சிறுபிள்ளைத்தனமான மதப் பிரச்சாரம்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalaiசமீபத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் தமிழ் நூல்கள் பலவற்றை ஆராய்ந்து, அவற்றிற்கு எண் கொடுத்து, வகைப்படுத்தும் வேலை கிடைத்தது. இது சுவாரஸ்யம் நிறைந்த வேலையாக இருப்பதோடு சவால் விடும் வேலையாகவும் இருக்கிறது. நிறையப் பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்தப் புத்தகங்கள் எல்லாம் அமெரிக்காவைச் சேர்ந்த இறையியல் பேராசிரியர் ஒருவர் தமிழ்நாட்டிற்கு வந்து ஆராய்ச்சி செய்த போது சேகரித்த புத்தகங்கள். அவர் மறைவிற்குப் பிறகு அவர் மனைவி அவற்றைப் பல்கலைக்கழக நூலகத்திற்குக் கொடுத்துவிட்டார். இவை எல்லாம் எளிதில் கிடைக்காத பழைய புத்தகங்கள். தமிழ் மட்டுமல்லாமல், கிரந்தத்திலும் மணிப்பிரவாளத்திலும் எழுதிய புத்தகங்கள்.

இந்தப் புத்தகங்களைப் படித்த பிறகு, தமிழ் சமய இலக்கிய வரலாறு பற்றி இதுவரை தெரியாத பல விஷயங்கள் தெரியவந்தன. மேலும் எத்தனை பெரிய சிந்தனையாளர்கள் தங்கள் வாழ்நாளையே தங்கள் மதத்தைப் பரப்பச் செலவிட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. அதோடு, தங்கள் மதம்தான் அல்லது நம்பிக்கைதான் பெரியது என்று எப்படிச் சாதித்திருக்கிறார்கள் என்பதும் புலனாகியது.

மனிதன், கடவுளைப் படைத்தானா? அல்லது, கடவுள், மனிதனைப் படைத்தாரா? என்பது பல யுகங்களாக நடந்து வரும் விவாதம். இந்த விவாதத்திற்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறதா, எப்போதாவது தீர்வு காணப்படுமா என்று சொல்ல முடியாது. இந்த விவாதத்திற்கே தீர்வு காணப்படாமல் இருக்கும்போது என் மதம்தான் பெரியது, என் கடவுள்தான் பெரியவர் என்ற விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடவுள் இருக்கிறார் என்ற கட்சியைச் சேர்ந்தவள் நான் என்று சொல்வதைக் காட்டிலும் கடவுள் இல்லாமல் நான் இத்தனை காலம் வாழ்ந்திருக்க முடியாது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். பல ஞானிகள், பல மேதைகள் தாங்கள் நம்பிய மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ பெரிது என்று சொல்வதிலேயே காலத்தைக் கடத்தி வீணாக வாழ்ந்திருக்கிறார்களே என்று நினைக்கிறேன். அப்படி நினைப்பது என் அறியாமையா என்றும் சில சமயம் எண்ணத் தோன்றுகிறது. தங்கள் மதத்தின் மீதோ அல்லது நம்பிக்கையின் மீதோ இவர்கள் வைத்திருந்த அதீத உணர்ச்சிதான் இவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது என்று அறியும்போது இவர்கள் மீது கொஞ்சம் பச்சாதாபம் கூட ஏற்படுகிறது.

மதங்கள் எப்படித் தோன்றின என்று விளக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. தோன்றிய மதங்களைப் பின்பற்றியவர்கள் அந்தந்த மதங்கள்தான் பெரியவை என்று சாதித்து, அதற்காகப் பிரச்சாரம் செய்ததுதான் மடத்தனமாகப் படுகிறது. சைவ மதமும் வைணவ மதமும் ஒன்றாக வளர்ந்துகொண்டிருந்தபோது சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதுதான் பெரியது என்றும், சிவன்தான் எந்த அவதாரமும் எடுக்கவில்லையாதலால் அவர்தான் எல்லோரையும் விட பெரிய கடவுள் என்பதும், அதே சமயம் வைணவர்கள், பல அவதாரங்கள் எடுத்ததால் விஷ்ணுதான் சிவனை விடப் பெரியவர் என்பதும் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான விவாதங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. சிவனையே நேரில் பார்த்தது போல் சைவர்கள் சிவனையும் சிவன் குடும்பத்தையும் வர்ணிப்பதும், விஷ்ணு கடலில் இலக்குமியோடு பள்ளி கொண்டிருக்கிறார் என்று வைஷ்ணவர்கள் கூறுவதும் எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்!

