படக்கவிதைப் போட்டி (7)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11134356_815628041824730_874016360_n

திருமதி ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

About the Author

has written 1213 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

41 Comments on “படக்கவிதைப் போட்டி (7)”

 • சி. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 9:18

  தந்தை மகன் !

  தந்தை மகற்காற்றும் நன்றி
  முந்தி மகனை
  முதுகில் ஏற்றிச் செலல் !
  மகன் தந்தைக் காற்றும்
  நன்றி
  இவன் தந்தை
  எத்தனை உயர்ந்தவன் என்று
  எடுத்துச் சொலல் !

  சி. ஜெயபாரதன்

 • சுரேஜமீ wrote on 6 April, 2015, 18:18

  காணல் தரும் சேதி என்ன?

  காலம் தந்த சேதிதானே
  நானும்; நீயும் இங்கே;
  காணல் தரும் சேதிகண்டு
  கவலை எனக்கு மகனே!

  வாழும்காலம் யாவுமே
  வண்ணக் கோலமல்ல;
  வாழும்போது அறிந்திடுவாய்
  வாழ்க்கை பாடம் நன்றாய்!

  பார்க்கும்போதே பரிதவிக்கும்
  நிலையும் இங்கே உண்டு;
  பட்டபின்பு பாடம் கற்கும்
  நிலை உனக்கே வேண்டா!

  என்னவென்று உனக்குச் சொல்ல
  எந்தன் செல்வமே?
  எனை மிரட்டும் இக்காட்சி
  சொல்லும் சேதி உனக்கு!

  கவலையின்றித் திரியும்
  உந்தன் கலங்கமற்ற மனதில்
  கரைபடியா இருக்க வேண்டும்
  காணும் காட்சி நீயும்!

  பசுமையான மரத்தில்தானே
  பண்புகளும் வளரும்;
  பாலகனே நீ அறிவாய்
  பழகப் பழக நாளும்!!

  நெஞ்சதனில் நீதிநின்று
  நீயும்போகத் தானே
  நானுனக்குச் சொல்ல
  நாளும் கதைகள்பல உண்டு!

  கவலைவிடு காணும் காட்சி
  சொல்ல வரும் சேதி!
  காலம் வரும் நல்லபடி
  வெல்ல நீயும் நீதி!

 • சி. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 18:53

  சவ்வாரி

  தந்தை கழுத்தில் சவ்வாரி !
  தவறி விழுந்தால் ஒப்பாரி !
  மழை பெய்தது மும்மாரி !
  மாரி அம்மனுக்கு முளைப்பாரி !

  சி. ஜெயபாரதன்

 • கவிஞர் பா.ராஜசேகர் wrote on 6 April, 2015, 19:35

  தந்தையே !
  ——————
  தந்தை
  உன் 
  விரல்பிடித்து 
  நடைபயின்று!
   
  நீ
  சுமக்க 
  தோழ்அமர்ந்து
  வலம்வந்தேன் 
  பிஞ்சுக்காலம்!

  நீ
  அறிவுரைத்தாய் 
  முகம்திருப்பி 
  கைவிடுத்து 
  கண்மறைந்தேன்
  விடலைக்காலம்!

  நீ 
  கடந்த 
  பாதையதும்
  சுமந்த வேதனையும் 
  வியப்பாக உள்ளதைய்யா 
  இப்போ
  நான் 
  தந்தைக்காலம்!

  என்
  மகன் வளர்க்க 
  நீசுமந்த 
  சுமைஇருக்கு !
  நீ
  கொடுத்த 
  வலிஇருக்கு
  உன்பெருமை 
  சேர்ப்பேன் தந்தையே ! 

   

 • சி. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 20:12

  சவ்வாரி
  [சிறு மாற்றமுடன்]

  தந்தை கழுத்தில் சவ்வாரி !
  தவறி விழுந்தால் ஒப்பாரி !
  மழை பெய்தது மும்மாரி !
  மைந்தான் அமர்வான் களைப்பாறி !

  சி. ஜெயபாரதன்

 • சி. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 20:19

  சிறுவன் நடைக் களைப்பு !

  என் உயரம் பார், குட்டை !
  எதிரே விழாவும் தெரியாது !
  அப்பா உயரம் பார் நெட்டை !
  அவர் கழுத்தில் என் உயரம் இரட்டை !

  சி. ஜெயபாரதன்

 • சி. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 20:30

  தந்தையின் செல்வன் !

