சேக்கிழார் பாடல் நயம் – 123 (ஆளுடை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

எறிபத்தர்  வரலாற்றின்  நிறைவுப்  பகுதி இது. யானை, பாகருடன் கொல்லப் பட்டுக்  கிடந்ததையும் எறிபத்த  நாயனார்  சினம்பொங்க நின்றதையும்  கண்ட அரசர்,  அவர்முன் சென்று இவ்வாறு வெட்டிக் கொன்றது எதனால்? எனக்  கேட்டார்.  உடனே  எறிபத்தர் தேவர்களின் தேவராகிய ஈசரின் அன்பர் சிவகாமியாண்டார் இறைவனுக்குச்  சாத்தக் கொண்டுவந்த மாலையை, இந்த யானை தும்பிக்கையால்,பாகர் தடுத்தும் சிதற வீழ்த்தியது. அதைக்கண்டு  சினந்து நானே இதனையும் பாகரையும் வெட்டிவீழ்த்தினேன்.

என்றார். அதுகேட்டமன்னன் அஞ்சியபடி  அடியாரைப்பணிந்தான்.இவ்வாறு சிவாபராதம் புரிந்த யானையின் உரிமையாளனாகிய என்னையும் கொல்வதேமுறை! உங்கள்   கையில்  உள்ள நல்ல  மழுவால் கொல்லுதல் தகாது! என்   கைவாளால்  கொல்லுக என்று நல்ல தீர்வுக்காகத் தம்வாளை உருவித்தந்தார்.

அதைக்கண்ட எறிபத்தர், சிவபெருமான்  பால் இவர்  கொண்ட அன்புக்கு ஓர் அளவேஇல்லை; என்றெண்ணி அந்த வாளை வாங்காமல், சற்றுயோசித்து, வாங்கா விட்டால், அரசரே  தம்மைக் கொன்று கொள்வார், என்றெண்ணி ‘’இவர்தந்த  வாளால் இவரைக் கொன்று நான்  செய்யவிருக்கும் பிழையை நீக்க இவரால் உதவி  செய்யப்பெற்றேன்! தம்களிறும் பாகரும் மடிந்த பின்னும் உடை வாளைத்  தந்து என்பிழைநீங்க என்னையும்கொல்க!’’ என்ற அரசருக்கும்தீங்கு நினைத்தேனே, என்று எண்ணி, முதலில் என்னுயிரை நீக்கிக் கொள்வேன்!  என்று  அந்த வாளால்  தம்கழுத்தை அரிய முற்பட்டார். ‘’ஆகா!  இப்பெரியோரின்   செயல் எத்தகையது? நான்  கெட்டேன்!’’ என்று விரைந்து அடியாரைத்  தடுத்து வாளுடன்  கரத்தையும்  இறுகப்  பிடித்துக்  கொண்டார்.

இருவரும் விடாமல் முயன்றபோது, அன்பர்களின் பரிவால் வந்த துன்பத்தை நீக்கும்படி, கழுத்தில் கருத்த விடமேந்திய கருணையாளராகிய  இறைவன் அருளால், வானில் ஓர்ஒலி எழுந்தது! வணங்குதற்கு உரிய சிவபத்தித் திறத்தால் சிறந்தஉங்கள் தொண்டின் சிறப்பை உலகமே அறிந்து  கொள்ளும்  வகையில்,    கூத்தப்பிரான்  அருளால் இன்று இந்த யானை அடியாரின் மலரைத்  தள்ளியது!’’ என்ற  அளவில்  பாகரும் வெட்டுப்பட்ட  யானையுடன்  பிழைத்து  எழுந்தனர்! கழுத்தில் வைத்தவாளைக் கைவிட்டு எறிபத்தரும், மன்னரும் இறைவன்திருவடி போற்றிப்  பணிந்தனர்! அப்போதுவிண்ணவர் பூமழை பொழிந்தனர். வானில் எழுந்த ஒலியை இருவரும்போற்றும்போதே, பூக்கூடையினுள் இறைவனுக்கு உரிய மலர்மாலை  நிறைந்தது; அத்திருவருளைக் கண்டு சிவகாமியாண்டார் திகைத்து எழுந்துநின்றார்!

