போய்விடு இறைவா….
தனுசு
இறைவா
நீ என்னை விட்டுப்போ
அப்படியே
எனக்கான உன் கருணையையும் கொண்டுபோ.
இறைவா
உன் இல்லத்தையும் மூடிக்கொள்
அப்படியே
எனக்கான அந்தப் பாதையையும் அடைத்துக்கொள்.
உன்
பரிவும் அருளும்
பங்கு வைத்து பார் முழுக்கக் கொடு
உன்
அன்பும் அணைப்பும்
ஏங்கி நிற்கும் அடியவர்க்கு வழங்கிவிடு.
“வழிபட்டு வாழி” என்ற
உன் மொழி கேட்டு
விழி மூடி
உன் பழியாய்
நான் கிடக்க விரும்பவில்லை.
என்னிலிருந்து
நீ பிழைக்க
என்வழி விட்டு நின்றுவிடு
உன்
எல்லைப் பரப்பு பற்றி எனக்கு கவலையில்லை.
உன் சொர்க்க வாசல்
அதை நீ எனக்கு
தர்மம் செய்து தரவேண்டாம்
வன் நரகமென பயமுறுத்தி
என்னை நீ
உன் பக்கம்
இழுக்கவேண்டாம்.
உன் சக்தி கொண்டு
பக்தி தந்து
பக்தனாக மாற்றிட வேண்டாம்.
சாந்தி என்றும்
சாந்தமென்றும்
முக்தி பெற
சந்தனத்தை பூசவேண்டாம்.
உன் மோகம் தந்து
ஆன்மீகத்தை
என் மீது ஏற்றிடவேண்டாம்
தயவும்
துணையும்
நீயே என
நீயாக மெச்சிக்கொள்ள வேண்டாம்.
மன்னிப்போ
மறதியோ
உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை.
கண்டிப்பாய்
இதை நான் உனக்கு விதிப்பதில்
எனக்கு தயக்கமேதுமில்லை.
ஏனென்றால்….
என் அருகில்
என் தாய் இருக்கிறாள்
அது போதும் எனக்கு.