  தந்தை மகற்காற்றும் உதவி
  முந்தி விழாக் காணக்
  கழுத்தில் 
  குந்தி இருக்கச் செயல் !
  மகன் தந்தைக் களிக்கும்
  தகவல்
  இவன் தந்தை
  ஏணிப்படி என்று உலகுக்கு
  எடுத்துச் சொலல் !

  சி. ஜெயபாரதன்

 • சி.. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 21:46

  சுமை தாங்கிகள்

  தாய் சுமந்தது வயிற்றிலே !
  தந்தை சுமப்பது கழுத்திலே !
  தாரம் சுமப்பது நெஞ்சிலே !
  காதலி சுமப்பது கண்ணிலே !

  சி. ஜெயபாரதன்

 • Raa.Parthasarthy wrote on 6 April, 2015, 22:29

                    சுமப்பதும், தாங்குவதும் தாய் தந்தையே 
                     தாய் உன்னை வயிற்றில் சுமக்கிறாள்  
                     தந்தையோ உன்னை தோளில் சுமக்கின்றான் 
                    காதலியோ உன்னை  கண்ணில் சுமக்கிறாள் 

                   தோளில்  தாங்கி  உனக்கு  உலகை காட்டுகின்றேன் 
                    தாயோ  அன்பும்,  பாசமும் உன்னிடம் காட்டுகிறாள் 
                    அறியாப்   பருவத்தில் உனக்கு நான்  வழிகாட்டி 
                     முதுமைப் பருவத்தில் நீதான் என் வழிகாட்டி !

                    ஒன்றை மட்டும் உனக்கு  உணர்த்துகின்றேன் 
                     பணம்  எட்டிபார்க்கும், பாசம் பக்கத்தில் நிற்கும் ,
                     பணத்திற்காக  பாசத்தை தொலைத்து விடாதே 
                     பாசத்தை விலைகொடுத்து  என்றும் வாங்கிடாதே ! 

 • Shyamala Rajasekar wrote on 6 April, 2015, 22:57

  தன்னலமில்லாத் தந்தை ….!!!
  “““““““““““““““““““““““
  பட்டுவிரல்  நோகுமென்று பாலகனைத் தோள்சுமப்பார் 
  சுட்டியவன் சேட்டைகளில் சொக்கிடுவார் – மட்டிலா 
  அன்பால் கரைத்திடுவார் ஆக்கமுடன் கற்பிப்பார் 
  தன்னல மில்லாத்தந் தை .

 • சி. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 23:36

  இளமை ! பசுமை !
  [சிறு மாற்றமுடன்]

  தந்தை கழுத்தில் சவ்வாரி !
  தவறி விழுந்தால் ஒப்பாரி !
  மழை பெய்தது மும்மாரி !
  மரத்தில் பச்சை இலைமாறி !

  சி. ஜெயபாரதன்

 • சி. ஜெயபாரதன் wrote on 6 April, 2015, 23:50

  சிறுவன் உன்னை ..

  தாய் சுமந்தது வயிற்றிலே !
  தந்தை சுமப்பது கழுத்திலே !
  மரம் சுமக்கும் பச்சை இலைகளை !
  மனம் மகிழும் மகன் வாரிசை !

  சி. ஜெயபாரதன்

 • சி. ஜெயபாரதன் wrote on 7 April, 2015, 0:42

  பாரமில்லை !

  கைகோர்த்துக் கால்நடந்த பையன் களைத்துப்போய்
  மெய்வருந்தா தந்தையின் மீதேறி –  வெய்யில்
  கொளுத்தினும் காட்சிகாணக் கண்கோடி வேண்டும்
  பளுவில்லை தந்தைக்குப் பார் !

  சி. ஜெயபாரதன்

 • சி. ஜெயபாரதன் wrote on 7 April, 2015, 1:43

  வெய்யில் களைப்பு  !
  [திருத்தம்]

  கைகோர்த்துக் கால்நடந்த பையன் களைத்துப்போய்
  மெய்வருந்தி தந்தையின் மீதேற –  வெய்யில்
  கொளுத்தினும் காட்சிகாண முன்கூட்டிச் செல்லும்
  பளுவுணரா தந்தையைப் பார் !

  சி. ஜெயபாரதன்

 • சுரேஜமீ wrote on 7 April, 2015, 11:28

  மரம் பேசியது

  என்னைப் பார்
  என்றும் எதிர் பார்த்ததில்லை;
  எதிரியும் எனக்கில்லை!
  எதற்கும் கவலையில்லை!!

  எவர் தந்த விதையோ
  இன்று நான் மரமானேன்;
  எத்தனை இன்னல்கள்
  ஏற்ற மரமாக?

  செடியாய் வீழ்ந்தேனா?

  வெய்யோன் கணை தாண்டி
  வேண்டா புயல் தாங்கி
  கொட்டும் மழை தகர்த்து
  மானுடக் கண்தாண்டி

  நல்லதொரு மரமாக
  நானுனக்கு நிழல்தரவே
  நாளும் உன்போன்றோர்
  நலம்பேண என்பற்றி!

  வாழும் வரை
  உயிர்க்காக;
  வீழும்போது
  உனக்காக!!

  என்னிடம் கற்றுக்கொள்!

  தன்னிடமிருந்து கொடுத்தால்
  தர்மம்!
  தான் மடிந்து கொடுத்தால்
  தானம்!

  சொல்வாயா தாங்கி
  நிற்கும் குழந்தைக்கு?
  செய்வாயா நாளை
  வரும் நாள்முதலாய்?

  வாழும் போது உயிர்க்கு;
  வீழும்போதும் உயிர்க்கென்று!

 • கொ,வை அரங்கநாதன் wrote on 7 April, 2015, 21:05

  வரம் வேண்டும்…

  ஆசைக்கொரு மகனை
  அன்பாய் ஈன்றெடுத்து
  தோளில் சுமந்து
  நாளெல்லாம் திரிகின்றேன்

  இன்னொருவர் தோளில்
  எத்தனை நாள் பயணம்
  தன் காலில் தான் நிற்கும்
  தன்மையை அவன் 
  பெற்றாக வேண்டும்

  என் அனுபவ உயரத்தில்
  அவன் அகிலத்தைக் கண்டு
  தனக்கொரு வழியினை
  தானே அமைத்து 
  தலை நிமிர்ந்து
  நடந்திட வேண்டும்

  ஊர் கோவில் திருவிழாவை
  உயரத்தில் இருந்துப் பார்த்தாலும்
  தானுயரும் நிலை வரும்பொழுது
  வானோக்கி நடக்காத 
  வரமவனுக்கு வாய்க்க வேண்டும்!

  தள்ளாடி நான் நடக்கும்
  பொல்லாத காலம் 
  புலருகின்றபொழுது
  எல்லோரும் போற்றும் வண்ணம்
  என் இரு கரம் பற்றி
  மெல்ல அழைத்துச் செல்லும்
  நல்ல மனம் நாளு மவன்
  நாதனருளால் பெற வேண்டும்!

 • சி. ஜெயபாரதன் wrote on 7 April, 2015, 21:08

  என் தலைக் கடனே.

  ஈன்று பாலூட்டல் 
  இல்லாளின் கடனே.
  சான்றோனாய் உயர்த்தல்  
  தந்தையின் கடனே.
  அனுபவ அறிவு அளித்தல்
  அவனி வாழ்
  மாந்தரின் கடனே.
  நாட்டில், வீட்டில் நேர்மையாய்க்
  கடமை புரிதல்
  காளையர் கடனே.

  சி. ஜெயபாரதன்

 • வேதா. இலங்காதிலகம். wrote on 8 April, 2015, 1:38

  தேரில் சுவாமி தெரியவில்லை
  தோளில் சுமந்து காட்டிய
  தேவன் என்னப்பா அன்று.
  இந்தக் குழந்தைக்கு இவர்
  எதைக் காட்டுகிறார் இங்கு!
  கால்கள் களைத்ததால் குழந்தை
  கழுத்தைக் கட்டி ரசிக்கிறதோ!

  பா ஆக்கம் 
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  7-4-2015

 • எஸ். பழனிச்சாமி wrote on 8 April, 2015, 10:24

  அப்பாவின் அருமை

  தந்தையின் தோள்மீத மர்ந்து திருவிழாவில்
  விந்தைகள் பார்த்திட்ட ஞாபகம் – வந்திடும்
  சந்தோஷ நீட்சியாய் யாருக்கும் இப்போது 
  இந்தப் படத்தைப்பார்த் தால்

  தந்தைக்கும் மைந்தனுக்கும் உள்ள இணைப்புஅது
  தன்னலமில் லாதபாசத் தின்பிணைப்பு – மந்திரம்தான்
  தந்தைசொல் ஐந்தாம் வயதில் வயதுவந்த
  பின்னால் அவரேதான் வில்லன்

  அப்பாவின் அன்பில் தெரியும் சுயநலம்
  தப்பாகத் தோன்றும் மகனுக்கு – அப்பாவின்
  கண்டிப்பு வேண்டாத பாகற்கா யின்கசப்பாய்
  தண்டிப்ப தாகவே தோன்றும்

  தனக்கும் ஒருமகன் வந்து வெறுப்பைத்
  தினமும்வன் சொல்லில் வடித்து – மனமும் 
  தடுமாறும் ஐம்பதுக ளில்அப்பா சொன்ன
  கடுஞ்சொல் சரியென்று தோன்றும் 

  தான்வாழும் வாழ்க்கைக்கும் மேலான வாழ்வுதனை
  தான்பெற்ற மைந்தனும் பெற்றிட(த்) – தான்முயன்ற
  மாசற்ற தன்மையில் அப்பாவும் காட்டிவந்த
  பாசத்தின் அர்த்தம் புரியும்

  அப்பாவின் வார்த்தை எதுவுமே என்றைக்கும்
  தப்பாக ஆனதுஇல் லைகண்ணா – இப்போதே
  தந்தையின் பாசம் புரிந்துகொள் செல்லமே
  உன்னுடைய வாழ்வு சிறக்கும்

 • Jeyarama Sarma wrote on 8 April, 2015, 12:27

              படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா… மெல்பேண் .

            ஆனந்தம் தருமேயன்றோ !
       —————————————-

    வாயிலே விரலை வைத்து 
    வடிவாகத் தோழமர்ந்து
    பார்வையைச் செலுத்திநிற்கும்
    பாலகன் தன்னைத்தாங்கும்
    
    தோழினை சுகமாயெண்ணும்
    சுந்தரத் தந்தைதன்னை
    ஆவலாய்ப் பார்ப்போர்க்கெல்லாம்
    ஆனந்தம் தருமேயன்றோ

 • Jeyarama Sarma wrote on 8 April, 2015, 12:35

           படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

                இப்படம் காணுகின்றேன் !
           —————————————
     அம்மாவோ அரையில் வைப்பாள்
     அப்பாவோ உயர வைப்பார்
     என்னிளம் பருவம் தன்னை
     இங்கு நான் காணுகின்றேன்

       தோழிலே தூக்கி வைத்து
       சுகமான காட்சி காட்டும்
       பாசமாம் அப்பா மேலே
       பார்க்கிறார் குழந்தை காட்சி 

 • Jeyarama Sarma wrote on 8 April, 2015, 12:47

           படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

                    சுகமான காட்சி !
                  ————————

          அப்பாவின் தோளை
          அரவணைக்கும் கால்கள்
          சூப்பிய விரல்களுடன்
          சுகமான காட்சி 

          பச்சை மரமருகில்
          பாங்கான காட்சி
          இச்சையுடன் தோழில்
          கொச்சைமொழிப் பிள்ளை !

 • சுரேஜமீ wrote on 8 April, 2015, 12:49

  பார்வை நல்ல வழியிலே
  பார்த்து நடக்க சொர்க்கமே!

  முகம் பார்க்க முனைந்தேன்
  முத்தத்தில் நனைத்தாள் தாய்!
  முத்தென்று அணைத்தாள் நெஞ்சோடு;
  முடிவிலா சொர்க்கம் இதுதானோ?

  பார்வையால் புரிந்தது;
  பார்த்த முகமாய் இருந்தது!
  பாரமாய்ச் சுமந்தவள்தான்; 
  பரவசமாய்ச் சொன்னாள் தந்தையென்று!

  பக்கம் திரும்பினால்;
  பக்கத் துணையிருக்கும்;
  பகிர்ந்த தாயின் உதரம்;
  பங்கெடுத்த உடன்பிறந்தோர்!

  இப்படித்தான் அறிகிறேன்
  இவ்வுலக வாழ்வையுமே;
  இங்கே காணும் காட்சியும்
  இருவிழி சொல் மந்திரம்!

  ஏகிநிற்க மனமும்
  ஏந்தி நிற்கும் எந்தையும்;
  ஏறுகொண்டு காண்பது
  ஏற்றம்பெறு காட்சியே!