இந்த மதங்கள் இரண்டும் பௌத்த மதத்தையும் ஜைன மதத்தையும் நிந்திப்பது எந்த முறையில் சரியாகும்? மனிதனின் எல்லாக் கஷ்டங்களுக்கும் அவனுடைய ஆசைகள்தான் காரணம் என்று சொன்ன புத்த மதத்தை இந்த இரண்டு மதங்களும் நையாண்டி செய்தது எவ்வளவு தவறு? பிற உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று போதித்த ஜைன மதத்தையும் மற்றவர்கள் கேலி செய்திருக்கிறார்கள். தாங்கள் கண்ணால் பார்க்காத கடவுள்களின் திருவுருவங்களைப் பற்றி இவர்கள் பேசியதைப் போலல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைப் போதித்த பௌத்த மதத்தையும் ஜைன மதத்தையும் இவர்கள் நிந்தித்தது எந்த வகையில் சரியாகும்?

அந்நியர் படையெடுப்பால் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்த முகமதிய அரசர்கள் தங்கள் மதத்தைப் பரப்பினாலும் மற்ற மதங்களை அளவிற்கு அதிகமாக நிந்தித்து நூல் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு வெளியிலிருந்து வந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தையும் இந்து மதச் சம்பிரதாயங்களையும் வெகு வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

நான் படித்த புத்தகங்களில் ஒன்று, ‘கரும் விஷப் பாம்பின் கடிக்கு மருந்து’ என்பது. அதன் தலைப்பை முதலில் பார்த்ததும் பாம்பின் விஷக்கடிக்குப் பல மருந்துகள் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்துப் புத்தகத்தைத் திறந்து படித்தால் எப்படி இந்துமதம் என்ற விஷக் கடிக்குக் கிறிஸ்துவ மதம் என்ற மருந்து பயன்படும் என்று விளக்கிக்கொண்டு போகிறார்கள்! இவர்கள் சொன்ன பிரச்சாரங்களை நம்பி மதம் மாறிய மக்கள், எப்படி தங்களுடைய பழைய பழக்க வழக்கங்களை விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் என்று கண்டித்து இன்னொரு புத்தகம்.

இரக்‌ஷணிய சமய நிர்ணயம் என்று இன்னொரு நூல். இதில் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று திருவள்ளுவரை மேற்கோள் காட்டிவிட்டு, இவர்கள் கிறிஸ்துவ மதம் பற்றி சொல்வதை எல்லாம் கேள்வி கேட்காமல் நாம் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மற்ற எல்லா மதங்களையும் தாறுமாறாகத் தாக்கிவிட்டு தாங்கள் சொல்வது மட்டும் உண்மை என்கிறார்கள். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது கிறிஸ்தவரான எங்கள் உறவினர் ஒருவர் மரங்களையும் மிருகங்களையும் காட்டி, “இந்த மரங்களை உங்கள் முருகனா படைத்தார்? இந்தப் பிராணிகளை உங்கள் முருகனா படைத்தார்? எங்கள் இயேசுவல்லவா படைத்தார்?” என்பார். சரி, முருகன் படைத்தார் என்பதற்கு ஆதாரம் இல்லைதான். ஆனால் இவர்கள் வணங்கும் இயேசுவோ அல்லது அவருடைய கடவுளோ படைத்தார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லையே. இயேசு இந்த உலகில் பிறப்பதற்கு முன்பே இந்த உலகமும் அதில் மனிதர்களும் இருந்திருக்கிறார்களே.

இயேசுவைக் கடவுளின் குமாரர் என்பதும் இராமாநுஜரும் வேதாந்த தேசிகரும் விஷ்ணுவின் அவதாரங்கள் என்று சொல்வதும் எவ்வளவு அறியாமை? இயேசு ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக அவர் பெயரில் ஒரு மதத்தை ஆரம்பித்து மற்ற மதங்கள் எல்லாம் மாயை என்று எப்படிச் சொல்வது? இராமாநுஜரைக் கடவுள் அவதாரம் என்று சொல்பவர்கள் அவர் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றினார்களா? தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதர்களை எத்தனை வைணவர்கள் இன்று தங்கள் வீட்டிற்குள் தடையின்றி அனுமதிப்பார்கள்?  எல்லா மதங்களிலும் மதத் தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாரையாவது இலட்சிய மனிதர் என்று யாராவது சுட்டிக் காட்ட முடியுமா?  இவர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கு உள்ள எல்லாக் கெட்ட குணங்களும் இருக்கின்றன. பின் எப்படி இவர்கள் மகான்கள் ஆவார்கள்?

மதத்தின் பேரில் எத்தனை கொடுமைகள் நடந்திருக்கின்றன, நடந்துகொண்டிருக்கின்றன? மனிதன் உள்ளளவும் மதமும் சண்டைகளும் இருக்கும் போலும்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “சிறுபிள்ளைத்தனமான மதப் பிரச்சாரம்

 1. பெரியவர்களை, மதம் பிடித்து ஆட்டி சிறுபிள்ளைத்தனமாக
  நடக்க வைத்த மதத்தின் சக்தியை என்னெவென்று சொல்லுவது!
  இவ்வுலகில் மதங்களினால் ஏற்பட்ட போரினால் தான் அதிக
  மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. காட்டில் விலங்கு போல்
  வாழ்ந்த மாக்களைப் பக்குவப் படுத்தி மனிதர்களாக மாற்றி
  சாதனை எதுவும் படைக்கவில்லை இம்மதங்கள்! மாறாக
  மதமாற்றங்களில் சாதனை படைத்துள்ளன!திருப்பதி எந்த
  மதத்தைச் சார்ந்தது என்பது முடிவாகவில்லை. எனவே தான்
  வெங்கடேஸ்வரன், வேங்கடகிருஷ்ணன், வேங்கட சுப்ரமணியன்
  என்றெல்லாம் பெயர்கள் வழக்கத்தில் உள்ளன.
  இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.

 2. மதிப்புமிக்க மேடம்,

  கட்டுரை மிக அருமை. ஆனால் மனித வாழ்வே விளையாட்டுகள் நிறைந்த சிறுபிள்ளைதனமான ஒன்றுதானே? ஒருவரை மகான் என்று அழைக்கவோ, கடவுள் என்று அழைக்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அவர் கடவுள் இல்லை, மகான் இல்லை, என்று சொல்வதுகூட ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமானதே!

  தனது மதமே பெரிது, தனது தெய்வமே உயர்ந்தது என்று நினைத்துக்கொள்ளவும், அதே நினைப்பையுடைய மக்களிடத்தே அதைப் பரப்புவதும் தவறே கிடையாது. ஒரு இறைவனிடம் சரணாகதி அடைவதற்கு இது ஒன்றே வழி.

  பல கடவுள்களை ஏற்றுக்கொண்டவர்கள் கூட ஒரு தெய்வத்தைப் பற்றிப் பாடும்போது அந்தத் தெய்வத்தைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்றே பாடியிருக்கிறார்கள்.

  இஸ்லாம் மதம் பரப்பப்பட்டபோது மற்ற மதங்களை நிந்தித்து புத்தகம் எழுதாதிருக்கலாம் குர்ரானில் அல்லாவைத் தவிர வேறு தெய்வம் கிடையாதென்றும் அல்லாவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் காபிர்கள் என்று சொல்வதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  மதத்தை முன்னிருத்திச் சண்டை போடுவதும், மற்ற மதத்தவரைக் கொன்று குவிப்பதும், அடிமையாக்கி மகிழ்வதும் தவறே அன்றி, தனது மதமே உயர்ந்தது என்று சொல்லிக்கொள்வதில் தவறு காண்பது சரியல்ல என்பது எனது கருத்து.

