‘அக்கறை’யில் ஒன்றரை மணி நேரம்
அண்ணாகண்ணன்
பாக்கியம் ராமசாமியும் அவர் நண்பர்களும் இணைந்து, சென்னை, இராஜா அண்ணாமலை புரத்தில் ‘அக்கறை’ என்ற அமைப்பினைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இதில் அன்பர்கள் கலந்துகொண்டு, தங்கள் அனுபவங்களை 6 நிமிடத்திற்குள் பேசிப் பகிர்ந்துகொள்கிறார்கள். இதன் 117ஆவது நிகழ்ச்சி, 2011 மார்ச்சு 19ஆம் தேதி நடந்தது. இதில் நண்பர்கள் சிரிப்பானந்தா, இ.கார்த்திக், சித்திரைச் சிங்கர் ஆகியோருடன் சென்று நானும் கலந்துகொண்டேன். என் இலங்கைப் பயண அனுபவங்கள் குறித்துப் பேசினேன்.
எழுத்தாளர்கள் பாக்கியம் ராமசாமி, ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், நகுபோலியன், எஸ்.சந்திரமவுலி உள்ளிட்டோரைச் சந்தித்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த எழுத்தாளர் கடுகு, இதே நாளில் தன் 80ஆம் பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது ரொட்டி ஒலி என்ற நகைச்சுவைக் கதைகள் கொண்ட புத்தகம், வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பெற்றது.
நிகழ்ச்சி சரியாக 4 மணிக்குத் தொடங்கி, 5.30க்கு முடிந்தது. இவ்வளவு துல்லியமாக நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சரவெடி ஸ்ரீதர் என்பவரை இந்த நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவர், தன் சரவெடி ஸ்ரீதரின் ஜோக்ஸ் 100 என்ற புத்தகத்தை எனக்கு வழங்கினார். அதைப் புரட்டியதில், சொல் விளையாட்டுப் போல், மொழி அடிப்படையிலான நகைச்சுவையை அதிகம் கண்டேன்.
அதில் சில சிரிப்பு வெடிகள் இங்கே:
ராம்: அந்தப் பாகவதர் கச்சேரில சுமாரா எத்தனை பாட்டு பாடுவார்?
ரஹீம்: எல்லாப் பாட்டுமே சுமாராத்தான் பாடுவார்.
================================
ரோகிணி: வேலைக்காரி ஏன் குண்டா இருக்கா?
மைதிலி: தினமும் பெருக்கணும்னு சொன்னேன். அவ அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டா.
================================
சங்கரன்: பத்திரிகைகாரங்களுக்கு ஏன்தான் இப்படி மேட்டூர் தண்ணீ மேல கோபம்னு தெரியலை?
கோமதி: என்ன காரணம்?
சங்கரன்: பின்னே என்ன சார், எப்ப பாத்தாலும் மேட்டூர் நீர் மட்டம்னே எழுதறாங்களே…
================================
எழுத்தாளர் பாரதி பாலு என்ற நகுபோலியன், லிமரிக் போல், தமரிக் என்ற வடிவத்தில் சில பாடல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி ஒன்றை என்னிடம் வழங்கினார்.
தமாஷ் காவியம், வேடிக்கைப் பாட்டுகள், விகட கவிதைகள்… என்ற கருவில் அமைந்த நகுபோலியன் இயற்றிய தமரிக்கில் ஒன்று இங்கே-
கருப்புப் பணக் கந்தையா கள்ளவோட்டுக் கந்தையா
கட்சி விட்டுக் கட்சி தாவிப் போவதே என் சிந்தையா?
காசுபணம் சேர்க்கத் தான் பொறந்தையா?
கள்ளு வேறே போடுறே நீ மொந்தையா.
காந்தி பேரச் சொல்லிக்கிட்டுக் களவுக்கும் ஒடந்தையா
(தேர்தல் காலத்திற்கு மிகப் பொருத்தமான பாடல்தான், இல்லையா?)
===============
படம்: சிரிப்பானந்தா