  ஐயம் கொண்ட தந்தையே
  ஐயமறு வாழ்வையே;
  ஐயமிலா மனதிலே
  ஐயமின்றிக் கொள்வேன்யான்!

  அருமருந்தாய் இருக்குமிந்த
  அன்னை தந்தை வளர்ப்புமே;
  ஆண்டவனின் கருணையால்
  ஆகும் எல்லாம் நன்மையே!

  பார்வை தந்த வாழ்க்கையே;
  பார்க்கும் இந்த உலகமே!
  பார்வை நல்ல வழியிலே
  பார்த்து நடக்க சொர்க்கமே!

 • நல்லை.சரவணா wrote on 8 April, 2015, 16:21

  நம் முன்னதாய்  இருக்கும் 
  ஊசிவடிவானதைப்  போலத்தான்..
  இடதுபுறம் கடந்திருந்த 
  சற்றுப் பரவலாயிருந்ததும் …

  வலதுபுறம் நாம் 
  எதிர்நோக்கவிருப்பது ஊசியும் 
  பரவலும் கலந்து 
  கொஞ்சமேனும் வளைந்திருக்கலாம்…

  நமக்கான அவசரங்களைவிட 
  வேகமாயிருக்கிறது… எதிர்காலம்…
  எப்போது வேண்டுமானாலும் 
   உறிஞ்சிக்கொள்ளப்படலாம்….நிறங்கள்..!! 

  இலைப்பச்சையிலிருந்து  இலை
  உதிர்ந்துவிடும் முன்போ…
  கணினி மென்பொருள்களுக்கு
  நிறங்களைத் 
  தாரை வார்த்து விடுவதற்குள்ளாகவோ….

  காலாரச் சென்று 
  பச்சையம் ரசித்துவிட்டு வருவோம் வா..

  கடைசியாய் சாறு தெளித்துக் 
  களித்திருந்த தலைமுறை
  என்னுடையதாகவும்…

  பூசப்படா பச்சை 
  ரசித்திருந்த தலைமுறை 
  உன்னுடையதாகவும் இருக்கலாம்…!!

   

 • Shenbaga jagatheesan wrote on 8 April, 2015, 20:34

  சிறந்த கடவுளாய்…

  தந்தை எதையும் தாங்கிடுவான்
       தனது பிள்ளை மேன்மைபெற,
  சிந்தையில் இதனைக் கொண்டேதான்
       சிரிக்கும் பிள்ளைத் தோளமர்த்தி
  விந்தை யான உலகினிலே
       வியக்கக் காட்சிகள் காட்டிடினும்,
  சிந்தையில் பிள்ளை உயர்வுதானே,
       சிறந்த கடவுளும் தந்தைதானே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • Jeyarama Sarma wrote on 9 April, 2015, 6:24

         படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

           சுவைக்கிறார் காட்சி 
        ——————————-
     கால்கள் இரண்டும்
     நெஞ்சினை வருட
     கைவிரல் வாயினுள் 
     சுவையினை ஊட்ட

     தோளிலே பிள்ளைய
     தூக்கியே வைத்து
     சுவைக்கிறார் காட்சியை
     சுகமுடன் இருவரும்

    காவிடை  நடுவே
    கண்டிடும் காட்சி
    கருத்தினில் கொள்ள
    காண்கிறோம் இங்கே 

 • அமீர் wrote on 9 April, 2015, 9:35

  ஈன்றான்
  ————–
  பொதிசுமந்து போறவரே
  புரியுதைய்யா
  உன் பிள்ளைபாசம்!
  பொடிநடையா ஊரைசுத்தி
  காண்பிக்கையில்
  தெரியுதைய்யா
  உன் ரத்தநேசம்!

  ஊனும் உயிரும்
  உனக்கு உன்மகனோ?
  உள்ளும் புறமும்
  அவனுக்கு நீதானோ?
  ஒன்றானது உங்கள்
  உணர்வோ?
  பிள்ளையிடம் சொல்வதெல்லாம்
  உந்தன் பழைய நினைவோ?

