுக்க கால் நோவும்

    சருகு இலையை எரித்தால் பகல் இருட்டாகும்

    கிளைகள் தூக்க யானை கூலி கேட்கும்

    கூழ் செய்தால் காகிதம் சரியாய் மூன்று டன்

    கூடு கட்டிய பறவைகளுக்கு பதில் சொல்ல வேண்டாம்

    காற்று ஏன் இல்லையென கோபித்து கொள்ளலாம்

    நிழல் வேண்டுவோர் வெளியே வராதீர்.

    மரம் என்ன திட்டவா செய்யும்?

    இல்லை கை நீட்டி காயம் செய்யுமா?

    தினம் ஒரு மரம் வெட்டுவோம்

    வெட்டிய பின் ஓய்வெடுக்க எந்த மரம் செல்வது ?

    Share
  • மரம்

    பாஸ்கர்

     

    ஓய்வான ஓர் நாளில் நெடிதாய் ஒரு மரம் செய்தேன் .

    சாய்வாக அதை நோக்கி வண்ணங்கள் அப்பி வைத்தேன்

    திடமான அதன் உடலில் அரை கருப்பாய் ஓர் நிறம்

    இடையிடயே வளைகோட்டில் குறை வெள்ளை ஓர் வண்ணம்

    உயிர்ப்போடு நிற்பதுவாய் எண்திசையும் கிளை மரங்கள் .

    பச்சை வண்ண இலைகளுக்கு உடல் மேலே நீர்த்திவலை .

    அதன் ரேகை சென்ற இடமெல்லாம் இயல்போடே ஒர்வண்ணம்

    சுற்றியுள்ள நிலம் மீது செம்மண்ணாய் ஓர் நிறம்

    தொங்குவதை பறிப்பதாய் அழகு கொஞ்சும் பல கனிகள் .

    இலைகளுக்கு தோதுவாய் அதே நிறத்தில் பல பறவை

    அதன் ஆசை குஞ்சுக்கு பல இடத்தில பல கூடு .

    வில்லாய் கதிர் பாய இலை இடையே வெளிச்ச கோடு

    உயிர்ப்போடு தான் நிற்கும் அழகான மரம் இதுவே

    ஆனாலும் ஓர் குறை மரம் அளவில் மனதினுள்ளே -அதன்

    உடல் அசைக்க யாது செய்வேன் தூரிகைக்கா வலி தெரியும்

    Share
  • அவர் விஸ்வநாதம்

    msvபத்து வருஷங்களுக்கு முன்பு நான் மந்தவெளி பக்கம் வசித்து வந்தேன். காலை கொஞ்சம் சாந்தோம் பக்கம் நடை பயிற்சி செல்வேன். அப்போது என் கால்களில் பாதிப்பு இல்லை. உடன் என் மனைவி வருவாள். எம் எஸ் வீ . வீட்டு பக்கம் ( அது பழைய வீடு ) வரும்போது அவரை பார்ப்பேன். பொதுவாக எந்த பிரபலத்தையும் தொந்தரவு செய்ய பிடிக்காது. ஆனால் அன்று அவர் பால்கனியில் லுங்கியில் உலாவி கொண்டிருந்தார். கீழே நாங்கள் பார்த்து வரவா என வினவினோம். அவருக்கே உரிய தோரணையில் வாங்கோ என்றார். மேலே சென்று அவரை கை குவித்து வணங்கி அமர்ந்து சிறிது நேரம் பேசினேன்.

    எவ்வளவு பெரிய இசை மேதை ? கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் என்ன இயல்பாய் இருந்தார் … இந்த பண்பு படித்து வருவது அல்ல. உள்ளம் அப்படி. பிறிதொரு சமயம் சந்தூர் விஸ்வேஸ்வரன் மறைந்த போது அவர் கீழ் அமர்ந்து பேசும்போது அவர் என்னை தரையில் அமர விடாமல் இருக்கையில் உட்கார சொன்னார். என்னை பொறுத்த வரை எனக்கு எப்படி நடிகர் திலகமோ அப்படியே விசுவும். அவர் இசையில் நான் மயங்காத நாள் உண்டா ? எத்தனை பாடல்கள், எவ்வளவு நுணுக்கங்கள்…சந்தோஷமான சூழலா அங்கே விசு… வயிற்றை பிசையும் துக்கமா ..விசு அங்கே .

    சென்ற வாரம் அவர் மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவரை பார்க்க வேண்டும் என சொன்னேன். ரெண்டு நாளில் சொல்வதாச் சொன்னார். பின்னர் அவரே அழைத்து நன்கு தேறி வருவதை தெரிவித்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இரவு கிளம்பி சென்றேன். மலர் அடையாரில் இருந்தார். சில பழைய நண்பர்கள் அங்கிருக்க விசுவின் குடும்பத்தினர் அங்கு குழுமி இருந்தனர். ICU வில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் இருந்து பேசி விட்டுப் புறப்பட்டேன்.

    அவர் மகள் பேசும் போது சொன்னார்கள். சிகிச்சை செய்ய வந்த நர்சை பார்த்து உன்னை நான் சந்தித்தேன் …நீ ஆயிரத்தில் ஒருத்தி என்று … கைகள் படபடக்க அவர் படுத்த படுக்கையிலே தாளம் போட்டபடி இருந்தாராம். இரண்டு நாள் முன்பு இளையாராஜா வந்து அவர் கால்களை பிடித்து விட்டதையும் , வித்யாசாகர் பாடினதையும் நினவு கூர்ந்தார்கள். பாலு வந்தவுடன் அவர் நெகிழ்ந்து பேசினாராம். இன்று காலை என் மகன் செய்தி சொன்னனான். அப்பா , எம் எஸ் வீ இஸ் நோ மோர் என்றான்–எனக்கு ஓர் ஆசை இருந்தது.என் மகன் அவர் முன் பாடவேண்டும் என்று. அது நிறைவேறவில்லை.

    வாழ்க்கையில் சில விஷயம் முடியாமற் போவதின் பின் ஓர் உண்மை உண்டு. நான் வீட்டில் கவலையாய் இருக்கும் தருணத்தில் என் மகன் இணையத்தில் இருந்து நாலு பாடல்களை போட்டு காட்டி ராகம் பேசுவான் .எனக்கு நிறைவாய் இருக்கும். எனக்கு பிடித்த விசுவை என் மகனே சிலாகிக்கும் போது போது எவ்வளவு நிறைவு ——அவர் விஸ்வநாதம் .

    Baskar Seshadri
    chennai

    Share