தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 5

4

இன்னம்பூரான்

சேம் சைட் கோல்!

Innamburanஇன்று ‘அநாமதேயம்’ (அதாவது) ‘மூளையின் மர்மங்கள்’ என்ற தலைப்பில், டேவிட் ஈகிள்மேன் எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது. அவர் தடாலடியாக ஒரு கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடிந்தால், பின்னவரை அவரது தவறான செயலுக்குத் தண்டிப்பது நியாயமா? இது விஞ்ஞான ரீதியாகச் சில சோதனைகளின் பயனாக எழுந்த கேள்வி. அதன் பக்க விளைவாக, ஒரு உபத்திரவம்.

பல துறைகளில், அன்றாட அலுவல்கள், நிர்வாகம், மானேஜ்மெண்ட், தணிக்கை, காவல் துறை, ஆமாம், தேர்தல் நடத்துவது ஆகிய ‘வேலி காத்தான்‘ பணிகளில் இருப்பவர்களை ‘பயிரை’ மேய ஏவ முடியும் என்றால், சிக்கல்களும் முடிச்சுகளும் இறுகுமே தவிர, தீர்வு காண்பது அரிது. எனினும், வேலிகளை அடர்த்தியாக இறுக்கி, அன்றாடம் உறுதியாக இருக்கும்படி அவற்றைப் பராமரிக்க வேண்டும்; அது முடியும். தணிக்கைத் துறைக்கு, அந்த நிலைப்பாடு இன்றியமையாதது என்பதில் ஐயமே இல்லை. சில கசப்பான / மனத்துக்குகந்த அனுபவங்களையும் / ஒரு இலக்கிய வரவையும் எடுத்துக் கூறினால், தவறில்லை. அவை படிப்பினையே.

ஒரு நாள் அப்பா அலுத்துக்கொண்டிருந்தார், வழக்கத்துக்கு மாறாக. ஊட்டியில் வேலை. வேனில் காலத்தில் அரசே அங்கு முகாம். இதெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால். நாணயத்திற்குப் பெயர் போன அதிகாரி ஒருவர் அவர் வாயில் புறப்பட்டு வர, விசாரித்தேன். ‘அவர் நல்லவர் தான். சுத்துப் படைகளுக்குத் தீனி போட்டுக் கட்டுபடியாகவில்லையே’ என்று அங்கலாய்த்துக்கொண்டார். நான் வேலைக்கு வந்த புதிது. ‘நீ ஜாக்கிரதையாக இரு’ என்றார். முதல் ஆடிட் பாடம், தந்தை சொல் மந்திரம் என்க.

நாற்பது வருடங்களுக்கு பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நாள் சார் பதிவாளர் அலுவலகம் போக வேண்டியிருந்தது. என் தலைவிதியை நொந்துகொண்டே, தயங்கி, தயங்கி, பல தடவை ஒத்திப் போட்ட பிறகு, வேறு வழியில்லாமல் போனேன். ஏனெனில், அங்கு தரகர்கள் நெருக்க, அலுவலர்கள் ஒதுங்க, காசு புரள, லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடும். ஆனால், பாருங்கள். என் காரியம் சுளுவில் முடிந்தது, காசு, பணம் கொடுக்காமல். இனி ஒரு உரையாடல்:

ஒருவர்: சார் வாங்கோ. பையன் இங்கிலாந்துக்கு போய்ட்டானாமே. நடேசா! சாருக்கு நல்ல நாற்காலி போடப்பா. இது ஆடறது. அப்படியே போய் அவருக்கு கோக்கோ கோலா வாங்கிண்டு வா. எதற்கும் ஒரு லிம்காவும்… இன்னைக்கு லேட்டாத்தான் எனக்கு லன்ச். காலை டிஃபன் ஹெவியோல்லியோ! ஹி! ஹி!

auditநான் (தயங்கி, தயங்கி): யார் என்று தெரியவில்லையே. நான் இது எல்லாம் குடிப்பதில்லை…டயபெட்டீஸ்! (நிர்தாக்ஷிண்யமாக சொல்ல வேண்டியது தானே, ராஜூ! ஏன் நொண்டி சாக்கு? => இது உள் மனது.)

அவர் (சபையோரை விளித்து): சார் வைத்தியை மறந்துட்டார்! அவருடன் ஆஸ்பத்திரி ஆடிட் போயிருக்கேன் -1972இல். டாக்டரெல்லாரையும் குடஞ்சு எடுத்துட்டார். சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். வேலையும் நெட்டி வாங்கிடுவார். ஹி! ஹி!. கோலாவா? லிம்காவா?

இரண்டும் வந்துடுத்து. கட கட வென, காணாது கண்ட பட்டிக்காட்டான் மாதிரி, கோக்கோ கோலாவை ‘ஜுர்ர்’ என்று உறிஞ்சுகிறார்! (அச்சமில்லை! அச்சமில்லை! ஓய்வு பெற்ற அதிகாரியிடம் அச்சமில்லை! அச்சமில்லையே!) எனக்கு அவரைச் சுத்தமாக ஞாபகம் இல்லை. மனசுக்குள்ளே ஒரு அல்ப சந்தோஷம் => இந்த ஆடிட்காரன் சார்பதிவாளரை இந்த உறிஞ்சு உறிஞ்சுகிறானே என்று. ஆனால் கருவேல முள் தைத்த மாதிரி ஒரு வலி. => டிபார்ட்மெண்ட் பேரைக் கெடுக்கிறானே. சேம் ஸைட் கோல் போட்றானே என்று.

ஈகிள்மேன் சொல்ற மாதிரி, நற்குணத்தைக் குலைப்பது எளிது. களையெடுக்கச் சுணங்கினால், நாற்று அழியும். மேலதிகாரி இன்ஸ்பெக்சன் என்று வந்தாலே, அவரைத் தன்னைக் கட்டுவதில் புத்தி செல்வது மனித இயல்பு. தணிக்கையாளன் இன்னும் மோசம். மேலதிகாரியையும் கவிழ்த்து விடுவான். அவனுடைய வீக் பாய்ண்ட்டைப் பிடித்தால், அவனை வயப்படுத்தி விடலாம். இப்படி குறுக்குப் புத்தி செல்வதால், எந்த இன்ஸ்பெக்சன் வந்தாலும், சந்தா வசூலித்தாவது செலவு செய்வார்கள் என்று மறைமுகமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கேட்டால், மறுத்து விடுவார்கள். இக்காலத்தைப் பற்றி யான் அறியேன். ஏனெனில், நான், ஒரு ஆஃபிஸை விட்டு வந்த பிறகு, அங்கு போவதே இல்லை. அது என் மரபு.

aigஎன் முதல் இன்ஸ்பெக்சன், ஆண்டிப்பட்டி பிளாக் டெவலெப்மெண்ட் ஆஃபீஸ். 1958? மதுரை ஜங்க்ஷனில் என்னை ஆட்கொண்டார்கள், ஒரு குழு. அங்கே டேராப் போட்ட ஆடிட் சிப்பந்திகள் சூழ, வலம் வந்த பீ.டீ.ஓ. என்னை வைகை அணைக்கட்டு அதிதி இல்லத்தில் அமர்த்தினார். ஒரு சுற்று காஃபி, டிஃபன், தடபுடலாக. அருமையான நீர் நிலைக்காட்சி. இரவில் மின்சார ஒளி மயம். தனித்து விடப்பட்டேன். ஒரு முழு நாள் வேலை ஒன்றும் வரவில்லை. அப்பப்போ திண்டி. மறுநாள் காலை, இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா, இடியாப்பம் எல்லாம் வந்தன, ஒரு படையுடன். நான் ஏதோ ருசி பார்த்ததுடன் சரி. வந்த படை தின்பண்டங்களை ஒரு தாக்கு தாக்கியது. எனக்கோ ஒரே கோபம். டிஃபன் கொண்டு வந்த ஜீப்பிலேயே, சிப்பந்திகளின் கோரிக்கைகளை உதறிவிட்டு, ஆஃபீஸ் போனால், எல்லாருக்கும் ஒரே கடுப்பு, ‘இள வயது. ஆஃபீஸர் மாதிரி கெத்தா இருக்கத் தெரியவில்லை’ என்று. என் சிப்பந்திகளே நெளிந்தார்கள்.

ஒரு பாடாக, வேலை தொடங்கியது. நான் ஆண்டிப்பட்டிக்கு ஜாகை மாறுவதாகச் சொல்லிவிட்டேன். அது ஒரு பிரச்சினை. பீ.டீ.ஓ. வந்தார். வயதானவர். நல்ல மாதிரி. எடுத்துக் கூறினார்: இருப்பது ஒரு சிறிய விருந்தினர் இல்லம். அங்கு ஆடிட் பார்ட்டி முகாம். நீங்கள் வரலாமோ?

பணிந்தேன். காம்ப்ரமைஸ்=>1. எனக்குக் கொடுக்கும் படியில் என்னால் இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா, இடியாப்பம் எல்லாம் கட்டுப்படியாகாது. நான் கேட்டது மட்டும் கொடுத்தால் போதும். பீ.டீ.ஓ. ஐயாவின் அனுபவம் பேசியது, ‘கவலையற்க. பில் அப்படி கொடுத்தாப் போச்சு.’ நான் சம்மதிக்கவில்லை. நோ காம்ப்ரமைஸ்=>1.

அடுத்த ரவுண்ட். அரசு சம்பந்தமாக பழகியதால், மதுரை கலெக்டர் நண்பர். ஒரு நாள் அவருடைய அழைப்பில் அவர் வீட்டில் டின்னர். எனக்கென்னெமோ தோன்றியது, ஆண்டிப்பட்டி பம்பரமாகச் சுழன்றது என்று. அத்தனை பரபரப்பு. என் மேல் மதிப்பு. ‘கிர்ரென’ பிரமாதமாக ஏறியது. ஒரு நன்மையும் விளைந்தது. கலெக்டர் சொல்லிவிட்டார், ‘இவர் மூளையை நீவிர் ஏவ வேண்டாம்’ என்று. நோ சிக்கல், நோ முடிச்சு. இட்லி மட்டும், காலையில்!

பல அனுபவங்களைச் சொல்லலாம். பல படிப்பினைகளை முன் வைக்கலாம். பொதுவாகச் சில விஷயங்களைச் சொல்லி விட்டு, இப்போதைக்கு விடை பெறுகிறேன். பல துறைகளில் ‘வேலி காத்தான்’ போன்ற பணிகளில் இருப்பவர்களைப் ‘பயிரை’ மேய ஏவுவது எளிது. தணிக்கைத் துறையில் நல்ல மரபுகள் உண்டு. எழுதும் காகிதம், பேனா, பென்சில் எல்லாம் கொடுப்பார்கள். எடுத்துச் செல்லவேண்டும். தணிக்கை செய்யும் இடத்தில்  யாசகம் செய்யக் கூடாது. சோத்துக் கடை நன்றிக் கடனில் மாட்டிக்கொள்ளக் கூடாது. மற்றவர்களுடன் அளவோடு பழகவேண்டும். எதற்கும் முன்னெச்சரிக்கை நலம். தாட்சண்யம், நற்பெயர் நாசம்.

i love auditorsஏவுபவர்கள் முதலில் நம்மை எடை போடுவார்கள். ‘கோயிலுக்குப் போவானா?’ பரிவட்டம் கட்டி, மாலைகள் அணிவித்து, மேளம் கொட்டி, தடபுடல் செய்து விடுவார்கள். எனக்கு அன்னவரம் சத்யநாராயணா கோயிலில் நடந்தது. தடுக்க முடியவில்லை. ‘சினிமா ஆசையா?’ தினம் இரண்டு ஷோ. நாலு பேர் துணைக்கு! எனக்கு இல்லை. தப்பித்தேன். சுற்றுலாப் பிரியனா? தலை சுத்தற வரைக்கும் அழைத்துச் செல்வார்கள். நான் சுற்றுலாப் பிரியன். ஒத்துக்கொள்கிறேன். அதுவும் கானகப் பிரியன். இந்தியாவின் எல்லாக் காடுகளிலும் சுற்றியிருக்கிறேன், ஏவுகணைகளின் தொந்தரவு இல்லாமல். முதல் படி: எல்லாத் துறைகளிலும் எனக்கு பிரதியுபகாரம் தேடாத நண்பர்கள் உண்டு.

தணிக்கை செய்யப் போகும் அலுவலகத்தின் உதவி நாடாமல், வனத் துறையில் ஒரு கெளரவப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு, நண்பர்களின் உதவியோடு, நான் கானகங்களில் சுற்றியிருக்கிறேன்.

