CERN ATOM SMASHER FRANCE - SWISS BORDER

சி. ஜெயபாரதன், கனடா

ஆடும் அழகே அழகு – தில்லையில் நீ
ஆடும் அழகே அழகு.

ஏடும், பாரத நாடும், பாட நீ
ஆடும் அழகே அழகு, தமிழ்
நாடும்,ஏடும், பாடும், தேடும்
ஆடல் அரசே,கூடல்இறையே நீ
ஆடும் அழகே அழகு.

அணு உடைப்பு ஆய்வக வாசலில்
சூடி வரவேற்கும் பிரஞ்ச் எல்லையில் நீ
ஆடும் அழகே அழகு, அங்குனைத்
தேடும் விஞ்ஞான உலகு.

ஆதி மூலன் நீ !  அகிலம் படைத்தது நீ
அணுவுக்குள் நீ ! அகிலத்தில் நீ !
அண்ட சராசரம் அனைத்திலும் நீ
ஆடும் அழகே அழகு.

ஓங்கார நாதத்தில் ஆங்கார மோடு
தீங்கிழைத்த அசுரன் மேல் கால்வைத்து
ஆடும் அழகே அழகு – கம்பீர மாய் நீ
ஆடும் அழகே அழகு.

நெற்றிக் கண்ணன் ஒற்றைக் காலில்,
ஆடும் அழகே அழகு.
வெற்றி மாலை சூடி முற்றும் அதிர நீ
ஆடும் அழகே அழகு.

ஒரு கையில் அக்கினி ஏந்தி
மறு கையில் உடுக்க டிக்கும் கூத்தாடி நீ
ஆடும் அழகே அழகு. உ்னைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.

ஆதி முதல்வன் நீ !  அண்டக் குயவன் நீ !
ஓதி உணரும் உன்னதம் நீ ! உத்தமன் நீ !
நீதி நெறியுடன் நிறுத்துப் பகிர்பவன் நீ !
வேத ஞானி நீ ! மேதினி செழிக்கநீ

ஆடும் அழகே அழகு,  அவனியில்
நில்லாது, நிற்காது, ஆட்டம் ஆடு !
நீ நின்றால் பூமியே நின்று விடும்
பூகோளம் அழிந்து விடும், தொடர்ந்து
ஆதி சக்தி நீ ஆட வேண்டும், நாம் தினம்
ஓதி உன்னைப் பாட வேண்டும்.

ஆடும் அழகே அழகு. உனைப்
பாடும் சீடரை ஆசீர்வதி நீ.
தேடும் மாந்தரைக் காப்பாய் நீ
சாடும் மனிதரை மீட்பாய் நீ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆடும் அழகே அழகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *