இன்னம்பூரான்
ஏப்ரல் 16 ,2016
innam

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் ஆளவந்தார் கொலை வழக்கு நாள்தோறும் தடபுடலாக, ஊடகங்களில் உலா வந்தபடி இருக்கும். கட்டுப்பெட்டி பெண்ணரசிகளும் கட்டுக்கடங்கா ஆண்வர்க்கமும் விழுந்தடித்துப் படிப்பார்கள். அவர்கள் சற்றே அசந்தால் போதும். நாங்களும் ஒரு கண்ணோட்டம் விடுவோம். வகுப்பில், அக்கு வேறு, ஆணி வேறாக அலசுவோம். ஒரு குறுக்கு விசாரணை:

எதிர்த்தரப்பு வக்கீல்: ஆளவந்தாரும் தேவகியும் கட்டியணைத்து அந்தரங்கமாக இருந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எந்த ஜன்னல்?

சாட்சி: குளியலறை ஜன்னல்.

எ.வ: உங்கள் மூக்குக்கண்ணாடி சோடாபாட்டில் கண்ணாடியாக இருக்கிறதே. அதை போட்டுக்கொண்டு தான் பார்த்தீர்களா?

சா: ஆமாம்.

எ.வ. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

சா. குளித்துக்கொண்டிருந்தேன்.

எ.வ. ஓஹோ! கண்ணாடி போட்டுக்கொண்டுதான் குளிப்பீர்களோ?

சா. உம்………

எ.வ. குறுக்கு விசாரணை முடிந்து விட்டது, கனம் கோர்ட்டார் அவர்களே!
[சாக்ஷியம் குப்பையிலே.]

அதை நினைவூட்டும் வகையில் ஒரு அரசியல் கொலையைப் பற்றிய ஒரு கொலை வழக்கு ஏப்ரல் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது. டாக்டர் ஶ்ரீதர் என்ற பிஜேபி திருச்சி பிரமுகரை, ஒரு மதவெறி கும்பல் பெப்ரவரி 2, 1999 அன்று இரவு பத்து மணி அளவில் அவரது வீட்டு வாசலிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அவருடைய கூக்குரலை கேட்டு பதறி அடித்துக்கொண்டு வந்த அவருடைய மகள் இதைக் கண்ணால் கண்டாள். அவளது நேர்முக சாட்சியத்தில் ஓட்டை கண்டுபிடிக்க, அவர் அந்த மங்கலான ஒளியில் இதைக் கண்டு இருக்கமுடியாது என்று குற்றம் சாற்றப்பட்டவர்களின் வக்கீல்கள் செய்த சாகசங்களை இப்போதைக்கு விடுவோம். தெரு விளக்கும், மற்ற விளக்குகளும் நல்ல வெளிச்சம் போட்டதால், அவரால் தன் தந்தையின் கொலைகாரர்களை காணமுடிந்தது என்பதில் ஐயமில்லை என்று உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பு. இந்த மாபெரும் இயல்பு – உண்மையைக் கண்டுபிடிக்க, அடித்தள கோர்ட்டார் மூன்று வருடங்களும், உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களும், உச்சநீதிமன்றம் எட்டு வருடங்களும் எடுத்துக்கொண்டன.

தெரு விளக்கு வெளிச்சத்தில் வெளிச்சம் காண 16 வருடங்கள்!

ஹூம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.thebigstorage.com/images/ebay/sa/E59383.jpg

இன்னம்பூரான்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *