திருப்பூவணப் புராணம் – பகுதி – (13)

கி.காளைராசன்

ஆறாவது

உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்

 

567      தற்பரத்துடன் றிகழ்சவுனகப்பெயர்

முற்றுணரருந்தவமுநிவகேட்டியாற்

சொற்றிடற்கரும்பரிசுத்தமேவிய

நற்கதைதன்னையாநவிற்றுவாமரோ

568      இம்மைநற்றவமுழந்தெம்பிரானிடத்

தம்மைதன்னடியிணையருச்சித்தேத்தியோர்

கொம்மைசேர்வரிமுலைக்கோதில்கொம்பனாள்

கைம்மைநீக்கியமணிகன்னிகைப்புனல்

 

569      முன்னருந்தவம்பலமுற்றியன்னைதன்

பொன்னடிக்கமலத்திற்பூசையாற்றிய

வன்னவள்காதையையறைதிசூதநீ

யென்னலுங்கேண்மினோவென்றியம்புவான்

 

570      துங்கபத்திரையெனுந்தூநதிக்கரை

தங்கியபுண்ணியகிராமந்தன்னில்வாழ்

பங்கயனனையகோபாலனென்றொரு

துங்கவேதியன்மறைக்குலத்திற்றோன்றினான்

 

571      அன்னவன்றன்னிடத்தவதரித்ததோர்

கன்னிமான்கன்னல்வேள்கணைக்கிலக்கனாள்

பொன்னுலகத்தினிற்புலவர்போற்றிட

மன்னியவுலகினில்வந்துதோன்றினாள்

 

572      முந்தைநாளிவளுறின்முகில்வணன்கடற்

செந்திருமாதினைச் சிந்தைகொண்டிடா

னந்துநான்முகனுநாமாதைநண்ணிடா

னிந்திரன்வேண்டிலனிந்திராணியை

 

573      கற்பகஞ்சேர்தருகாமவல்லியோ

கொற்றவில்வேளையாட்கொள்ளுந்தெய்வமோ

வெற்றியந்தணன்புரிமெய்த்தவங்கொலோ

மற்றவடன்னையான்மதிக்கற்பாலதோ

 

574      நிறையிருட்சைவலநீலமாமுகில்

குறைவில்சீர்க்கொன்றையின்கோலந்தாங்கியே

பிறையொடுபெருந்திருப்பிறங்கன்மேலணிந்

தறல்விரிபாளைசேரளகபந்தியாள்

 

575      கொம்மைசேரமுதநற்கோதிலாக்குளிர்

செம்மதிபோன்றொளிர்திருமுகத்தினாள்

வெம்மைநீடியபுகழ்வேனில்வேடிருக்

கைம்மிகுஞ்சிலைநுதற்கவினிலங்குவாள்

 

576      தர்மநற்றாழ்குழைதந்தபொற்புறு

மாமணியூசல்போல்வயங்குகாதினாள்

காமசங்கீதமேகலந்தகாமனூற்

பாமணமொழுகுசெம்பவளவாயினாள்

 

577      சேயுயர்விசும்புறுதிங்கள்போன்றொளிர்

வேயுறுநித்திலம்விளங்குமூரலாண்

மாயவனேந்தியவண்ணவால்வளை

யாயகந்தரத்தினிலமைந்தபூணினாள்

 

578      இனமிகுகயற்கண்மூண்டிகல்செய்யாமலே

துனிவழியடைத்துநேர்துலங்குதுண்டத்தாள்

புனமுறுபசுக்கழைபொருந்துகின்றதோட்

கனவளைதாங்கியகாந்தட்கையினாள்

 

579      கோதில்பூவணத்தினுங்கும்பகோணத்துங்

காதல்கூர்விண்ணவர்கரந்துதாங்கொணர்ந்

தாதிகாலந்தருமமுதகும்பமிப்

போதுசேர்ந்தனவெனப் பொலிந்தகொங்கையாள்

 

580      தூமணிகன்னிகைச்சுழிகொளுந்திமேன்

மாமணிவயிற்றுறுமயிரொழுங்கினாள்

காமருசிறப்புறுகலைவல்லோர்களு

மாமதியாலறிவருமருங்குலாள்

 

581      ஆர்ந்தமாமணிதிகழம்பொன்மேகலை

பாந்தளின்றொகுபணம்பரித்தவல்குலாள்

வார்ந்தநெட்டிலையொடுவயங்குபூங்குலை

சார்ந்திடுமரம்பைநேர்தருகுறங்கினாள்

 

582      கருதரியதாயகற்கடகந்தன்னைநேர்

தருமழகியமுழந்தாள்வயங்குவாள்

கிருதமாலையில்விளையாடுகின்றநற்

றிருமிகுமணிவரால்சேர்ந்தகாலினாள்

 

583      எண்ணுவமேயமுமிசைக்கநின்றெதிர்

நண்ணுவமானமுநடுவினாவினேர்

கண்ணுறநிறப்பவேள்கருத்தமைத்துடன்

பண்ணியபொற்றராசெனும்பாட்டினாள்

 

584      இரதிகாந்தன்கலையெழுதுபுத்தக

மருவியவிருபுறவடிவயங்குவா

ளருளுடனுரியபேடாடல்கொண்டிடும்

பரிபுரவொலிமிகுபதாம்புயத்தினாள்

 

585      நாதவேதம்பயினற்குலாதிப

காதல்கூரின்பநற்கற்பின்மேதகு

மாதராண்மலர்தலையுலகமாண்புற

வோதுமுற்பலாங்கியென்றுரைக்கும்பேரினாள்

 

586      இந்தநல்லுலகினர்யாருமேத்திடச்

சுந்தரமெய்யினிற்றுலங்கிநாட்குநா

ளந்தநன்மடநடையன்னமன்னவள்

சந்திரகலையெனத்தான்வளர்ந்தனள்

 

587      பங்கமோடன்னவட்பயந்துளோர்கடாந்

தொக்கிருந்துளங்களிதுளங்கவோர்நனாண்

மைக்கருங்கண்ணியைமாமணஞ்செயத்

தக்கவர்யாரெனத்தம்மிற்றேர்ந்தனர்

 

588      இன்னணந்தம்முளத்தெண்ணியெண்ணியே

யன்னவரிருவருமாயுங்காலையிற்

றன்னிகரந்தணனொருவன்றான்மகிழ்

மன்னியமணிக்கடைவாயில்சார்ந்தனன்

 

589      மன்றல்செய்விருப்புடைமறைவலாளன்முன்

சென்றவன்சொன்றியீகென்றுசெப்பலு

நன்றுசேரெழிலினைநாடித்தேவனென்

றொன்றியவுள்ளநின்றூசலாடினான்

 

590      பழகியநான்மறைபயிலுமந்தண

னழிவிலாப்பெருந்திருவழகுங்கோலமுங்

குழலுடன்யாவையுங்குறிப்பிற்கண்ணுறீஇக்

கழிபெருங்காதலான்கழறன்மேயினான்

 

591      மேவினையாரைநீமிக்கவன்புகூர்

யாவனின்றந்தையெங்கேகுகிற்றியென்

பாவையுமன்னமும்பரிந்துநல்குவேன்

மாவிரதீயுரைவழங்குகென்னவே

 

592      என்னலுமதற்கிசைந்தின்சொல்வாய்மையாற்

கன்னிசேருவகையங்கடற்குளித்தனன்

றன்னுணர்விழந்துரைதளர்ந்துதேறினன்

பின்னருந்தன்னுடன் பேசலுற்றனன்

 

593      மங்கலமவுட்கலியவிப்பிரன்றரு

திங்கள்போற்கலைமதிசேர்ந்தமைந்தன்யான்

றங்கியபிரமநற்சரியம்பூண்டுளேன்

பொங்குமாதவம்பலபுரியும்புந்தியேன்

 

594      அருமறையங்கமோராறுமாய்ந்துளேன்

குருவருளுடைமையேன்கோதினின்மகட்

டருதியேலென்கையிற்றகுவதாமென

வுரியமோனத்துடனுற்றிருந்தனன்

 

