குறளின் கதிர்களாய்…(337)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(337)
அறிவின்மை யின்மையு னின்மை பிறிதின்மை
யின்மையா வையா துலகு.
– திருக்குறள் -841 (புல்லறிவாண்மை)
புதுக் கவிதையில்...
இல்லாமை பலவற்றுள்ளும்
ஒருவனுக்கு
மிக்க இல்லாமை
அறிவில்லாமையாகும்..
மற்றைப்
பொருள் இல்லாமை
போன்றவற்றைப்
பெரிதாய் எடுத்துக்கொண்டு
இகழார் உலகிலுள்ளோர்…!
குறும்பாவில்...
இல்லாமைகளில் கொடிய இல்லாமை
அறிவில்லாமையே, பிற இல்லாமைகளைப் பெரிதுபடுத்தி
ஒருவனை இகழார் உலகோர்…!
மரபுக் கவிதையில்...
அறிவ தொருவனுக் கில்லாமையே
அனைத்திலும் கொடிய இல்லாமையே,
பிறவெலாம் இதனை மிஞ்சிவிடும்
பெரிய இலாமை இல்லையாமே,
உறவுகள் முதலா உடனிருக்கும்
உற்ற பொருளெலாம் இலையெனிலும்
குறையதைப் பெரிதாய் எடுத்தேதான்
குற்றம் சொல்லார் உலகோரே…!
லிமரைக்கூ..
அறிவின்மை வாழ்விலொருவனுக்குக் கறையே,
இல்லாமைகளில் உயர்விதுவே, பிறவற்றைப் பெரிதாயெண்ணி
உலகோர் சொல்லார் குறையே…!
கிராமிய பாணியில்...
பெருசு பெருசு
இல்லாம எல்லாத்திலயும்
ரெம்பப்பெருசு
ஒருத்தனுக்கு அறிவில்லாமயே..
மத்தபடி அவனுக்கு
பொன்னு பொருளுண்ணு
செல்வமெல்லாம் இல்லண்ணணாலும்
அதப் பெருசுபடுத்தி
ஒலகத்தில உள்ளவங்க
ஒரு கொறயாச் சொல்லமாட்டாங்க..
அதால
பெருசு பெருசு
இல்லாம எல்லாத்திலயும்
ரெம்பப்பெருசு
ஒருத்தனுக்கு அறிவில்லாமயே…!