விமானிகள் வேலை நிறுத்தம்: சமாளிக்கச் சிறப்பு ரயில்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் நெரிசலைச் சமாளிக்க, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது,
புதுதில்லி-கொல்கத்தா-புதுதில்லி, புதுதில்லி-மும்பை-புதுதில்லி வழித் தடங்களில் இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க, வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும் மும்பை-ஹைதராபாத்-மும்பை பகுதியில் 2011 ஏப்ரல் 29 அன்று ஒரு சிறப்பு ரயிலை இயக்கவும் மத்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட ராஜதானி வகை சூப்பர் சிறப்பு ரயில்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புப் பெட்டிகளுடன் இயக்கப்படும்.
முன்பதிவு காத்திருப்புப் பட்டியலைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப கூடுதல் ரயில் பெட்டிகளும் இவ்வகை ரயில்களில் இணைக்கப்படும், இதன் மூலம் பயணிகள் நெரிசலைச் சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் நெரிசலைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகங்கள், வர்த்தக அலுவலகங்கள், கால அட்டவணை சிறப்பு ரயில்கள் பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளன.
இந்த ரயில்களில் பி.ஆர்.எஸ். முறையில் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
==================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://www.topnews.in