முதல் விதி: செலவுகளை, கட்டணங்களை நேரடியாகக் கட்டுவது.

இரண்டாவது: ஒளிவு, மறைவு இல்லாமல் செயல்படுவது.

மூன்றாவது: விட்டுப் போன செலவுகள் என்ன என்று கேட்டு, கட்டுவது.

உதாரணத்திற்குச் சொல்கிறேன். இரண்டு மாதம் லீவு போட்டு, குடும்பத்துடன், வடகிழக்கு மாநிலங்களில் பயணித்தோம், மும்பையிலிருந்து. ரயில்வே: வண்டிச் சத்தமில்லை. பிற்காலம் ரயில்வே போர்ட் சேர்மன் பதவியேற்ற எம். என். பிரசாத் அவர்கள் வரவேற்று, காரையும், விதிக்குட்பட்டு, என்னிடம் கொடுத்தார். அவருக்கு மும்பையிலிருந்து வந்த கடிதத்தைக் காண்பித்தார். அசந்து போய்விட்டேன். அதில், ‘He is no mere auditor; more than anything else, he is Railway’s friend’ என்று எழுதியிருந்தது. இத்தனைக்கும், தணிக்கைத் துறையின் வரலாற்றில், நான் ரயில்வே துறை மீது கணிசமாகக் குற்றம் சாற்றினேன் என்று பதிவு ஆகியிருக்கிறது.

ஆந்திராவில் வனவிலங்குகளுக்கு ஆன என் பணியை அறிந்த அஸ்ஸாம் வனத் துறைத் தலைவர், எல்லா ஏற்பாடுகளும் மனமுவந்து செய்தார். இதை, இவ்வளவு விலாவாரியாகச் சொல்வதன் பின்னணி: ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடியுமானால், வருமுன் காப்போனாக இருந்து, அப்பேற்பட்ட ஏவுகணைகளிலிருந்து தப்ப முடியும். அதற்குப் பயிற்சியும் திறனும் வேண்டும். அதுவும் போதாது. நண்பர்களும் வேண்டும்.

ஒரு வினா: நீங்கள் அந்த அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால், இது எல்லாம் கை கூடி வந்திருக்குமா? விடை: துர்லபமே. நான் அந்த அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால், இருப்பதை வைத்துக்கொண்டு குப்பை கொட்டியிருக்கலாம், பராபரமே!

தொடர்ந்த வினா: இலக்கிய வரவு எங்கே? விடையாய் வந்த வினா: இதுவே நீண்டுவிட்டது. படிப்பார்களோ இல்லையோ? ‘சோற்றில் மறைந்திருக்கும் பூசணிக்காய்’ மர்மம் வேண்டுமா? இலக்கிய வரவு வேணுமா?

(தொடரும்……..

=====================================

படங்களுக்கு நன்றி: http://www.bkpatelandco.comhttp://topnews360.tmcnet.com, http://www.zazzle.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 5

  1. இக்காலத்தைப் பற்றி யான் அறியேன். ஏனெனில், நான், ஒரு ஆஃபிஸை விட்டு வந்த பிறகு, அங்கு போவதே இல்லை. அது என் மரபு.//

    தணிக்கைத் துறைக்காரங்க எல்லாருமே இப்படித் தானோ? 😛

    நல்லாவே இருக்கு, அதிலும் காலை டிபன் வரிசையைப் பார்த்துட்டு அசந்துட்டேன். ஆண்டிப்பட்டியிலே அந்தக் கால கட்டத்தில் எலக்ஷனிலே நின்னிருந்தால் ஜயிச்சாலும் ஜயிச்சிருக்கலாம்! :)))))

    இலக்கிய வரவுக்கும் காத்திருக்கேன். இப்போதைக்குச் சோற்றில் மறைந்திருக்கும் பூசணிக்காயே போதும்.

  2. எங்களுக்கு பரிச்சயமில்லாத பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. சோற்றில் மறைந்திருக்கும் பூசணியின் மர்மம் தான் சுவாரசியம்………நன்றி ஐயா.

  3. //தணிக்கைத் துறைக்காரங்க எல்லாருமே இப்படித் தானோ? /
    🙂

    தொடருங்கள் அய்யா. அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் எங்களுக்குப் புதிது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *