திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய

திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய | ஸ்வேதா குரலில்

திரைக்கதை எழுதும்போது, காட்சியை அணு அணுவாக விவரிப்பார்கள். எழுத்திலும் குறிப்பார்கள். அந்தக் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், பேசும் வசனம், அவர்கள் அணிந்திருக்கும் உடை, அந்தக் காட்சியில் இடம்பெறும் இதர பொருட்கள் என ஒவ்வொன்றையும் வர்ணித்து, காட்சியை நம் கண்முன் கொண்டு வருவார்கள். இவ்வாறு திரைக்கதை எழுதுவதில் ஆண்டாள், ஒரு முன்னோடி. சங்க இலக்கியத்திலும் இப்படியான வர்ணனைகள், பல உண்டு.

திருப்பாவையின் 19ஆவது பாடலில் ஆண்டாள் இப்படியாக விவரிக்கிறார். அழகு துலங்கும் குத்து விளக்கு எரிகிறது. அதன் சுடரொளி, அறையைப் பேரழகாய் ஆக்குகிறது. எதிரே ஓர் அழகிய கட்டில். அதன் கால்கள், தந்தத்தால் செய்யப்பட்டுள்ளன. கட்டில் மீது மெத்தென்ற படுக்கை. அதன் மீது நப்பின்னை படுத்திருக்கிறாள். அவள் கூந்தலில் கொத்தாக மலர்ந்த வண்ண மலர்கள். அவற்றிலிருந்து நறுமணம் கமழ்கின்றது. அவள் மார்பின் மீது கண்ணன் தலைசாய்த்து, வாய்மூடி லயிக்கிறான். அவன் மார்பில் மலர்மாலைகளைச் சூடியிருக்கிறான். நப்பின்னையின் கூந்தல் மலர்களும் அவன் மார்பில் உதிர்ந்து கிடக்கின்றன.

நப்பின்னையின் கண்களோ, மையால் வரைந்த தடம் கொண்டவை. வாயிலில் தோழிகள் வந்து எழுப்புகிறார்கள். அவளது மை வரைந்த கண்ணைத் திறந்து பார்க்கிறாள். ஆனால், மார்பில் தலைசாய்த்து உறங்கும் கண்ணனை எழுப்பினால், அவன் பிரிந்து சென்றுவிடுவான். எனவே நப்பின்னை அவனை எழுப்ப மறுக்கிறாள். மூச்சையே மெல்ல விடுகிறாள். அவளது மூச்சுக்கு ஏற்ப, அவன் முகம் ஏறி இறங்குகிறது. ‘உனது நலனுக்காகக் கண்ணனை எழுப்பாமல் இருப்பதா? இது நியாயம் இல்லை. உன் இயல்பும் இல்லை’ எனத் தோழிகள் செல்லமாகக் கோபிக்கிறார்கள்.

இந்த அழகிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *