தொட்டிச் செடி (சிறுகதை)
த. ஆதித்தன்
அது உணவு இடைவேளைக்கு முந்தைய வகுப்பு. வகுப்பறையில் ஆர்வத்தோடு பாடம் நடத்திக்கொண்டிருந்தாள் தன்வி டீச்சர்.
திடீரென சாப்பாட்டு வாசம். யாரோ ஒரு மாணவன் மதிய உணவைத் திறந்ததால் வந்த வாசம் அது.
கோபத்தோடு அனைவரையும் உற்றுப் பார்த்த தன்வி, “டிபன் பாக்ஸ் திறந்தது யாருனு மரியாதையா சொல்லிடுங்க” என்றார். யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கத்தித் தீர்த்துவிட்டாள். இயல்புக்கு வந்து வகுப்பினைத் தொடர பத்து நிமிடம் ஆயிற்று.
கரும்பலகையில் தன்வி எழுதும்போது இரண்டாம் வரிசையில் இருந்து மெதுவான பேச்சுக்குரல். யாரென மிகச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவேசமாகி அடங்கினாள். மீண்டும் ஐந்து நிமிடம் வீணாயிற்று.
பாடம் தொடர்கையில், நான்காவது வரிசையாக இருக்க வேண்டும் வைபரேட் மோடில் ஏதோ ஒரு மொபைல் ஃபோன் அதிரும் உணர்வு. இவள் பார்வையைத் திருப்ப…. அமைதியானது ஃபோன். “ஃபோனை மரியாதையா குடுத்திட்டீங்கனா…. போகும்போது குடுத்திடுறேன். நானா எடுத்தா இந்த வருசம் முழுதும் கிடைக்காது”. என்னன்னமோ பேசியும் யார் ஃபோன் என்பதை அறிய இயலா ஆத்திரத்தை அடக்கி, அறிவுரை கூறி முடிக்கையில் வகுப்பும் முடிந்தது. போராட்டம் போல் தோன்றினாலும், வகுப்பறையை விட்டு வெளிவரும்போது திருப்தியுடன் மனது.
இந்நிகழ்வுகளை அசைபோட்டபடியே நேரலை இணையவழி வகுப்பிற்காகக் கணினியை இயக்கினாள் தன்வி. அறையினைச் சிக்கெனப் பூட்டியபடி தடையில்லாமல் பாடம் நடத்தினாள் தன்வி. மிக நன்றாக நடத்தினாலும் ஏனோ உயிர்ப்பில்லாத உணர்வு.
கணினியை அணைத்துத் திரும்புகையில் கண்ணில் பட்டது அறைக்குள் இருந்த தொட்டிச் செடி. அழகுக்காய் வெட்டப்பட்டு செடியாய் மாறியிருந்தது அந்த மரம். சன்னல் திறந்தாள். வெளியே உயர்ந்து வளர்ந்த மரம். அதில் அணில் பழத்தைத் தின்றபடி…, குருவிகள் சலசலப்புடன் மரத்தினுள் மறைந்து விளையாடின…, காற்றின் வருடலில் கிளைகள் அசைந்தன.