குறளின் கதிர்களாய்…(369)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(369)
உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின்.
– திருக்குறள் – 309(வெகுளாமை)
புதுக் கவிதையில்…
தவம் செய்வோன்
தன் உள்ளதால்கூடக்
கணப்பொழுதும்
சினத்தை
நினைக்காமல் இருப்பானாயின்,
நினைத்த
நற்பயன்களையெல்லாம் அவன்
ஒருசேரக் கிடைக்கப்பெறுவான்…!
குறும்பாவில்…
சினத்தை மனத்தாலும் நினைக்காதிருந்தால்
தவம்செய்வோன் தான்நினைத்த நற்பயன்களை யெல்லாம்
ஒன்றாய்க் கிடைக்கப் பெற்றிடுவான்…!
மரபுக் கவிதையில்…
கொடிய குணமாம் கோபமதைக்
கொள்ளா ததையே மனத்தாலும்
நொடியும் நினைக்கா திருந்திட்டால்,
நோற்கும் தவத்தில் உள்ளவனும்
பிடிக்க நினைத்த நற்பயன்கள்
பேற்றை யெல்லாம் பெற்றிடவே
முடியும் ஒன்றாய் சேர்ந்தேதான்
முற்று முண்மை யிதுதானே…!
லிமரைக்கூ…
மனத்தாலும் நினையாதே சினத்தை,
மாதவத்தோன் பெறுவான் ஒன்றாய் நற்பயன்கள்
மனத்தில் நினைத்த இனத்தை…!
கிராமிய பாணியில்…
கொள்ளாத கொள்ளாத
கோவம் கொள்ளாத,
கொடிய கொணமாம்
கோவம் கொள்ளாத..
மனசால கூடக்
கோவத்த
நெனைக்காம இருந்தா,
தவசி கூடத்
தன் மனசுல நெனைக்கிற
நல்ல பலனயெல்லாம்
ஒண்ணாப் பெறுவானே..
அதால
கொள்ளாத கொள்ளாத
கோவம் கொள்ளாத,
கொடிய கொணமாம்
கோவம் கொள்ளாத…!