  சிறுவானி ஆறோரம்
  சிறுவனாய் நீ
  அதகளப்படுத்தியதும்…
  ஊருணி களத்தோரம்
  ஒருவனாய் நீ
  வளர்ந்ததும்…
  களவானி பெயரோடு
  களவாடி நீ
  செய்த குரும்புகளும்…
  கல்யாணி ஆசிரியையை
  கல்யாணம் நீ
  கட்டிக்க நினைத்ததும்…
  கருப்பட்டி வெல்லத்தை
  ஒருபெட்டி நீ
  தனியாய் தின்றதும்…
  செப்புகின்றாயோ ?
  அந்த
  இடங்களெல்லாம் சுற்றிக்காட்டி
  அத்தடங்களெல்லாம்
  இன்று இல்லாமல் போனது
  தப்பு என்கிறாயோ!

 • மெய்யன் நடராஜ் wrote on 9 April, 2015, 10:19

   

  இருவிழி தாயைத் தேட 
  இருவிழி தாரம் தேட 
  மறுமொழி நோயாய் வாட்டும் 
  மனதினுள் ஏக்கம் சூழ 
  உருகிடும் உயிர்களின் உயிரோ 
  அருகினில் தொங்கும் பிணமாய் 
  அங்குமே இல்லை என்றே 
  கருகிய பார்வை வீச்சு 
  காலக் கொடுமை யாச்சு.

 • Raa.Parthasarthy wrote on 9 April, 2015, 12:01

              தந்தை உன்னை தோளில் சுமக்கும் போது  வலி தெரியவில்லை 
              தாய் உன்னை வயிற்றில் சுமக்கும் போது வலி தெரியவில்லை 
              நீ சம்பாதித்து அவர்களை  முதியோர் விடுதியில் சேர்க்கும் போதும் 
              உன் பிள்ளை உன்னை மரியாதை  இன்றி இகழும்போதும் 
              உன் தந்தையின் அருமையும்,  பெருமையும்  அன்றுதான் புரியும் 
              உன் மகன் முதியோர் விடுதியில் தள்ளுவான் என்பது புரியும்.

 • சி. ஜெயபாரதன் wrote on 9 April, 2015, 20:27

  முதியோர் இல்லம் .. !

  பையனைத் தந்தை சுமக்கிறான்
  இப்போது !
  தந்தையை மகன் சுமப்பானா
  தள்ளாத வயதில் ?
  பத்து மாதம் சுமந்தாள் அன்னை
  பத்து நாள் ஊட்டு வானா
  பாட்டி ஆனதும் ? 
  ஈன்ற போது இன்பம் அளித்த 
  ஆண் பிள்ளை
  சான்றோனாய் ஆனபின்
  சாக வைப்பான் பெற்றோரை
  முதியோர் இல்லத்தில் !

  சி. ஜெயபாரதன்.

 • பி.தமிழ்முகில் wrote on 10 April, 2015, 0:56

  நீயே எந்தன் வாழ்க்கையே !

  பட்டுப் பாதமும் தான்

  புண்ணாகிப் போகக் கூடாதுன்னு

  பொன்னான என் பிள்ளையே

  தோளில் தூக்கிச் செல்கிறேன் உன்னையே !

  கூட்டத்திலே நீயும் தான்

  ஓடியே – என்னை தவிக்க விட்டு

  நீயும் தவித்தழுகாது இருக்கவே

  தோளில் தூக்கிச் செல்கிறேன் உன்னையே !

  புதிதாய் பலவும் பார்த்ததும்

  ஆர்வமும் ஆவலும் மேலோங்க

  அறியா ஆபத்திலேதும் நீயும்

  சிக்காது காக்கவே – துணையாகிறேன் நானுமே !

  கண் அகல காண்பன அனைத்தையும்

  நீ இரசித்து இன்பம் காண

  உன்னை சுமந்து சுற்றுவதிலேயே

  இன்பம் காண்கிறேன் நானுமே !

  உன் பிறப்பாலேயே நானும்

  தந்தையென பிறப்பெடுத்தேன் !

  புது வாழ்வு காண்பித்த பிள்ளையே

  நீயே எந்நாளும் எந்தன் வாழ்க்கையே !

 • நாகினி , ஆசிரியை, பிறப்பிடம் இந்தியா, தற்போதைய வசிப்பிடம் துபாய்(UAE) wrote on 10 April, 2015, 7:08

  தந்தைக்கு கைம்மாறு….
   
