சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்

முனைவர் ப. நாக பூஷணம் , M.A ., M.L., Ph.D.


ஒவ்வொரு துறையும் ஒரு கடல் எனக்கொண்டால் அனைத்துத் துறைகளும் சங்கமிக்கும் ஒரு இடம் சட்டம் ஆகும்.  இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் அது நமக்குக் காக்கும் கவசமாக மாறுகிறது. அதுவே அறியாமை , பேராச ,அலட்சியம் , ஆகியவற்றின் காரணமாக இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் போது நமக்கு நாமே பள்ளம் பறித்துக் கொள்கிறோம். தட்பவெப்ப நிலை அளவு மீறல, இயற்கைச் சீற்றம் ,ஆகியவற்றை நாமே அழைக்கிறோம்.

இயற்கை சார்ந்த சட்டங்கள் பல இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் நிலை தடுமாறி , சுயநலமே உருவாகும் போது நேரும் அனர்த்தங்கள் அளப்பரியன. சிந்தனையும் செயலும் வேறுபட்ட காரணங்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்லுதல் ,சொல் வேறு செயல் வேறாதல் , பொறுப்பற்றோர் பொறுப்பில் அமர்தல் , காக்கக் கிடைத்த அதிகாரத்தைத் தாக்கப் பயன் படுத்துதல், என இன்றைய உலகின் நிலை கவலை அளிப்பதாய் இருக்கிறது. இந்நிலையில் தான் சட்டங்கள் அவசியமாகின்றன.

சட்டம் என்ற இச்சொல்லை இன்று பலவற்றையும் குறிக்கப் பயன் படுத்துகின்றனர். law , legislation , enactment , lexicon , சட்டச்சொல் அகராதி – செய் கூட்டம் , சட்டம் இயற்றும் அவை – சட்ட சபை ,சட்டப் பேரவை இன்ன பிற. நம் பழந்தமிழ் இலக்கியங்களில் இறை , செங்கோன்மை , நடுவு நிலைமை , முறை என்ற சொற்கள் காணக் கிடைக்கின்றன.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால் சிலப்பதிகாரத்தில் கண்ணகி வழக்குரை காதையில் “இறை முறை பிழைத்தோன் வாயிலோயே” என்று வாயிற் காப்போனைப் பார்த்து கண்ணகி கூறுவதாக அமைந்துள்ளது. திருக்குறளில் செங்கோல் என்ற சொல் 55 ஆவது அத்தியாயத்தில் குறள் 541,542 ஆகியவைகளில் காணக் கிடைக்கின்றது.

நீதி , நியாயம் , நீதி மன்றம் , நியாயாலயம் , விதி , ரிதா , ரீதி முதலிய சொற்கள் வடமொழியில் காணப் படுகின்றன. “Knowledge is power” , அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதால் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டம் குறித்தறியச் செய்வது , சட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது , அறிவார்ந்த சட்டத்துறை வல்லுனர்களின் கடமையாகும்.

எல்லாத் துறைகளையும் போலவே சட்டத் துறையிலும் , தடுத்தல் (Preventive) , காப்பாற்றுதல் ( Protective ) , தண்டித்தல் (  Punitive), திருத்தல் (corrective) ஆகியவை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியவைகள். சட்டத்தை பெருமளவு பகுப்பதானால்( macro level ) இயற்கைச் சட்டங்கள் ( Natural law ) , இயற்றப்பட்ட சட்டங்கள் எனப் பகுக்கலாம். இதையே குறும் பகுப்பாகச் செய்தால் அதன் விரிவு பல்கிப் பெருகும்.  அரசியல் சட்டம் ,  அடிப்படைச் சட்டம் , குற்றவியல் சார்ந்த சட்டங்கள் , உரிமையியல் சார்ந்த சட்டங்கள் , பணி , அதிகார வரம்பு , கடமை ஆகியவை எல்லை மீறினாலோ , செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலோ அவற்றிற்கான தண்டனை இவற்றை சட்டம் நிர்ணயிக்கிறது.  மற்ற துறைகளில் இல்லாத இந்த சட்டமென்னும் கடலிலே மட்டும் காணப்படும் ஒரு விதி என்னவென்றால் , மற்ற துறைகளில் அறியாமை தப்பிக்கச் செய்யலாம் ஆனால் இங்கே “எனக்கு சட்டம் தெரியாது அதனால் தவறு நேர்ந்தது” என்று சொல்லி தப்பிக்க முடியாது. சட்ட அறிவின்மை , தப்பித்தலுக்கான காரணமாக இருக்க முடியாது. (Ignorance of law is no excuse)


தனி மனிதர்கள் அறிய வேண்டிய அடிப்படையான சட்டம் குறித்தவை.

1. அடிப்படை உரிமை – பிறப்புரிமை – விட்டுக் கொடுக்கவோ , தட்டிப் பறிக்கவோ இயலாத உரிமை .வாழ்வாதாரங்களுடன் உயிர்வாழ் உரிமை ( Act 21 )பேசவும் , எண்ண வெளிப்பாட்டிற்கான உரிமை (Act 19)அமைதியான முறையில் ஆயுதங்களின்றி ஓரிடத்தில் கூட்டம் கூடுவதற்கான உரிமை,நாட்டில் விரும்பியவாறு பயணிக்க உரிமை , விரும்பிய பணியாற்ற உரிமை முதலானவை ..

2. குடும்பம் சார்ந்த சட்டம் – (Family Law / Personal Law)  திருமணம் , மண முறிவு, வாரிசு ,சொத்து இறங்குரிமை , வாழ்க்கைத் துணையையும் , மக்களையும் பெற்றோரையும் பராமரிக்கும் கடமை ஆகியவற்றிற்கான சட்ட விதிமுறைகள்.

3. குற்றவியல் , உரிமையியல் , சொத்துரிமை , பணியிடத்தில் உரிமை கடமை என இது போன்ற அடிப்படை சட்டம் குறித்து அறிவோம். அதன் வட்டத்துள் வாழ்வதால் பாதுகாப்பும் , மீறுவதால் நேரும் பரிதவிப்பும் குறித்து அறிவோம்.

இந்தத் தொடர் கட்டுரை/வினா விடை வடிவில் இனி வரும் இதழ்களில் தொடரும்.

 

தட்டச்சு & ஒருங்கிணைப்பு – ஸ்ரீஜா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.