குறளின் கதிர்களாய்…(359)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(359)

பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

– திருக்குறள் – 1083 (தகையணங்குறுத்தல்)

புதுக் கவிதையில்...

எமன் என்று
எல்லோரும் சொல்வதை
என்னவென்று அறியேன்
முன்னதாக..

இப்போது தெரிந்துகொண்டேன்,
பெண்ணிற்குரிய
நற்குணங்களுடன்
பெரிதாய்ப்
போரிடும் கண்களையும்
கொண்டதுதான்
எமன் என்பதை…!

குறும்பாவில்...

அறியாதிருந்த கூற்று என்பதை
அறிந்துகொண்டேன் இப்போது, பெண்ணின் குணங்களுடன்
போரிடும் கண்களையும் கொண்டததுவே…!

மரபுக் கவிதையில்...

கூற்றென் றுலகோர் கூறுவதைக்
கொஞ்சங் கூட அறியாமல்
நேற்று வரையில் நானிருந்தேன்
நெருங்கி யதனை இன்றறிந்தேன்,
ஏற்றுக் கொள்ளத் தக்கதாக
இருக்கும் பெண்ணின் குணத்துடனே
ஆற்றும் அமரில் போரிடவே
அழகுக் கண்கள் கொண்டதுவே…!

லிமரைக்கூ...

அறியாமல் இருந்தேன் நேற்று
அறிந்தேனின்று, அரிவை குணத்துடன் போரிடும்
கண்களுடன் காண்பது கூற்று…!

கிராமிய பாணியில்...

எல்லாரும் சொல்லுற
எமனுண்ணா என்னண்ணு
இதுவரத் தெரியாமத்தான்
இருந்தேன்..

இப்போ தெரிஞ்சிக்கிட்டேன்,
பொம்புளக்கி உள்ள
நல்ல கொணங்களோட
சண்ட போடுற கண்களக்
கொண்டதுதான்
சாகவைக்கிற எமனுண்ணு…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க