தமிழ் சமுதாயம் 2077 [7]: சூடு, சொரணை காக்கும் கொலைகள்

0

 

-இன்னம்பூரான்
செப்டம்பர் 5, 2017

 

innam

2003ஆம் வருடம் ஒரு தீநிமித்தம். கதிரவன் உதிக்கும் முன், முன்னூறுக்கு மேற்பட்ட சராசரி கிராமத்தினர் இரு சடலங்கள் எரிந்து சாம்பலாவதைக் கண்டுகளிக்கக் கூடியிருந்தனர்,  விருத்தாசலத்துக்கு அருகில் இருக்கும் புதுக்கீரைப்பேட்டை என்ற கிராமத்தின் வெட்டவெளியில். மரணச் சான்று பெற, ஆதார் போன்ற மண்ணாங்கட்டிகள் எல்லாம் கிடையாது. தேவையுமில்லை அப்பனும் ஆத்தாளும் இருந்தால் கூட அவை அனாதைப்பிணங்கள். கூடப்பிறந்த அண்ணனும், அருமைச் சுற்றமும், அக்கம்பக்கத்து பிசாசுகளும், கண்ணகி என்ற பட்டதாரி பெண்ணை நஞ்சு உண்ணவைத்து அவள் மரணத்தைக் கொண்டாடினார்களாம். அவள் வன்னியர் குலத்தவள். அவள் காதலித்து மணந்த முருகேசன் என்ற கெமிகல் எஞ்சினியர் அருகில் உள்ள குப்பநத்தத்தில் நசுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து முன்னுக்கு வந்தவர். காதலித்து மணந்த இந்த ஜோடிக்கு தினந்தோறும் மரணபயம்.

முருகேசன் கண்ணகியை மூங்கில்துறைப்பட்டு என்ற கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் பாதுகாப்புடன் வைத்துவிட்டு, வண்ணான்குடிக்கடவு என்ற கிராமத்துக்கு சென்றார். அவருடைய மாமன் மூலமாக இதைத் துப்பறிந்த வன்னியர்குலப் பெருந்தகைகள், நைச்சியமாக அவர்மூலம், முருகேசனைத் தருவித்து அவரை, கோயில் அருகில் ஒரு கம்பத்தில் கட்டினார்கள். கண்ணகியின் ரத்த உறவு அவரை விளாசித்தள்ள, வலி பொறுக்கமுடியாமல், அவர் கண்ணகி தஞ்சம் புகுந்த இடத்தை சொல்லிவிட்டார். 12 நபர்கள் கொண்ட படையை ஏற்றிக்கொண்டு கார்கள் பறந்தது. நம் கிராமவாசிகள் ஏழைகள். டில்லியில் கூத்தடிப்பார்கள். ஆனால், கார் மோர் எல்லாம் அத்துபடி. கந்துவட்டியும் அத்துபடியாக இருக்கலாம். அவள் வலுக்கட்டாயமாகக் கொணரப்பட்டாள். நஞ்சு ஊட்டப்பட்டு அவர்கள் இருவரும் -இளம்தம்பதிகள் – செத்துப்போனார்கள். Gleeயுடன் கொளுத்தப்பட்டார்கள். என்ன உலகமடா?

அப்பனும் அண்ணனும் கண்ணகிக்கு நஞ்சு புகட்டியதாகவும், அப்பனும், மாமனும் முருகேசனுக்கு நஞ்சு புகட்டியதாகவும் விருத்தாசலம் போலீஸ், விடுதலைச் சிறுத்தை படையின் தலைவர் திருமாவளவன் தலையிட்டபின் சொல்கிறார்களாம். இந்தப்பக்கம் நான்கு பேர், அந்தப்பக்கம் நான்கு பேர். கைதாம், என்னே சமச்சீர்? 14 வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 2017 இறுதியில் கடலூரில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இரண்டு சாட்சிகள் முரண் சாட்சிகள் ஆயினர்.

கடந்த அறுபது வருடங்களில், ‘வர வர மாமியார் கழுதைபோல் ஆன கதையாக‘ தமிழ்நாட்டு மக்கள், ஈ.வே.ரா. அவர்களின் சமத்துவ அறிவுரைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, ராஜாஜியின் விமோசனத் தொண்டுகளை மறந்துவிட்டு, காமராஜரின் பொது அறிவைக் கடாசிவிட்டு, காந்திஜியின் போதனைகளை முற்றும் உதறிவிட்டு, திரு.வி.க. அவர்களின் சீரிய கருத்துக்களைக் கொளுத்தி அழித்துவிட்டு, கொள்ளிவாய்ப் பிசாசுகளாக நடந்துகொண்ட கதை இது.

ஈ.வே.ரா. அவர்களின் வழித்தோன்றல்கள் அறுபது ஆண்டுகளாகச் சாதி அடிப்படையில் ஆட்சி நடத்தியபோது, இவை அதிகரித்தன. போலீசிடம் கொடுத்த புகாரும், அவசர உதவி கேட்ட வேண்டுகோளையும் காவல்துறை கண்டுகொள்ள மறுத்ததாம்.  இந்த அழகில் நாம் என்றோ இதிகாசத்தில் சொல்லப்பட்ட உபகதை – துரோணன் என்ற பார்ப்பன க்ஷத்திரியர் ஏகலைவனிடம் கட்டை விரலை தக்ஷிணையாக கேட்டதாக சொன்னப்பட்டதை நினைவில் கொணர்ந்து கொதித்துப் போகிறோம். பாரதியார் அதனால் தான் பழங்கதைகளை தனக்குள்ளே பேசி மாய்ந்து போகவேண்டாம் என்று சொன்னார். கேட்பார் இல்லையே!

தமிழ்நாட்டுக்குத் திரும்புவோம். கடந்த மூன்றாண்டுகளில் இந்த மாதிரி ‘சூடு, சுரணை காக்கும்’81 கொலைகள் நடந்துள்ளன. இப்படித்தான் கெளசல்யாவை மணந்த சங்கரை உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில், மக்கள் மன்றத்தில் நடுவில் அரிவாளால் வெட்டி கொன்றார்கள்.

வெளிநாடுகளில் சொகுசாக அமர்ந்துகொண்டு தமிழ்நாட்டை, ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு, லொசுக்கு, மண்ணங்கட்டி செய்திகளை நம்பிப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்களே! எவிடென்ஸ் கதிர் அவர்கள் சொல்வதை கேளும்:

  • இத்தகைய கொலைகள் அதிகரித்து வந்தபோதிலும், ஒரு கொலை வழக்கிலாவது தண்டனை கொடுக்கப்படவில்லை. ஏன்? எல்லாக் கொலையாளிகளும் குடும்பத்தினர் என்பதால்.
  • 22 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் ‘மரியாதைக் கொலை’( இணையம் கொடுத்த மொழியாக்கம்) பற்றி விவரம் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு அவற்றில் ஒன்று அல்ல.
  • தற்கொலை என்று சொல்லித் தப்பிப்பது ஒரு வாழ்நெறி, இங்கு.

இந்த வாழ்நெறி நசுக்கி ஒழித்து விடாப்பட்டால் 2077 தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருக்காது; அதற்கு இருக்கவேண்டிய தகுதியும் இருக்காது. யாராவது சிலருக்காவது மனம் கொதிக்குதா என்று பார்ப்போம். மனம் இரங்குதா என்று பார்ப்போம்.காஷ்ட மவுனம் சாதிக்காமல், இந்த மாதிரியான வாழ்நெறியைக் கடைபிடிக்காத பிராமணர்களை மட்டும் தாக்கும் மனப்பான்மை தணிந்து நடுநிலை முக்கியத்துவம் பெற்றால், 2077 லாவது தமிழ்நாடு செழிப்புடன் திகழக்கூடும்.

-#-

சித்திரத்துக்கு நன்றி:

படித்தவை:

http://www.deccanchronicle.com/nation/crime/150316/81-honour-killings-in-three-years-in-tamil-nadu.html

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/aug/31/trial-begins-2003-tamil-nadu-honour-killing-case-1650474.html

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *