குறளின் கதிர்களாய்…(402)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(402)
இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
-திருக்குறள் -81 (விருந்தோம்பல்)
புதுக் கவிதையில்…
வீட்டில் இருந்து
விரும்பிடும் மனைவி மக்களுடன்
வேண்டிய பொருள்சேர்த்துப் பாதுகாத்து
வாழ்ந்திடும் இல்வாழ்க்கை என்பது,
வரும் விருந்தினரை
வரவேற்று உபசரித்து
வேண்டிய
உதவிகள் செய்து காத்திடத்தான்…!
குறும்பாவில்…
இல்லத்திலிருந்து பொருள்காத்திடும்
இல்வாழ்க்கை என்பது, விருந்துபசரித்துக் காத்து
இல்லையெனாது உதவிடவேதான்…!
மரபுக் கவிதையில்…
மனைவி மக்கள் சுற்றமென
மனையி லிருந்தே தேடுபொருள்
அனைத்தும் காத்தே ஆங்காங்கே
அலைந்தே நடத்தும் இல்வாழ்க்கை
எனநாம் சொல்லும் வாழ்வதுவே,
என்றும் நாடி வருகின்ற
அனைத்து விருந்தும் உபசரித்தே
அவரைப் பேணி யுதவிடவே…!
லிமரைக்கூ…
உறவுடன் மனையில் இருந்தே
பொருள்காக்கும் இல்லறம் என்பதே இதற்காகத்தான்,
உபசரித்துக் காத்திடு விருந்தே…!
கிராமிய பாணியில்…
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
நல்லமொறயில ஒபசரிக்கணும்,
விருந்தாளிய ஒபசரிக்கணும்..
பொண்டாட்டி
புள்ளகுட்டி எல்லாஞ்சேந்து
பொருளக் காப்பாத்த
ஒண்ணாச் சேந்து
ஊட்டுல நடத்துற
இல்வாழ்க்க இதுக்காகத்தான்,
வாற விருந்த நல்லா
ஒபசரிச்சிப்
பாதுகாக்கிறதுக்குத்தான்..
அதால
ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்
நல்லமொறயில ஒபசரிக்கணும்,
விருந்தாளிய ஒபசரிக்கணும்…!