குறளின் கதிர்களாய்…(383)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(383)
எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு.
– திருக்குறள் – 467 (தெரிந்து செயல்வகை)
புதுக் கவிதையில்…
தகுந்த செயலைத் தேர்ந்தெடுத்து
தக்க வழிவகைக் கண்டறிந்து
தொடங்கிட வேண்டும்
செயல்படுத்த..
தொடங்கிய பின்னே
தேடுவோம் என்பது
தவறான வழிமுறையாய்த்
தந்திடும் பெரும் இழுக்கே…!
குறும்பாவில்…
செயலைத் தொடங்கிடு
செய்யும் வழியறிந்து,தொடங்கியபின் எண்ணுதல்
என்பது இழுக்கே…!
மரபுக் கவிதையில்…
செய்யத் தகுந்த செயலென்றைச்
செய்திடத் தொடங்கிடு முன்னதனைச்
செய்து முடிக்கும் வழியெல்லாம்
சேர்த்தே அறிந்து தொடங்கவேண்டும்,
செய்யத் தொடங்கிப் பின்னரதன்
செயல்படும் வழியைத் தேடிடுதல்
உய்யும் வகையா யமையாதே
உறுதியாய்த் தவறென முடிந்திடுமே…!
லிமரைக்கூ…
செய்யும் வழிவகையறிந்து முன்னே
செயலைத் தொடங்கிடு, இல்லையெனில் இழுக்காகும்
பார்க்கலாமெனில் தொடங்கிய பின்னே…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
செய்யப்போற செயலப்பத்தி
நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்..
செய்யப்போற செயலத்
செய்யத் தொடங்குமுன்னால
அதப்பத்தி
நல்லாத் தெரிஞ்சிக்கிட்டு
செய்யிற வழிமொறகளயும் அறிஞ்சி
அப்புறமா செய்யத் தொடங்கணும்..
தொடங்கின பொறவு பாத்துக்கலாமுண்ணு
செயலுல எறங்குனா
சேதாரந்தான்..
அதால
செயல்படணும் செயல்படணும்
தெரிஞ்சி செயல்படணும்,
செய்யப்போற செயலப்பத்தி
நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்…!