பாஸ்கர்

அது ஒரு ஆறடி முகக் கண்ணாடி
பெல்ஜியம்டா என்பார் தாத்தா சில சமயம்
கப்பல்ல வந்ததுடா  என்பார் அப்பா

நாராயணா என நின்றவாறு வீழ்ந்தார் தாத்தா ஓர் நாள்
அப்பா நின்று அரைக்கால் சட்டையோடு தலை சீவுவார்
கிருதாவை அளவு பார்த்து, தானே சிரித்துக்கொள்வார்
கை நடுக்கத்திலும் கடைசி வரை அவரே சவரம் செய்தார்

ரெமி பவுடரை வயிற்றில் கொட்டிக்கொள்வது வேடிக்கை
நானும் கூட என் அழகை அவ்வப்போது  ரசிப்பேன்
பாதரசம் போனதனால் பார்ப்போர் பொலிவிழந்தனர்
கண்ணாடியில் கறைகள் பட்டு யாரும்  சீந்தவில்லை
யுவதியைக் கூட ஒரு முறை அது அழகாகக் காட்டவில்லை

ஓர் நாள் அதில் நான் டர்பன்  தாத்தா போல் தெரிந்தேன்
மறுநாள் கண்ணாடியில் சட்டையில்லாத அப்பா வந்தார்
பக்கத்து வீட்டுக் காயத்ரியும் அவ்வப்போது வருவாள்

பழைய சாமான்காரன் இது போலக்  கிடைக்காதென்றான்
நேற்று அதுவே நின்றாவாறே விழுந்து உடைந்தது
இப்போது எல்லாத் துகள்களிலும் என் முகம் தெரிகிறது
பெல்ஜியம்டா சீமா என்ற தாத்தாவின் குரல் கேட்கிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க