வெளிநாடு வாழ் இந்தியர் மையம்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையம், புதுதில்லியில் அமைய உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் இந்த மையத்தின் மூலம் கிடைக்கும் என்று மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன் மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை 2011 ஏப்ரல் 28 அன்று தொடக்கி வைத்துப் பேசிய போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் வயலார் ரவி மேலும் கூறியதாவது:
பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகியவற்றில் சிறப்பான நடவடிக்கைகளை இந்திய மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடையே ஏற்படுத்த இந்த மையம் துணை புரியும். இந்த மையத்தில் நூலகம், ஆராய்ச்சி மையம், கூட்ட அரங்கம், இந்திய பண்பாட்டு மையம், கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் மற்றும் முழு அளவிலான வர்த்தகத்திற்கான மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
புதுதில்லி சாணக்யபுரியில் 980 சதுர மீட்டர் நிலப்பரப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்த மையத்தின் கட்டுமான மதிப்பீடு, ரூ.80 கோடியாகும். தேசிய கட்டடக் கட்டுமான நிறுவனம் (என் பி சி சி) இந்த மையத்தைக் கட்டுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இன்று பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகிய துறைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர். உலகம் முழுவதும் 2.70 கோடி இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் திறன், நிர்வாகத் திறமை, கல்வி, அனுபவம், பொருளாதார நிலை ஆகியவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தி, அவர்கள் பயனடையும் வகையில் இந்த மையம் செயல்படும்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய போது அப்போதைய பிரதமர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையம் தில்லியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் அப்போது அறிவித்தது இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் வயலார் ரவி கூறினார்.
==================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை