குறளின் கதிர்களாய்…(344)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(344)
தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்.
– திருக்குறள் -464 (தெரிந்து செயல்வகை)
புதுக் கவிதையில்...
தமக்குத் தரக்குறைவு
என்னும்
குற்றம் வருவது குறித்து
அஞ்சும் இயல்புடையோர்,
அமைச்சர்கள் ஆலோசனை பெற்றும்
தாமும் ஆராய்ந்து
என்ன பயனைத்தரும் என்பதைத்
தெளிந்தறியாத செயலைச்
செய்யத் தொடங்கமாட்டார்…!
குறும்பாவில்...
அவமானம் வருவது குறித்து
அஞ்சும் இயல்புடையோர், தெளிவு இல்லாத
செயலைச் செய்யத் தொடங்கார்…!
மரபுக் கவிதையில்...
செயலால் தமக்கே இழுக்கதுதான்
சேரு மென்றே அஞ்சுகின்ற
இயல்பைக் கொண்ட ஆட்சியாளர்,
ஈடு பாடு மிகக்கொண்டே
அயலார் அமைச்சர் என்றுநன்றாய்
ஆராய்ந் தறிந்து தெளிந்திடாமல்
செயலின் பலன தறியாமல்
செய்யத் தொடங்க மாட்டாரே…!
லிமரைக்கூ..
அவமானம் வருவதற் கஞ்சியே
செல்லார் செயல்தொடங்க, செயலதன் தன்மைகள்
ஆய்ந்து தெளிந்ததை மிஞ்சியே…!
கிராமிய பாணியில்...
செயல்படணும் செயல்படணும்
எதயும்
தெரிஞ்சி செயல்படணும்,
நல்லாத்
தெளிஞ்சி செயல்படணும்..
செய்யப்போற செயலாலத்
தமக்கு அவமானக்
குத்தம் வந்துருமோண்ணு
பயப்படுற கொணமுள்ள ராசா,
மந்திரிமாரோடக் கலந்தாலோசிச்சித்
தானும் நல்லா ஆராஞ்சறிஞ்சித்
தெளியாம அந்தச்
செயலச்செய்யத் தொடங்கமாட்டார்..
எப்பவுமே
செயல்படணும் செயல்படணும்
எதயும்
தெரிஞ்சி செயல்படணும்,
நல்லாத்
தெளிஞ்சி செயல்படணும்…!