  நற்பண்பினை ஊட்ட பாசத்தின் சிகரமாய்…
  தவறினைத் திருத்த வழிநடத்தும் ஆசானாய்…
  துடுக்கான இளமைக்குத் தோள்கொடுக்க உற்ற தோழனாய்…
  விழிப்புணர்ச்சி மேம்பட கல்விக்கண் நல்கிய தயாளனாய்…
  உலகையே கைவசமாக்கும் உயர்கல்வி அறிவுக்கும் 
  ஊக்கம் தந்து உயிராய் விளங்கும் தந்தையே!

  ‘இம் மகனை(ளை)ப் பெற 
  இவர் என்ன தவம் செய்தாரோ’ என 
  ஊர் உலகம் மெச்சும் வண்ணம்
  உலக அளவை மிஞ்சும் 
  உன்னத பண்பில் உயர் 
  நேர்மையாளன் இவனெ(ளெ)னும்  
  பாராட்டால் தலைசிறக்கும்  
  நன்நடத்தை உலகையே உமக்கு 
  கைம்மாறாய் வழங்கிடுவேன்
  அன்புமிகு மகனா(ளா)ய் என்றென்றும்!

  — நாகினி

 • saraswathirajendran wrote on 10 April, 2015, 15:46

                தாய்  உன்னை   ஈன்றாலும்
             தந்தை  யான    என்கடமை
             தரமான  கல்வி   யையும்
             உரமான  மன    தையும்
             திடமான உடலையும் தந்து 
             நற்   போதனை   செய்து
             எப்போதும் என் காதுகள்
             உன்   கீர்த்தி   யையும்
             என்   வாய் உன்  தூய
             நடத்தை  யையும் கேட்டு
             இறும்பூ தெதவும்விழையும்
             தந்தை  தோள்   மீதேறி
             கடவுளை  வணங்கினால்
            வாழ்க்கையில் உயர்வார்களாம்
             வேலேந்திய    கையனாய்
             விரைந்து   மயிலேறி வந்து
             இவன்    தந்தை என்ன தவம்
             செய்   தானோ ?   என்று 
              மற்றவர்  புகழ்ந்திட வேண்டி
              பழனி முருகனை வேண்டுகிறோம்

  சரஸ்வதி ராசேந்திரன்
              
               
            
          
                   

                
            

 • புனிதா கணேசன் wrote on 11 April, 2015, 2:04

  அன்பின் சுமையாய்த் தோளிலே
  அழகாய்ச் சவாரி செய்யும் சேய்!
  அகன்ற உலகம் நோக்குமே
  அகல விழிகள் துருத்தியே
  அங்கும் இங்கும் எங்குமே
  அற்புதமாய் பறவைபோல்
  ஆலாய்ப் பறந்து நோட்டமோ ?
  அப்பாவின் தோள்களில்
  ஆடி ஆடி ஊர்வலம்
  அற்புதம் ஆனந்தம்
  அரியதான காட்சிகள் !
  அருமையாகும் பொழுதுகள்
  அட்டகாசம் ஆகாயம் –யாவும்
  அருகில் பார்க்கலாம்
  அப்பா தோள் சவாரியில்!

  புனிதா கணேசன்
  10.04.2015

 • சி. ஜெயபாரதன் wrote on 11 April, 2015, 21:47

  வழிகாட்டி

  குதிரை மேல் சவாரி செய்வார்
  இருவர், ஆனால்
  மதியுடன் ஓட்டுவது முன்னவன் !
  யானை மீது மூவர் அமர்ந்தார்;
  ஆனால் ஓட்டியது பாகன்;
  தந்தை தோளில் குந்தியது 
  மைந்தன்; ஆனால்
  முந்தி நடத்திச் செல்வது
  தந்தையே ! 
  மைந்தன் மனிதனின் தந்தையாம் !
  பொன்மொழி அது !
  தந்தை குருடாயின் மைந்தன்
  வழிகாட்டி !

  சி. ஜெயபாரதன்.

 • Jeyaramasarmaa wrote on 12 April, 2015, 6:41

              படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா . மெல்பேண்

            காண்கிறார்!
         ———————-
     விபரம் புரியாமால்
     விரல்சூப்பி பார்க்கின்றார்
     விபரமாய் தந்தை
     விந்ததனைக் காணிகின்றார்
       

 • Jeyaramasarmaa wrote on 12 April, 2015, 6:44

                      படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா . மெல்பேண்

            காண்கிறார்!
         ———————-
     விபரம் புரியாமால்
     விரல்சூப்பி பார்க்கின்றார்
     விபரமாய் தந்தை
     விந்தைதனைக் காண்கின்றார்
       

 • ஜெயஸ்ரீ ஷங்கர் wrote on 12 April, 2015, 16:43

  ஏழுகடல் கரை மீறி
  தொடர் மலைகள் கடந்து
  பைந்தமிழ் நாட்டின்
  எல்லைகள் தாண்டியும்
  வாழுமே பிள்ளைப் பாசம்..!

  நேசமிகு தந்தையின்
  கனவுகள் சுமந்த உள்ளமும்
  தோளின் மேலே
  சுகமான சுமையாகப்
  பெயர் சொல்லும்..!

  உல்லாசத் திருநாளில்
  ஊர்கோல மேகங்கள்..!
  பாலகனின் கண்களும்
  பெற்றவனின் கண்களும்
  ஓர் திசை நோக்கி
  வியப்பில் விரிய
  தாயவள் தூரத்தில்
  தான் காணும்
  காட்சியினை
  கண்ணோடு படம் பிடித்து
  நெஞ்சோடு நிரப்பிக்
  கொள்வாள்…!

  தந்தையவன் தோளின்
  நம்பிக்கையின் பயணம்
  தளிராக அமர்ந்திருக்க
  தாயவள் உள்ளத்திலோ
  ஆனந்தப் பிரவாகம்…
  அமைதியைப் பின்தொடரும்..!

 • ஜெயஸ்ரீ ஷங்கர் wrote on 12 April, 2015, 16:47

  பைந்தமிழ் நாட்டின்
  எல்லைகள் தாண்டியும்
  வாழுமே பிள்ளைப் பாசம்..!
  நேசமிகு தந்தையின்
  கனவுகள் சுமந்த உள்ளமும்
  தோளின் மேலே
  சுகமான சுமையாகப்
  பெயர் சொல்லும்..!

  உல்லாசத் திருநாளில்
  ஊர்கோல மேகங்கள்..!
  பாலகனின் கண்களும்
  பெற்றவனின் கண்களும்
  ஓர் திசை நோக்கி
  வியப்பில் விரிய
  தாயவள் தூரத்தில்
  தான் காணும்
  காட்சியினை
  கண்ணோடு படம் பிடித்து
  நெஞ்சோடு நிரப்பிக்
  கொள்வாள்…!

  தந்தையவன் தோளின்
  நம்பிக்கையின் பயணம்
  தளிராக அமர்ந்திருக்க
  தாயவள் உள்ளத்திலோ
  ஆனந்தப் பிரவாகம்…
  அமைதியாய் பின்தொடரும்.

 • சி. ஜெயபாரதன் wrote on 13 April, 2015, 1:34

  சவாரி [ஒரு திருத்தம்]

  தந்தை கழுத்தில் சவ்வாரி
  தவறி விழுந்தால் ஒப்பாரி
  மழை பொழியும் மும்மாரி
  மாரி அம்மனுக்கு முளைப்பாரி.

  சி. ஜெயபாரதன்

 • Ratha Mariyaratnam wrote on 9 May, 2015, 16:44

  நான் நோக்கிய​ நோக்கு
  என் தந்தை நோக்கவில்லை
  நான் காணும் காட்சியை விட​
  பன் மடங்கு வானொக்கி நோக்கு
  உன் பார்வை பரந்து விரிந்திட​
  நானுன்னை தோளில்ச் சுமக்கிறேன்
  நான் இதுவரை காணாத​ காட்சிகள்
  நீ காணென்று என் தந்தை 
  எனக்குக் காட்டிய​ அதே வழி தான்
  நான் உனக்குக் காட்டுகிறேன்
  வானுயர்ந்த​ கோபுரங்கள் 
  மின் மினுக்கும் தாரகைகள் மட்டும்
  தான் உயரமில்லை மகனே
  உள்ளமும் உயர​ வேண்டும்
  சந்தனத்தையும் சாம்பலையும்
  ஒரு சேர​ நோக்கு
  இல்லாதவனையும் இருப்பவனையும் 
  சரி சமனாய் ஆக்கு _நீ
  உயரத்தில் நிற்பதற்க்கு
  பள்ளங்களைப் புரிந்து கொள்
  உள்ளத்தைப் புரிந்து கொண்டால்
  உயரத்தில் நீ நின்று விடுவாய்

  ராதா மரியரத்தினம்
  10.05.15

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.