  சிரிப்பானந்தா

 3. முனைவர் நா.அ. “அந்நியர் படையெடுப்பால் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்த முகமதிய அரசர்கள் தங்கள் மதத்தைப் பரப்பினாலும் மற்ற மதங்களை அளவிற்கு அதிகமாக நிந்தித்து நூல் எழுதியதாகத் தெரியவில்லை” என்று எழுதுவது வேடிக்கையாக உள்ளது. அவர் முஸ்லிம் மன்னர்கள் காலத்தில் அடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஹிந்து, பௌத்த, ஜைன கோவில்களையும், கல்வி சலைகளையும் விவரிக்கும் நூல்களைப் படிக்கவில்லை போல் உள்ளது.

  http://www.flex.com/~jai/satyamevajayate/temple1.html
  http://www.flex.com/~jai/satyamevajayate/temple2.html
  http://www.flex.com/~jai/satyamevajayate/temple3.html
  http://www.flex.com/~jai/satyamevajayate/temple4.html

  http://wikiislam.net/wiki/List_of_worship_places_converted_or_destroyed_by_Muslims

  http://koenraadelst.bharatvani.org/index.html

  “இந்தியாவில் சரித்திர இருட்டடித்தல் – முஸ்லிம் மன்னர்களின் நாச செயல்களை மறைத்தல்” என்ற பெயரில் கோன்ராட் எல்ஸ்ட் எழுதியுள்ள கட்டுரையை பார்க்க

  Negationism in India
  Concealing the record of Islam
  By

  Koenraad Elst
  http://koenraadelst.bharatvani.org/books/negaind/index.htm

  விஜயராகவன்

 4. முனைவர் நா.அ., “முகமதிய அரசர்கள் தங்கள் மதத்தைப் பரப்பினாலும் …………………………… ” சாதுவான வார்த்தைகளில், எப்படி ஹிந்து/பௌத்த/ஜைன கோவில்கள் அழிக்கப்பட்டன என்பதைப் படிக்கலாம்; கோவில்களைப் பெரும் அளவில் அழிக்கும் போது, பிற மத நூல்களை நிந்திப்பது நேர விரயமாகும்

  http://voiceofdharma.org/books/htemples1/
  http://voiceofdharma.org/books/htemples2/

  விஜயராகவன்

 5. ‘கடவுளை’ படைத்த மனிதனின் மனம் குறுகியது. மத மாச்சரியத்தால் இற்செறிக்கப்பட்டது. எல்லா மதத்தினரும் தன்னுடைய மதத்துக்கு மலர் தூவி, மற்றோர் மதத்தின் மீது அலர் வீசி வந்துள்ளனர், காலம் காலமாக. திரு.விஜயராகவன் சொல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

 6. “…தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதர்களை எத்தனை வைணவர்கள் இன்று தங்கள் வீட்டிற்குள் தடையின்றி அனுமதிப்பார்கள்?…”

  -கிட்டத்தட்ட எல்லாரும், முனைவரம்மா! குக்கிராமங்கள், பத்தாம் பசலிகள் எல்லாரையும் உங்களது ஸென்சில் வைத்தால், 70% ஆவது தடையின்றி அனுமதிப்பார்கள்.

 7. முனைவர், மதப் பிரச்சாரம் பத்திதான் எழுதப் போறார் என நினைத்தேன். ஆனால், “இயேசுவைக் கடவுளின் குமாரர் என்பதும் இராமாநுஜரும் வேதாந்த தேசிகரும் விஷ்ணுவின் அவதாரங்கள் என்று சொல்வதும் எவ்வளவு அறியாமை?” என்பது மத நம்பிக்கைகளையே விமர்சனம் செய்வதாகும்.

  மத நம்பிக்கைகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால், முனைவர், மத “அறியாம”களின் பட்டியல் போட்டு, எல்லா மதங்களையும் விமர்சிக்கலாம். ஏன் செலக்டிவாக ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்?

  விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *