பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12395466_930420910345442_335089823_n
32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “படக்கவிதைப் போட்டி – 44

  1. பாப்பாப் பாட்டு !
    ““““““““““““`
    பாவாடைச் சட்டை போட்ட 
    ****பாப்பாவும் பார்க்குது !
    ஆவாரம் பூவைப் போல 
    ****அழகாகச் சிரிக்குது !
    நாவாரத் தானும் பாடும் 
    ****நாடகமும் நடத்துது !
    நோவாமல் தாளம் போட்டு 
    ****நுள்ளியுள்ளம் இழுக்குது !!

    கால்கொலுசின் சலங்கைச் சத்தம் 
    ****காதில்தேன் பாய்ச்சுது !
    பால்வடியும் பிள்ளை முகமும் 
    ****பாங்குடனே இருக்குது !
    மேல்மாடி வீட்டிற் குள்ளே  
    ****மெய்சொக்க வைக்குது !
    வேல்முருகன் அருளி னாலே 
    ****விளையாடி மகிழுது !

  2. இவளொரு குட்டிக் கவிதை -கார்த்திகா AK

    சிறு வாய் திறந்து
    விழிகள் சுருக்கி
    எதைக் கண்டு
    ரசித்துச் சிரிக்கிறாய் நீ

    மழலையின் மொழி
    குறுஞ் சிரிப்பென்று
    உறக்கத்திலும் புன்னகை வீசும் நீ
    உரக்கச் சிரிப்பது எதைக் கண்டோ

    செல்லச் சிட்டுக்கு
    பட்டு வண்ணப் பூச்சி
    கண்ணில் பட்டதோ
    இல்லையில்லை,பட்டாம் பூச்சி
    பட்டுடுத்தி உன்னைக் கண்டு நடக்க
    ஆசை கொண்டிருக்குமடி

    தலை கொள்ளா
    உன் கேசம்
    தென்றலின் நேசமடி

    நீ சிணுங்கிச் சிரிக்கையில்
    கொலுசொலிகள் தோற்குமடி
    வெட்கத்தில் பூக்கும்
    விரலோடு பிறை நிலாக்கள்

    வளை குலுங்கும்
    உன் பிஞ்சுக் கரங்கள்
    பூக்கள் தொடச் சிவக்குதே
    பூவிதழ்கள் மோட்சமடையுதடி

    சங்குக் கழுத்தில் தொங்க
    என்ன தவம் செய்துவிட்டது
    இந்த மின்னும் பொன் சங்கிலி

    குட்டிக் கவி நீ
    சிரிக்க ஹைக்கூக்கள்
    சிதறுமடி என் செல்லமே!

  3. பிள்ளைச் செல்வம்
    சி. ஜெயபாரதன்

    புன்னகை உள்ள போது
    பொன்னகை வேறெதற்கு ?
    தேங்குரல் கேட்கும் போது
    பூங்குழல் இசை எதற்கு ?
    கொஞ்சும் சிசு ஆடும் போது
    தஞ்சாவூர் பொம்மை எதற்கு ?
    பிள்ளைச் செல்வம் உள்ள போது
    பேரின்பம் வேறெதற்கு ?

    ++++++++++++

  4. தேவ கானம்…

    பேசும் தெய்வமொன்று
    பாட ஆரம்பித்தது,
    தாளம் போட்டிடும்
    தளிர்க் கரங்கள்..

    இதில்
    பொய் வேடமில்லை
    போலிப் புனைவுகளில்லை..

    தப்புத் தாளங்கள்
    இலக்கணப் பிழைகள்,
    தலைமறைவாயின
    மழலையின் ஆட்சியில்..

    நெஞ்சில் வஞ்சமின்றி
    கொஞ்சும் மொழியில்வரும்
    பிஞ்சுக் குரலிசையின்முன்,
    பக்திப் பாசுரங்கள் 
    பலனின்றிப் போகின்றன..

    இதோ,
    இதைரசிக்க வந்துவிட்டான்
    இறைவனும் நம்முடன்…!

    செண்பக ஜெகதீசன்…

  5. சின்னக் குழந்தை சிரிக்கும் அழகு
    தெய்வம் காட்டும் பேரழகு…..அதன்
    கன்னக் குழியில் கனியும் அழகு
    கவிதை காட்டும் ஓரழகு.
    முன்னஞ் செய்யும் குறும்பு களாலே
    முற்றம் பெறுமே சீரழகு…..மெல்ல
    வண்ண மாகத் தத்தித் தவழ்ந்து
    வரும்போது தோற்கும் தேரழகு.

    முத்தா யுதிர்க்கும் ம்மா வென்னும்
    மொழியில் தோன்றும் தமிழழகு….அதன்
    முத்தம் கொடுக்கும் கையசைவினிலே
    தெரியும் தங்கச் சிமிழழகு.
    நித்தம்  நிலவைக் காட்டி ஊட்டும்
    நெய்ச்சோறதன்கையமிழ்தழகு….அதை
    மெத்த வாங்கி உண்ணும் தாயின்
    மிக்கக் கலியைத் தீர்த்தவழகு.

    எண்ணத் தொலையா ஏட்டில் விளையா
    மழலைச் சொல்லின் மொழியழகு ….நலம்
    பண்ணும் குறும்பில் தெரியும் அரும்பின்
    பட்டுத் தெறிக்கும் விழியழகு.
    மண்ணும் விண்ணும் மறுக்க வியலா
    மாபெரும் படைப்பின் ஒளியழகு….தெய்வப்
    பண்ணும் கொடுக்கா பலவிசைப் பாட்டில்
    கேட்கும் இன்பக் களிப்பழகே.
               கவிஞர் இளவல் ஹரிஹரன்

  6. தட்டு மிருதுவாய் தாளம் 
    தரலாம் இசைக்கருவி ஓசை வேதாளம் 
    தத்தை உன் மிருது வாய் சிரிப்போ 
    தந்திடுமே எப்போதும் ஆசை பூபாளம் 

  7. குக்கூ ஒலிகளும்

    கொஞ்சும் கொலுசொலியும்

    மழலை மொழியும் இசையாக

    கேட்போர் மனதை மயக்கி

    சுற்றம் அனைத்தையும்

    தன்வயப் படுத்திக் கொண்ட

    அழகுக் கிள்ளையே !

    உந்தன் இனிய பாடலுக்கு

    நீயே தாளமும் போட்டு

    காலை உதைத்து

    நாட்டியமும் ஆடுகிறாயே !

    உந்தன் புன்னகையில்

    சொக்கிப் போய்

    கண்கொட்ட மறந்து

    கட்டியணைத்து உச்சி முகர

    ஓடிவரும் அன்னையைக் கண்டு

    உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?

    கள்ளமறியா சிறு கிள்ளையே !

  8. மழலை மந்திரம்

    பூவொன்று
    இசைப்பாடி
    புன்னகைக்கிறது
    புத்தாண்டை வரவேற்று
    கண்ணசைக்கிறது

    பால் தோய்ந்த
    நிலவொன்று
    பறை முழக்கி
    பட்ட துயர் மாறுமென்று
    பகருகின்றது

    உயிர் கொண்ட
    ஓவியம் ஒன்று
    ஊழலோடு லஞ்சத்தையும்
    சத்தியமாய்  ஒழிப்போமென
    சங்கீதம் இசைக்கிறது

    கற்பத்தில் விளைந்த
    கவிதையொன்று
    முரசு கொட்டி
    கலாமின் கனவுகள்
    நனவாகப் போகுதென்று
    கட்டியம் கூறுகிறது

    மழலையிவள் சொற்கள்
    மலருகின்றப் புத்தாண்டில்
    மாற்றத்தை உண்டாக்கும்
    மகேசனின் மந்திரமட்டுமல்ல
    கனவுகளை நிஜமாக்கும்
    காலதேவனின்
    கட்டளைகளுமாகும்!

  9. ஞானச்சுடர்
    பொக்கை வாய் சிரிப்புடன்
    புதுக்கவிதையாய் புறப்பட்டு
    கள்ளங் கபடமின்றி என் செல்லம்
    தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
    ஏதோ ஞானச்சுடரென்றோ
    என்முன் விரிந்து தெரிகிறது
    நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
    தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
    மெல்ல தமிழ் ஊட்டி உன்
    அருளால் அறிவை ஊட்டி
    நாவும் கையும் நல்லனவற்றில்
    துலங்கச் செய்த இறைவா நீ
    ஈந்த இந்த அருட்கொடைக்கோ
    இனிதாய் சொன்னேன் நன்றியடா
    சரஸ்வதி ராசேந்திரன்

  10. பட வரி 44
    தொழ வேண்டும்;!…

    பட்டுப் பாவாடைச் சட்டை மீனாட்சியே!
    குட்டிக்   கொலுசும் கட்டுதடி என்னையே!
    கெட்ட  திருஷ்டியை  வெட்டக் கறுப்பாய்
    பொட்டிட்ட  குட்டிச் சுட்டி ராணியே!
    எடுப்பாய் அமர்ந்த எழிலான தேவதையாய்
    அடுக்கடுக்காய் தாளமிட துடுக்காய்த் தயாரானாய்.
    ” ஆ ” காட்டுமழகில் அப்படியே விழுந்தேன்.
    ” பா ” கேட்டுக் கைதட்டி ஊக்கிட வந்தேன்.

    பொக்கைவாய்ச் சிரிப்பு சொக்கு வித்தையடி!
    சொக்கத் தங்கமே! பெண் பிள்ளையென்றடி
    பொசுக்கவில்லை உலகமுன்னை பெரிய நன்றியடி!
    பெண் பெருமையையேற்று பண்ணிசை ராணியே!
    குழலினும் இனியது குழந்தை மொழி
    மழலையின் மயக்கமது இன்ப வழி
    தொழ வேண்டும்! மழலையின் அரங்கேற்றம்!
    தழலாய் உயரட்டும் தரணியில் புகழுடன்!

    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    26-12-2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *