நீ வரு நாளப் பாத்திருக்கேன்

 

-பார்வதி இராமச்சந்திரன்

 

கொதிக்கிற வெயிலிலே கூலி வேல நாம்பாத்து

கொண்டார காச கேட்டு கன்னத்துல அடிக்கிறியே

வடி கஞ்சி கடங்கேட்டு வாங்கிக் குடிச்சுப்புட்டு

ஒம் பிள்ள படுத்திருக்கே  ஒனக்கிது தா(ன்)  தெரியலயா?

 

பச்ச புள்ள மடியிருத்தி பால் கொடுக்குற வேளையிலே

எச்சி துப்பி அடிக்கிறியே எட்டி நீயும் மிதிக்கிறியே

கத்தி  கதறி அலறுகிற கைப்பிள்ள முகம் பாத்து

குத்தி மனச‌ பிடுங்குதய்யா எ வயிறு கொதிக்குதய்யா

 

நாலு வருச முன்ன நா வாழ்ந்த பவுச கண்டு

நாலூரு சீம எல்லா(ம்) நாம் போனா மதிப்பாக‌

நாம் பொறந்த ஊருலயும் நாம் புகுந்த வூட்டிலயும்

எம் போல வாழணுன்னு எப்பவுந் தா வாழ்த்துவாக‌

 

எரிஞ்ச கண்ணு பட்டு எம் பொழப்பு போச்சுதய்யா

எங்கிருந்தோ வந்த குடி எங்குடியக் கெடுத்ததய்யா

எட்டூரு விட்டெறியும் எ ராசா பேரு சொன்னா

பட்டுன்னு தள்ளி வுட்டுப் பாத்திருச்சே இந்தக் குடி!!

 

எம்புட்டோ சொன்னேனே!! என்ன நீயும் மதிக்கலயே

எதுத்துக் கேட்டாக்க ஒன் மனசு சகிக்கலையே

மந்திரிச்ச கோழி போல, மறுக்கா மறுக்கா நீயும்

சந்தியிலே கள்ளுக் கட போறதயும் நிறுத்தலையே

 

பத்திரமா பொட்டியில வச்ச நக போச்சுதய்யா

பத்திரத்த வச்சதுல பழய வீடு போனதய்யா

சத்திரத்த கட்டி வச்சு தருமஞ் செஞ்ச பரம்பரய‌

புத்தியில்லா மனுசெ ‘குடி’, கொக்கரிச்சு தின்னதய்யா

 

வெறுப்பு மீறிப் போய் வெசங் குடிச்சுப் போகலான்னு

வெவரங் கெட்டுப் போய் ஒரு நேரம் மயங்கிப் புட்டேன்

வெனயம் இல்லாத எம் பிஞ்சுக மொகம் பாத்து

வாழ்ந்து தே  பாப்போம்னு வீராப்பா நெனைச்சுப் புட்டேன்

 

இனிமேட்டும் ஒ(ன்) அடி தாங்க என்னால முடியாது

இனி பொறுத்துப் போனாக்கா ஒரு நாளும் விடியாது

ஒங் குடியும் குடுத்தனமும்  ஒரு கூட்டா சேராது

ஒன் நெனப்பு மாறலென்னா ஒறவிருக்க ஏலாது

 

எப்பத் தா(ன்) குடிக்காம இங்கிருக்க‌ நீ வரியோ,

தப்பாம அது வரக்கும் தவிப்போட  காத்திருக்கேன்

பாழாப் போற குடி பாதகத்த தொலைச்சுப் புட்டு

வாழ்வு வேணுமுன்னு நீ வரு நாளப் பாத்திருக்கேன்.

 

படத்துக்கு நன்றி: https://www.facebook.com/WeNeedTotalAlcoholProhibition

பார்வதி இராமச்சந்திரன்

எழுத்தாளர்

Share

About the Author

has written 11 stories on this site.

எழுத்தாளர்

8 Comments on “நீ வரு நாளப் பாத்திருக்கேன்”

 • தேமொழி wrote on 25 March, 2013, 8:37

  நாட்டுப்புறப் பாடல் சாயலில் “குடி குடியைக் கெடுக்கும்” என்பதனைப் படம் பிடிக்கும் நல்லதொரு  பாடல்.  அருமையாக இருக்கிறது.  அத்தாயின் முடிவினைப் பாராட்ட வேண்டும்.  வாழ்த்துக்கள் பார்வதி.  

  அன்புடன் 
  ….. தேமொழி

 • சத்திய மணி wrote on 25 March, 2013, 10:31

  அடாடா ? மது பானமில்லாமல் சென்னைத் தமிழ்மொழி பாணத்தினால் இப்படி ‘கிக்’ தந்தால் தமிழ் குடிமகன்கள்  மயங்கி கிடப்பார்களே! “கள்”ளன் ஆனாலும் கணவன் என்றே தமிழ்மகள் போல் திட்டாமல், தற்சூழ்நிலையில் துப்பாக்கி காட்டாமல் அறிவுரை அளிப்பது போல் வளரும் அற்புதமான சந்தம். பாட்டு நாயகியும் பாடல் நாடகியும் நலங்காண வாழ்த்துக்கள் முகமாய்

  “வாழ்வு வேணுமுன்னு  வரு நாளப் பாத்திருக்கேன்.” 
  “நீ திருந்த வேணுமுனு மனசார நோம்புருக்கேன் 
   வீதியெல்லா ஒத்தரூபா இட்லி தந்தமவராசி
   பெண்புலம்பல் கேட்டுபுட்டு  மதுவிலக்கு  செய்யோணும்!
  அம்மாவோவ்  கும்புடு !  கும்புடு ! 
   

 • சச்சிதானந்தம் wrote on 27 March, 2013, 22:28

  தலைமுறை தலைமுறையாக செல்வச் செழிப்புடன் இருந்தவரையும் குடிப்பழக்கம் என்னும் விகார குணம் வறுமையில் வீழ்த்தி, தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் இன்னலுக்கு ஆளாக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் கவிதை.

  இந்தக் கவிதையைப் படிக்கும் போது, சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக இயங்கும் பெங்களூரு பேருந்து நிலையம் ஒன்றில் நான் கண்ட மனதை பதைபதைக்க வைக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது. அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் சுயநினைவை இழந்த ஒருவன் சாலை ஓரத்தில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் அசைவற்றுப் படுத்துக் கிடக்க, அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் அருகில் அவன் மனைவி கைக்குழந்தையுடன் அமர்ந்து பெருங்குரலெடுத்து ஓலமிட்ட காட்சியை இன்று நினைத்தாலும் அந்தக் குரல் என் காதில் ஒலித்து உடலை நடுங்க வைக்கிறது. குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மனிதனும் அது போன்ற ஒரு காட்சியைக் கண்டால் குடியை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது என்று எண்ணுகிறேன்,

  தங்களது படைப்பிற்கு நன்றி திருமதி. பார்வதி ராமச்சந்திரன் அவர்களே,

 • Alasiam G wrote on 28 March, 2013, 9:53

  அருமையான வரிகள் அற்புதமான உணர்வுகள் 
  அழகுக் கவிதை ஆங்காங்கே அழுத்துகிறது மனதை 
  அருமை, அருமை, அருமை 

  வாழ்த்துக்கள் சகோதரி!

 • தனுசு
  thanusu wrote on 28 March, 2013, 10:21

  குடிகாரரை வைத்து ஒரு கவிதை.

  “”வடி கஞ்சி கடங்கேட்டு வாங்கிக் குடிச்சுப்புட்டு
  ஒம் பிள்ள படுத்திருக்கே””

  முதல் பாராவிலேயே ஒரு பொளீர் அறை,

  “”எங்கிருந்தோ வந்த குடி எங்குடியக் கெடுத்ததய்யா””

  என்று அடுத்தடுத்த வரிகளில் சாட்டை அடி, சவுக்கை அடி, என்று குடிகாரனை பெண்கள் அடிப்பதை விட இந்தக்கவிதை அடிக்கும் அடி அதிகம். கிராம சூழலில் பெண்ணின் குமுரலை கொட்டி ஒரு தீ, படிப்பவரை சுடுகிறது. வாழ்த்துக்கள். நல்ல கவிதை.

  கட்டுரை, கதை, கவிதை என்று பன் முகம் காட்டும் சகோதரி பார்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன். wrote on 28 March, 2013, 19:12

  @ திருமதி.தேமொழி அவர்கள்,
  தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கு என்றென்றும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றிகள்.

  @திரு. சத்தியமணி அவர்கள்,
  தங்களது வாழ்த்துக்களுக்கும் அருமையான கவிதைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.  மதுவிலக்குச் செய்ய வேண்டி, நானும் கூடப் போடுறேன் கும்புடு!!

  @திரு. சச்சிதானந்தம் அவர்கள்,
  தங்களது பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களது உண்மைச் சம்பவப் பகிர்வு நெஞ்சை உலுக்கியது. குடிப்பழக்கம் உள்ளவர்களால், அவர்கள் மட்டுமின்றி எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர்?. தாங்கள் கூறியபடி, குடிப்பழக்கம் உள்ளவர்கள், அதன் விளைவுகளை நேரடியாகப் பார்த்தால் திருந்த வாய்ப்பு உள்ளதென்றே நானும் நினைக்கிறேன். மிக்க நன்றி.

  @திரு.ஆலாசியம் அவர்கள்,
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே!!

  @திரு.தனுசு அவர்கள்,
  தங்கள் வாழ்த்துக்களுக்கும் அருமையான விமர்சனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் ஊக்கம் தரும் வரிகள், என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது. மிக்க நன்றி.

 • மேகலா இராமமூர்த்தி
  மேகலா இராமமூர்த்தி wrote on 29 March, 2013, 0:06

  நன்கு வாழ்ந்து பின்பு கணவனின் குடிப்பழக்கத்தால் நல்வாழ்வைத் தொலைத்திட்ட ஓர் பெண்ணின் மன உளைச்சலை, மனக் குமுறலை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் பார்வதி. கவிதையில் சொல்லப்பட்டுள்ள வட்டார வழக்கும் நெஞ்சைக் கொள்ளை கொள்கின்றது.

  குடி குடியைக் கெடுக்கும், நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே கெடுக்கும். அதனால்தான் வள்ளுவரும் ‘உண்ணற்க கள்ளை’ என்றார். சிறந்த கவிதையைப் படைத்துள்ள திருமதி. பார்வதி இராமச்சந்திரனுக்குப் பாராட்டுக்கள்!!

  — மேகலா

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன். wrote on 29 March, 2013, 9:08

  தங்களது பாராட்டுக்களுக்கும் அருமையான கருத்துரைக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள், திருமதி.மேகலா அவர்களே.

Write a Comment [மறுமொழி இடவும்]


4 − = one


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.