செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(351)

குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
னென்ன பயத்தவோ கண்.

– திருக்குறள் – 705 (குறிப்பறிதல்)

புதுக் கவிதையில்...

முகம் கண் போன்றவற்றின்
குறிப்பால்
மற்றொருவனின்
மனக் குறிப்பை
அறிய முடியவில்லையெனில்,
ஒருவனின்
உறுப்புகளுள் சிறந்தனவாம்
கண்களால்
என்ன பயன்…!

குறும்பாவில்...

முகக் குறிப்பால் ஒருவனின்
அகக் குறிப்பை அறியமுடியவில்லையெனில், உறுப்புகளுள்
சிறந்த கண்களால் பயனில்லை…!

மரபுக் கவிதையில்...

முகமொடு கண்கள் போன்றவற்றில்
முகிழ்க்கும் குறிப்பின் அடிப்படையில்
அகத்தி லொருவன் கொண்டுள்ள
அத்தனை உள்ளக் குறிப்பினையும்
புகுந்து சென்றே அறிந்ததனைப்
புரிந்திட இயலா நிலையதனில்,
முகத்தி லிருக்கும் உயருறுப்பாய்
முதலுள கண்களால் பயனிலையே…!

லிமரைக்கூ...

ஒருவன் கொண்டதை அகத்தில்
முகக்குறிப்பில் அறிந்திட இயலாதபோது, உயருறுப்பாம்
கண்களால் பயனிலை முகத்தில்…!

கிராமிய பாணியில்

அறியணும் அறியணும்
குறிப்பால அறியணும்,
அதுதான் கண்ணுக்கழகு..

ஒருத்தன் மனசுல உள்ளத
அவன் பார்வயவச்சி
மொகக் குறிப்பவச்சி
கண்டுபுடிக்க முடியாத
நெலமயில,
ஒடம்புலவுள்ள உறுப்புகளுல
ஒசந்த உறுப்பான
கண்களால பயன்
ஒண்ணுமில்ல..

தெரிஞ்சிக்கோ
அறியணும் அறியணும்
குறிப்பால அறியணும்,
அதுதான் கண்ணுக்கழகு…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *