குறளின் கதிர்களாய்…(379)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(379)

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

– திருக்குறள் – 643 (சொல்வன்மை)

புதுக் கவிதையில்

சொல்லும் போது
கேட்டவரைப் பிரிந்து
செல்லாதவாறு
தன்வயப்படுத்தும்
தன்மையுடனும்,
கேட்காதவரும் பகைமறந்து
நட்புடன்
கேட்க விரும்பும் வகையிலும்
பேசுவதுதான் சொல்வன்மை,
அமைச்சருக்கு இது
அமையவேண்டியதாகும்…!

குறும்பாவில்

கேட்டவரைத் தன்வயப்படுத்தும் தன்மையுடன்
கேளாதவரைப் பகைமறந்து கேட்கச்செய்யும் வகையில்
பேசுவதே சிறந்த சொல்வன்மையாகும்…!

மரபுக் கவிதையில்

சொல்லும் சொல்லைக் கேட்டவர்கள்
சொல்லின் ஈர்ப்பால் பிரிந்தேதான்
செல்லா வகையில் சொல்லுவதும்,
சேதி யதனைக் கேளாத
பொல்லாப் பகையைக் கொண்டோரும்
பொருந்தாப் பகையை மறந்துகேட்க
நல்ல வகையில் பேசுவதும்
நன்றாம் சொல்லின் வன்மைதானே…!

லிமரைக்கூ

பேசிடும் பேச்சினைக் கேட்டு
ஈர்ப்புடன் இணைந்திருக்கவும், கேளாதோர் கேட்க
ஆசைப்படும் நல்சொல்வன்மை காட்டு…!

கிராமிய பாணியில்

தெரியணும் தெரியணும்
நல்லாத் தெரியணும்,
எல்லாத்தையும் தெறமயா
எடுத்துச் சொல்லத் தெரியணும்..

மந்திரி சொல்லுறதக் கேட்டவுங்க
பேச்சில மயங்கி மாறாமக்
கூடவே இருக்கிற மாதிரியும்,
கேக்காதவுங்க பகய மறந்து
கேக்க ஆசப்படுற மாதிரியும்
பேசுறதுதான்
நல்ல சொல்லு தெறம..

அதால
தெரியணும் தெரியணும்
நல்லாத் தெரியணும்,
எல்லாத்தையும் தெறமயா
எடுத்துச் சொல்லத் தெரியணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.