குறளின் கதிர்களாய்…(376)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(376)

உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை
பெறினு மிழப்பினு மென்.

– திருக்குறள் – 812(தீ நட்பு)

புதுக் கவிதையில்

பயன் தனக்கு உள்ளபோது
பொருந்தி நட்பில் இருந்தும்,
பயன் இல்லாத போது
பிரிந்தும் சென்றுவிடும்
பெருத்தமிலாதார் நட்பைப்
பெற்றால் என்ன
இழந்தால் என்ன,
எல்லாம் ஒன்றுதான்…!

குறும்பாவில்

பயனிருந்தால் நட்புக்கொண்டும் இலாதபோது
விலகியும் இருப்பதில் இணையற்றவர்கள் நட்பினைப்
பெற்றாலும் இழந்தாலும் ஒன்றே…!

மரபுக் கவிதையில்

தனக்குப் பயனே கிடைக்குமெனில்
தானே நட்பில் வந்துசேர்ந்தும்
நினைத்த படியே நன்மையெதும்
நேரில் கிடைக்க வில்லையெனில்
தனக்கு வேண்டாம் நட்பெனவே
தவிர்த்துச் செல்லும் வல்லமையில்
தனக்கு நிகரே யிலார்நட்பும்
தந்த யிழப்பும் ஒன்றுதானே…!

லிமரைக்கூ

பயனதில் நட்பில் என்றே
சேர்ந்தும்,  இலையெனில் விலகிடும் பொருந்தார்
நட்பும் இழப்பும் ஒன்றே…!

கிராமிய பாணியில்

வேணும் வேணும்
நல்லவுங்க நட்பு,
வேண்டவே வேண்டாம்
கெட்டவுங்க தொடர்பே..

தனக்கு நல்லது கெடச்சா
நடபுல ஒட்டிக்கிட்டு,
இல்லயிண்ணா நட்பவிட்டு
வெலவுகிற பொருத்தமில்லாதவன்
நம்மோட நட்புல இருந்தாயென்ன
போனாயெனன்ன,
ரெண்டுமே ஒண்ணுதான்..

அதால,
வேணும் வேணும்
நல்லவுங்க நட்பு,
வேண்டவே வேண்டாம்
கெட்டவுங்க தொடர்பே..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.