தேன் நிறைந்த வெற்றிமாலை யணிந்த மன்னன்முன்னே உறக்கத்திலிருந்து எழுந்தாற்போலே  முட்டிப்போர்புரியும் ‘பட்டவர்த்தனம்’  என்றயானையை நோக்கிப்  பாகர்கள் வந்தனர். அடியாரும்  ‘’அரசே! அடியேன் மகிழும்படி இந்த யானை மேல் ஏறி வருக!’’ என்றார். அவ்வாறே குதிரைமேல் வந்த  அரசரும் செய்தார்! அப்போது  மக்களின் வாழ்த்தால்  எழுந்த  பேரொலியால்  உலகமே மகிழ்ந்தது! இறைவன் திருவடியைத் தலைமேற்கொண்டு சோழ மன்னனும் அரண்மனை புகுந்தான்  .பூக்கூடை தாங்கிய  சிவகாமி யாண்டார் திருக்கோயில் சேர ,   எறிபத்தரும் சோழவரசன்  பெருமையைப் போற்றித் தம்  தொண்டினைத்  தொடர்ந்து செய்து, கயிலை மலையில் சிவகணத் தலைமை   பெற்றார். அவர் செய்த  வலிய தொண்டே சிவதன்மம் ஆகும் என்பதைத்  திருக்களிற்றுப் படியார் என்றசாத்திரம்,

“மெல்வினையே யென்ன வியனுலகு ளோர்க்கரிய
வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் – சொல்லிற் சிவதன்மமாம்”

என்று கூறுகின்றது. இதனைச்   சேக்கிழார்,

ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளும் மற்று அவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கில் அன்றி,
நீளும் இத் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்

என்ற பாட்டில் கூறுகிறார். இதன் பொருள் ஆளுடைய தொண்டராகிய எறிபத்த நாயனார் செய்த வீரச் செயலினையும், தம்மையுங் கொல்லும்படி தமது உடைவாளையுங் கொடுத்து நின்ற சோழனாரது பெருமையினையும், நாளும்நாளும் அவர்க்கு அருள்கள் நல்கும் நம்பராகிய இறைவர் தாமே அளந்தாலன்றி, நீளச் செல்கின்ற இந்தத்  திருத்தொண்டின் தன்மைகளை நினைக்குமிடத்து யாவர் அளக்கும் வன்மையுடையா ராவர்? (ஒருவருமிலர்.)

விளக்கம்:

ஆளுடைத் தொண்டர் என்றதொடர் தாம் அடியார்க்கு ஆளாகவும் தம்மை அவர்களது உடைமைப் பொருளாகவும் கொண்ட தொண்டர் என்பதைக் குறித்தது

அடுத்து, ஆண்மை – வீரச் செயல். அதாவது யானையின் பலமும், அதுவும் மதங் கொண்டதும், பாகரும் பலராய்ப் பெரிய அரசரின் வலிய சார்பு கொண்டதும், தமது தனிமையும் முதலிய ஒன்றும் எண்ணாது திருத்தொண்டினுக்குச் செய்த அபசாரம் ஒன்றினையே கருதிச் செய்த தீரச் செயலை இங்கு  எண்ணுக.

நல்கும் நம்பர்தாம் அளக்கில் அன்றி  என்றதொடரை,

“அன்புடையாரை அறிவன் சிவன்”,

“அழுதுகாமுற்று  அரற்றுகின் றாரையும்,
எழுதும்  கீழ்க்கணக்கு  இன்னம்பரீசனே”,

“விடமுண்டவெம் அத்த னார்  அடியாரை யறிவரே”,

என்பன  விளக்கும்!  அளத்தல் – அளவிட்டறிதல்.

நீளும்  என்றசொல்,  எஞ்ஞான்றும் எவ்விடத்தும் பொருந்த நீள்கின்ற என்ற பொருள்தந்தது. தத்தம் பயன்களைத் தந்து அழியும் பசு புண்ணியங்கள் போலன்றி, அழியாது பெருகும். ஆண்மையும் பெருமையும் தொண்டின் திறங்கள் என்பதாம்.

யார் அளக்க – வல்லார்? வினா ஒருவருமிலர் என்று குறித்தது. அளக்கவல்லார் என்றது அளந்து இனைத்து என்று அறிவால் நிச்சயிக்கும் வன்மையுடையா ராதலை.

மேற்பாட்டில் வரலாற்றை  நிறைவு செய்த ஆசிரியர், இவ்வரலாற்றில் நிகழ்ந்த தொண்டின் நினைப்பரிய பெருமைகளைச் சிந்தித்துக் கொண்டு அதில் தாம்பெற்ற அற்புத உணர்ச்சியை இதனைக் கற்போருக்கும் அழகு பெற ஊட்டுகின்றார். இவ்வரலாறு ஆசிரியர் கற்பித்த கற்பனையாய் இதன் அருமை பெருமைகளை உணர்த்தி நின்றது.

About திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

கல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்; பணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி - 620 002 (36- ஆண்டுகள் - 2001 பணி நிறைவு) இலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல் சிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்   பெற்ற விருதுகள் : 1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98 2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்) 3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்) 4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை 5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம் 6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம் 7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம் 8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை) 9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம். 10. தமிழ் இலக்கிய சேவாரத்னா - 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் ) எழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்) 2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா) 3. மொழியும் பொருளும் (மணிவிழா) 4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004 5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்) 6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு) 7. பாரதியின் பேரறிவு 2011 8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை) 9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்) 10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்) 11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்) 12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும் சொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா.. சொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க