போர்க்கலைகள் பயிலல் – 8

மீனாட்சி பாலகணேஷ்
(புதிய பருவங்கள்- ஆண்பால் பிள்ளைத்தமிழ்)
பாடலே பெறாத புதிய பிள்ளைப்பருவங்கள் எனும் இத்தொடரில் நாம் வளர்ந்துவரும் பெண்மக்கள் சிறுபருவத்திலிருந்தே விளையாட்டாகவோ உண்மையாகவோ பயிலும் கலைகளைக் கண்டோம். இப்போது ஆண்மக்களுக்கான பருவங்களைக் காணலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் கடவுளர்கள் மீதே (முருகப்பெருமான், திருமாலின் அவதாரங்கள்) பாடப்பட்டுள்ளன. சிலவே அரசர்கள் மீது பாடப்பட்டவை (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், முதலியன). இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் முருகன், திருமால், அரசன் குலோத்துங்க சோழன் ஆகியோரின் வீரதீரப் பிரதாபங்கள் பல இடங்களில் பல பருவங்களில் பொருத்திப் பாடப்பட்டுள்ளன. பிள்ளைத்தமிழுக்கு இலக்கண நூல்கள் வகுத்துக் கூறும் பல பருவங்களுள் ‘கச்சினொடு சுரிகை காமுறப்புனைதல்’ என்பதும் ஒன்றாகும். இதனைக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் ஒருவரே மூன்றே மூன்று பாடல்களில் உடைவாள் செறித்தல் என்று நயமுறப் பாடியுள்ளார். (உடைவாள் செறித்தல், மீனாட்சி பாலகணேஷ், வல்லமை இதழ்)
எனது குறுகிய வாசிப்பில், அரச குடும்பத்து ஆண்மக்கள் போர்க்கலை பயில்வதனை எந்தக்காப்பியத்திலும் விளக்கியதனைப் பற்றி அறியேன். தெரிந்த பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் பெரிதும் நன்றி பாராட்டுவேன்.
எந்தக்கலையையும் இளம்வயதிலேயே குழந்தைகளுக்குப் பழக்குவார்கள். கல்வி, இசை, நடனம், சித்திரம், சாத்திரங்கள் முதலியன. போர்க்கலை மட்டும் இதற்கு விதிவிலக்கல்லவே! ஆகவே கார்த்திகைப்பெண்களால் வளர்க்கப்பட்டு வரும் சிறுமுருகன், வில், வாள்வீச்சு பயின்று, குதிரை, யானையேற்றம் பயில்வதனைப் பாடி மகிழப் போகிறோம். யார் முருகனுக்கு ஆசான்? அவரைப் பெயரிடாமல் ஆசான் என்றே கூறுவோம். தந்தைக்கே ஆசானான அண்ணலுக்கு நாம் யாரை ஆசான் எனக்கொள்வதாம்?
நீலமயில் மீதுலவு நெட்டிலைவேல் மயிலோனே!
ஆலகால முண்டவனின் அருள்பெரு குங்குமரனே!
வேலைவீசி கிரவுஞ்சவெற்பைப் பொடித்தவ னேகடம்ப
மாலைதவழ் மார்பனே! மடக்குறத்தி மணாளனே!
தாயுமையாள் கைதந்த ஆயுதத்தைக் கொண்டந்த
மாயவவுணர் கூட்டத்தைச் செற்றொழித் துத்தொல்லை
யோயவெஞ்சி னங்கொண்டக் கூட்டத்தை வேரறுத்த
மாயவன்திரு மருகா! மகிழ்வள்ளி மணவாளா!
போர்க்கலை பயின்றதெங்கோ! பயிற்றுவித்த துவும்யாரோ!
கார்க்காலமே கங்கள்போலெழு கயவன்மேற் கணையேவி
யேர்க்கோல உலகமது எழில்கொண் டேற்றமுற்றிலங்க
ஆர்க்கும்நல் சேவறனை யிரதத்தின் கொடிகொண்டாய்!
வீரத்திரு மகனே! வெற்றிவடி வேலனே!
சக்தியுமை பாலனே!
ஆரத்தழு விடவுன் அருமைத் திருவடியை
ஆவல்மிகப் பெருகுதே!
நேரம்சென் றிடுதே! வீரம் தனைப்பாட
என்நாவால் இயலாமை
யோரம்நின் றுந்தன் ஓங்கும் வீரத்தை
ஒண்டமிழால் போற்றுவேன்!
எத்தனையோ முறை முயன்றும் முருகப்பெருமான் போர்க்கலை பயின்ற திறத்தைப் பாடல்களில் வடிக்க இயலவில்லை. இதுவும் முருகன் திருவிளையாடல் போலும்! என் இயலாமையைக் கூறியே அவன் போர்த்திறத்தைப் போற்றிச் சில பாடல்கள் புனைந்துள்ளேன். அனைத்தும் அவன் கருணை!