குறளின் கதிர்களாய்…(330)
![5](https://www.vallamai.com/wp-content/uploads/2020/03/5-2.jpg)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(330)
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.
– திருக்குறள் – 86 (விருந்தோம்பல்)
புதுக் கவிதையில்...
வந்த விருந்தினரை
நன்கு உபசரித்து,
மேலும்
வரவிருக்கும் விருந்தினரை
எதிர்பார்த்து அவரோடுண்ணக்
காத்திருப்பவன்,
மறுபிறப்பில் தேவனாய்
வானிலுள்ளோர்க்கு
நல்விருந்தாய் ஆவான்…!
குறும்பாவில்...
வந்த விருந்தை உபசரித்து
வரும் விருந்தினருடன் சேர்ந்துண்ணக் காத்திருப்போன்,
மறுபிறப்பில் தேவனாய் விண்ணோர் விருந்தாவான்…!
மரபுக் கவிதையில்...
தேடி வந்த விருந்தினர்கள்
திகட்டு மளவில் உபசரித்தே,
நாடி யினிமேல் வரப்போகும்
நல்விருந் துடனே சேர்ந்தேதான்
கூடி உணவது உண்டிடும்நல்
கொள்கை யோடு காத்திருப்போன்,
தேடும் தேவனாய் மறுபிறப்பில்
தெய்வ வானோர் விருந்தாமே…!
லிமரைக்கூ…
வந்திருந்த விருந்தினர் உண்ண உதவி,
உபசரித்தனுப்பி யவரை, வருவிருந்தோடுண்ணக் காத்திருப்பவனைத்
தேடிவரும் வானோர்விருந்தெனும் தேவ பதவி…!
கிராமிய பாணியில்...
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
விருந்தாளிய ஒபசரிக்கணும்,
ஒருகொறயுமில்லாம ஒபசரிக்கணும்..
வந்த விருந்தாளிய
ஒருகொறயும் இல்லாம
ஒபசரிச்சி அனுப்பிட்டு,
வரப்போற விருந்தாளிய எதிர்பாத்து
அவுங்களோடச் சாப்புடக் காத்திருக்கும்
உத்தமந்தான்,
மறுபொறப்புல தேவனாகி
மேல் ஒலகத்தில உள்ளவங்களுக்கு
விருந்தாப் போவானே..
அதால
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
விருந்தாளிய ஒபசரிக்கணும்,
ஒருகொறயுமில்லாம ஒபசரிக்கணும்…!