திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள்

திருப்பாவை – 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள் | ஸ்வேதா குரலில்
திருப்பாவையின் 3ஆவது பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என அழைத்த ஆண்டாள், 21ஆவது பாடலில் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறார். பசுவை நினைக்கும்போதே அதன் வள்ளல் தன்மை, ஆண்டாள் நினைவில் எழுகிறது. ஒவ்வொரு முறையும் வள்ளல் பெரும்பசுக்கள் எனப் போற்றுகிறார். இங்கே பெரும்பசுக்கள் என்பதற்கு, அளவில் பெரிய பசுக்கள் எனப் பொருள் இல்லை. பெருமை மிக்க, பேருள்ளம் படைத்த பசுக்கள் எனப் பொருள்.
முந்தைய பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் என்றார். பெரும் குடத்தையே நீட்டினாலும் அதை நிறைக்கின்றது அந்தப் பசு. அது ஒரு வகை வள்ளல் தன்மை. 21ஆவது பாடலில் சிறியது, பெரியது என எந்தக் கலத்தை வைத்தாலும் நிறைப்பதோடு நிறுத்தாமல் வழிய வழியப் பாலைச் சொரிகின்றது. இது இன்னொரு வகை வள்ளல்தன்மை. பக்தர்கள் எத்தகையவராய் இருந்தாலும் அவர்களுக்கு அருள்பொழிகின்ற கண்ணனின் உள்ளத்தை ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார். தமிழமுதை வாரி வழங்குகின்ற வள்ளல் கோதையின் 21ஆவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)