595      ஆங்கவன்மோனமோடிருந்தகாலையிற்

றாங்கரும்விருப்புடன்சார்ந்துதன்மனை

வாங்குவினுதலியைவரவழைத்தனன்

பாங்குடையந்தணன்பகர்தலுற்றனன்

 

596      நம்பெருந்தவத்தினானமதுகற்பகக்

கொம்பினைமணஞ்செய்வான்குறித்தொரந்தண

னிம்பரினடைந்தனனிருக்கின்றானென

வம்புலாமுலையவண்மகிழ்ந்துவாழ்த்தினாள்

 

597      அங்கதுபோழ்தினினரியகேதனந்

தங்குபூம்பந்தர்கள்சமைத்துச்சார்ந்தநற்

பங்கமில்பல்லியந்துவைப்பப்பாவைதன்

மங்கலமணவணிமரபினாற்றினார்

 

598      அறுசுவையடிசிலந்தணர்கட்காற்றியே

மறைவழிமணமகன்மலர்ப்பதங்கழீஇ

யறையிருகரங்களினளிக்கமாதொடுங்

குறைவில்சீர்மனைமிசைக்கொண்டுசேர்த்தினார்

 

599      தாவில்சீர்க்கன்னிகாதானநல்குவான்

காவிசேர்தடங்கணாள்காண்டகப்புனல்

பூவுறழ்செங்கையிற்புகாமுனன்குயிர்

மேவியமணமகன்வியோகமாயினான்

 

600      ஆண்டகையுயிர்பிரிந்தவனிசேர்தலு

மாண்டனனென்றுநன்மாதர்மைந்தர்கள்

காண்டலுநடுங்கிமெய்கலங்கியேங்கியே

யேண்டகவெடுத்தணைத்தினிதியம்பினார்

 

601      பொற்கொடிமடந்தையிப்போதுபாக்கியம்

பெற்றிலளென்றுதாம்பேசிப்பன்முறை

மற்றவட்புல்லியேவாய்புலம்பிநின்

றற்புதமெய்தினரரற்றுகின்றனர்

 

602      அந்தணன்மணப்பிரேதத்தையன்பினான்

முந்தைநூல்விதிவழிமுறையிற்கொண்டுதான்

றந்திடுமந்தியச்சடங்கிழைத்தபின்

வந்தனர்தம்பதிவழிக்கொண்டேகினார்

 

603      பளபளத்திளகிநற்படீரகுங்குமக்

களபமுங்கியமுலைக்காமர்கன்னியுந்

தளரிடையன்னையுந்தந்தையும்பெருங்

கிளைஞருநெஞ்சகங்கிலேசமுற்றனர்

 

604      பின்னர்முத்திங்கடான்பெயர்ந்துசெல்லவக்

கன்னியைமணஞ்செய்வான்கருதிச்சேர்ந்தரோ

வன்னவந்தணனுநீரங்கைதாங்குமுன்

றென்னிலைசேருயிர்துறந்துபோயினான்

 

605      மங்கையர்க்கரசியைமாமணஞ்செய்வான்

றுங்கமோடணைகுநர்தம்மைத்தூக்கினோர்

பங்கமிலாதநற்பத்திரட்டியோர்

தங்களாருயிர்தனைத்தணந்துபோயினார்

 

606      மற்றவள்பொருட்டிவர்மாய்ந்தபின்னரே

பெற்றருளன்னையும்பிறங்குதாதையும்

வெற்றுடம்பாகவிண்விரைந்துபோயினார்

பொற்றொடிதான்றனிபுலம்பிவைகினாள்

 

607      நீடியகிளைஞரானிந்தையுற்றனள்

கூடியேயணைதருகொழுநர்க்கூட்டிடும்

பீடுறும்பெரும்புனற்பிறங்குநற்றலந்

தேடியேயெண்டிசாமுகமுஞ்சென்றனள்

 

608      ஓதுநல்லுண்டியுமுறக்கமுங்கடிந்

தேதமிறீர்த்தங்களெங்குமாடியே

போதவிழ்பொழிறிகழ்பூவணந்தனிற்

காதலினடைந்தனள்காமர்கன்னிகை

 

609      படர்ந்தெரியுமிழ்கொடும்பாலைசேர்நில

நடந்திடும்வெம்மையானன்புனற்றரு

தடந்தெரிகுற்றதிதாகமோடுறா

வடந்திகழ்பூண்முலைமடந்தைகண்டனள்

 

610      பண்டருமறையவர்பன்னசாலையும்

புண்டரீகச்செழும்பொய்கையும்புக

ழெண்டகுமிருந்தவரியைந்திலங்குபூந்

தண்டலைசூழ்மணிகுண்டந்தன்னையே

 

611      வெள்ளிடைவெயிலின்மெய்வெதும்பிவேர்வர

வுள்ளநொந்தடிபெயர்த்தியங்கியேயுராய்த்

​தெள்ளுதீம்புனன்மிகப்பருகித்தேக்கியே

யள்ளனீர்த்தடங்குடைந்தாடினாளரோ

 

612      தடமடுமூழ்கியதபோபலத்தினா

னிடைவிழுநாளறவிருந்தவம்புரி

தொடர்வுறுமருள்விடுசோதிதுன்றுமெய்

முடிவறுகாலவமுநியைக்கண்டனள்

 

613      பன்னிருகான்முறைபடிபஞ்சாங்கமாய்

மன்னியபொன்னடிவணங்கிவீழ்ந்தெழீஇ

யன்னவள்கழறலோடணுகலின்றியே

நின்னருள்புரியெனநேர்நின்றாளரோ

 

614      சின்மயமாகியசிவானுபூதிசேர்ந்

தந்நிலைதிரிந்தவனன்னமென்னடைக்

கன்னிகைதன்னைநேர்கடைக்கண்டாக்கியே

முன்னுறுகாதலான்முநிவன்கூறுவான்

 

615      சீர்மிகுமாதராய்சேர்கநன்குநீ

யார்கொலோவெங்கிருந்தேகுகிற்றியா

னேர்தருகணவன்யார்நிற்பயந்தவன்

பேரெதிங்கடைந்ததென்பேசுவாயென்றான்

 

616      அகங்குதுகலிப்பவேயரியமாதவன்

மிகுந்தபேரன்புடன்விளம்பக்கேட்டுள

மகிழ்ந்தனள்பாக்கியவதியும்யானெனாத்

திகழ்ந்தசெம்பவளவாய்திறந்துசொல்லுவாள்

 

வேறு

617      நெடுங்காலந்தவமுழந்துநீள்சடையோனருள்படைத்துநீண்டபார்மேற்

படர்ந்தேறும்பல்புகழ்சேர்பங்கயனையனையதவப்படிவமென்னா

வுடன்சேருமுயிர்த்துணைவருயிர்துறந்துமுயிர்சுமந்திங்குழலுமிக்க

கொடும்பாவியெனதுநிலைகூறரிதாயினுஞ்சிறிதுகூறக்கேண்மோ

 

618      தொன்மறையோர்புகழ்ந்தேத்துந்துங்கபத்திரையெனுமோர்தூநதிப்பான்

மன்னுமதன்கரையின்கண்மருவுபுண்ணியகிராமத்துவாழ்வோன்

கொன்னவிலந்தணர்கோமான்கோபாலன்றந்தகுலக்கொடியேனானே

யிந்நிலத்திற்பிறந்தவன்றேயெல்லோருமேசுதற்கிங்கிலக்காய்நின்றேன்

 

619      இங்கதுவுமிசைக்குவன்கேளெனையளிப்பவெனைப்பயந்தவெந்தையந்தோ

மங்கலமாமறைவிதியின்மணவாளர்செங்கையினின்வழங்கும்வேலைத்

துங்கமுறுமைந்நான்குதுணைவராருயிர்துறந்துதுறக்கஞ்சேர்ந்தா

ரங்கதனாலடியேனுமருங்கணவற்பெறவேண்டியடைந்திட்டேனால்

 

620      முன்னைவினையின்பயனோவிம்மையில்யான்செய்தபவமூண்டதேயோ

கன்னியெனப்பேர்படைத்துங்கலங்கழிந்தகாரிகைபோற்கலங்காநின்றேன்

றன்னிகராகின்றவெழிறாங்குமடமங்கையர்கடங்கண்முன்ன

ரென்னேயோவென்னேயோவின்னமும்யானுயிர்சுமந்திங்கிருக்கிறேனால்

 

621      மிக்கார்வத்துடன்கௌரிவிரதமநுட்டித்துமுன்னைவிதியினாலே

யெக்காலுமிழைத்திடுமுத்தியாபனநீயிழப்பவிமூதியைந்ததென்று

முக்காலமுதலியனமுறையானேமுற்றறிந்துமொழியுமந்தத்

தக்கார்கொளம்முநிவன்ஞானக்கண்ணாலுணர்ந்துசாற்றினானே

 

622      அலர்கதிர்வெய்யோன்றீர்த்தத்தங்கணன்றனருளதனலாடலாலே

நிலவலயந்தனிற்செய்தநீண்டகொடும்பாதகமுநீங்காநின்று

மலிபுகழ்சேரித்தீர்த்தமான்மியத்தினான்மிகுமங்கலமுமாகு

முலகமெலாம்பணிந்தேத்தவுயர்தவநீபுரியும்வகையுரைப்பக்கேண்மோ

 

623      பைந்தடஞ்சேர்தருமுட்டாட்பங்கயப்பொற்பூவினொடுற்பலங்கைக்கொண்டு

மந்திரதந்திரம்பொருந்தவாலுகவேதிகைசதுரம்வகுத்தமைத்தே

யந்தரியையாவாகித்தக்கற்பவிதிபூசையாற்றினின்பாற்

சுந்தரிநேர்வந்துநிற்பொற்சுமங்கலியந்தந்தருளுஞ்சுடர்வேற்கண்ணாய்

 

624      என்றுமுநிவரனிசைப்பவேந்திழைநலிருங்கணவற்பெறுவான்வேண்டி

நன்றிதெனமகிழ்ந்தந்தநன்முநிவனாச்சிரமநணுகிப்பாங்கா

லொன்றியவன்புடன்விதிநின்றுமையாடன்றிருநோன்பையுவந்துநோற்றே

யன்றுடனுத்தியாபனஞ்செய்தருங்கணவன்றனையருளினடைந்தாளன்றே

 

625      இத்தகையதீர்த்தத்தினினிதாடவிடர்ப்பிறவிக்கடற்படாவே

யுத்தமநற்குலத்தினில்வந்துற்பவித்தவுலகமெலாமுவப்பினாலே

நித்திலத்தையொத்தநகைநேரிழைதன்வைதவ்வியநீக்கலாலே

பத்தியுடன்மடவாரும்படிந்தாடக்கடவர்தினம்பரிவிற்பாங்கால்

 

வேறு

626      இடபநல்லிரவிதன்னிலெழிறருமிந்துவாரத்

துடனிகழ்நடுநாளந்தவோடையினாடிமன்னுங்

கடனுறுமிக்ககாமக்கலங்கழிமகளிரானோர்

தொடர்பினால்வருபிறப்பிற்சுமங்கலியாகிவாழ்வார்

 

627      கோதின்மங்கலையாய்க்காதற்கொழுநரைக்கூடுகின்ற

மாதராரந்நீராடின்மகிழ்தருமகப்பேறுண்டாங்

காதலிற்கலந்தகாமர்கன்னியர்கணவற்சேர்வார்

மேதகுத்தியாபனத்தால்விரதநற்பலங்களுண்டாம்

 

வேறு

628      அற்பினோங்குசீரரனடிக்கண்வாழற்புதந்தருமருடவத்தினா

னுற்பலாங்கிதன்கதைபடித்துளோருய்த்துணர்ந்துதஞ்செவிவழிக்கொள்வோர்

கற்குமாண்பினோர்கலியகத்தரோகட்டவெங்கொடும்பவமகற்றியே

மற்றையாண்டையோர்வளமைபெற்றுமேல்வைத்திடுங்கதிமருவுகிற்பரே

உற்பலாங்கி பதியையடைந்த சருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 628

*****

 

 

ஏழாவது

பாற்கரபுரச் சருக்கம்

 

629      தன்னுயர்தவத்தின் மிக்கசவுநகமுனிவவன்பான்

மன்னியவுற்பலாங்கிவண்கதைவகுத்துரைத்தாம்

பன்னுபாற்கரபுரப்பேர்படைத்ததுபகர்வமென்னா

வின்னருட்சூதன்வேதவியாதனையிறைஞ்சிச் சொல்வான்

 

630      காசினியிடத்து மேலாங்காசிபன்றனக்குமிக்க

வாசிலாவழகுபூத்தவணியிழையதிதியென்பா

டேசுறநிவந்துவானிற்செறியிருள்விழுங்கியெங்கும்

வீசுசெங்கதிரோன்றன்னை மேதினிவிளங்கவீன்றாள்

 

631      எல்லையில்புகழ்சேர்தொட்டாவீன்றருளிலவச்செவ்வாய்

முல்லைசேர்வனமுருந்தின் முகிழ்நகைவயங்குகொங்கை

நல்லசஞ்சையேயென்னுநண்ணருங்கற்பகஞ்சேர்

வல்லியைப்பரிதிவானோன் மாமணம் புரிந்தான்மன்னோ

 

632      குன்றெனத்திரண்டெழுந்தகுங்குமக்குவவுத்தோளின்

மன்றலந்தொடைசேர்நல்வைவச்சுதன்றனையும்வன்கட்

டன்றனிப்பகடூர்வெற்றித்தருமராசனையுநீலந்

துன்றுமெய்யமுனையென்னுந்துடியிடைதனையுமீன்றாள்

 

வேறு

633      பேசியவந்தப்பெண்கொடியென்னும்ப்ரபையென்பா

டேசுறுசெங்கதிரைத் தொழுதெய்வமெனக்கொள்வாள்

வீசுசெழுங்கதிர் வெம்மையினாற்றலண்மேவாளாய்

நேசமுடன்றன்னிழறானாகநினைந்திட்டாள்

 

634      அந்தநிழற்றனதங்கமதாகவணங்கேநீ

யிந்தவிருத்தமியம்பலையென்னவிசைத்திட்டே

சிந்தைமகிழ்ந்துசெழுங்கதிரோனுளஞ்சேமித்து

வந்துரைதந்தனடந்தையிடத்தினில்வரலாறே

 

635      தன்மகடன்னிலைகண்டுவெகுண்டுதடந்தோளான்

வன்னமயிற்பெடையன்னகுலக்கொடிமாதேகே

ணின்னுறுகேள்வனையன்றியெனில்லிடைநீசேற

லுன்னகமிந்நிலையொல்லையினேகெனவுரைசெய்தான்

 

636      அம்மொழிகேட்டலுமக்கணமங்ஙனகன்றந்த

வெம்முனைவேல்விழிமின்மனைமேவிடவெருவுற்றே

கொம்மைகொள்பேடுறுகொய்யுளையுருவங்கொண்டந்தச்

செம்மைதரும்புகழுத்தரகுருவது சேர்கின்றாள்

 

637      சேர்ந்தலர்செங்கதிர்வானவன் வெம்மைதிளைப்பாளாய்ச்

சார்ந்தலரும்பொழினின்றுமுதிர்ந்துலர்சருகார்ந்து

கூர்ந்தகடுங்கதிரோனையுளத்திற்கொண்டந்த

வார்ந்தகருங்குழன்மாதுதவஞ்செய்துவருநாளில்

 

638      வார்தருபூண்முலைவாள்விழியாமடமயில்செய்த

தேர்வரிதாகியபட்டிமையிறையுந்தேரானா

யார்கலிவேலைமுகட்டினில்வந்தெழுமழல்வெய்யோன்

றார்குழன்மேவியசாயையையன்பிற்சார்ந்துற்றான்

 

639      மருவியசாவருணீயெனுமெட்டாமநுவேந்தன்

றரைபுகழ்தரவருமொருசனியீசன்றம்மோடும்

பரவருமிகுபடவரவகலல்குற்பணியின்சொ

லிருள்பருகியகுழலுறுபுத்திரியையுமீன்றாளாய்

 

640      முன்னவடானருண்மூவர்கடம்மையுமுனிவுற்றே

பின்னவடானருண்மைந்தர்கள் பாலருள்பெருகுற்றா

ளன்னதுகண்டுமறிந்திலன்முன்னவனனுசன்றான்

புன்மதிகொண்டுபுகன்றகடுஞ்சொல்பொறானாகி

 

641      தாயெதிர்வந்தவனையிடறிடவொருதாடூக்கி

நீயிதுசெய்யநினைந்தனைநின்றாண்முரிகென்றே

யாயவனங்கணகன்றிடவவ்வந்தகனைத்தா

னேயெனுமுன்னமிசைத்தனளந்தவிருஞ்சாபம்

 

642      மாதுரைதந்துமுனிந்துவழங்கியவன்சாபந்

தாதையுணர்ந்திடவந்தகன்வந்தது சாற்றக்கேட்

டேதமின்மைந்தர்களேதுசெய்கிற்பினுமீன்றோர்க

டீதுறுமாமொழிசெப்பிடினங்கதுதீதாமால்

 

643      குரும்பைமுலைக்குயின்மென்மொழியிட்டகொடுஞ்சாபம்

பொருந்துபுழுக்களருந்தசையுண்டுனபொற்பாதந்

திருந்துகவென்றருண்மைந்தனொடங்குரைசெய்தற்பி

னருந்ததிநேர்தருகற்பினணங்கையடைந்தானால்

 

644      அந்தக்காலத்தலர்கதிர்கொண்டேயகல்வானில்

வந்திப்புவியில்வல்லிருள்சீக்குமார்த்தாண்டன்

சிந்தைக்கெட்டாச்சித்திரமதனைத்தேரானாய்ச்

சந்தக்கொங்கைத்தையலைநோக்கித்தான்சொல்வான்

 

645      மேயநம்மைந்தர்கண்மூவர்கடம்மைவெகுண்டிந்தச்

சேய்களையன்பினுவந்துரைசெய்தது செப்பென்பா

னீயெனலும்ப்ரபையன்றெனவஞ்சினணேர்நின்ற

சாயையெனும்படிசாற்றினள்கற்பின்றலைநின்றாள்

 

646      பொங்கியெழுஞ்சுடர்நின்னிலைகண்டுபொறாளாகி

யங்கவள்வைத்தெனையன்பினகன்றனளத்தன்பாற்

செங்கதிர்வீசுதிகழ்ந்தவருட்கடல்சேரெந்தா

யிங்கடியன்பிழைநீபொறுத்தாண்டருளெனநின்றாள்

 

647      தன்னிகர்சாயையெனுங்கொடிசாற்றியமாற்றங்கேட்

டந்நிலையின்கணறைந்திலனொன்றுமருஞ்சாப

முன்னரிதாகியபொங்கொளியாவுமொடுக்கிச்சொற்

றென்னுலகம்புகழ்மாதுலன்மாமனைசேர்ந்தானால்

 

648      எல்லொளிவானவனென்னொருமடமானெங்குற்றா

ளொல்லையினீயிதுசொல்லெனவுத்தரகுருவுற்றே

யல்லடுநின்கதிர்வெம்மையினாற்றலளாயோடிப்

பல்குதவந்தனையாற்றினளென்னலுமப்பானு

 

649      குன்றலிலாவியல்கொண்டதொராண்மாவாயேகித்

துன்றியமனையைக்கண்ணுறவெண்ணீர்த்துளிதானு

மொன்றியவிருதொளைநாசிகைவழிதரவொழுகுற்றே

பின்றொடர்காலைமருத்துவரிருவர்பிறந்தார்கள்

 

650      அன்னநல்வேலையினலர்கதிர்வெய்யவனன்பாலே

நின்னையடைந்தனனின்கணவன்யானீயஞ்சே

லென்னலுநற்றவமெய்தலினிரவியொடின்புற்றாண்

மின்னெறிவிரதமிழைத்தலின்வெம்மையின்வீடுற்றாள்

 

651      வீடுற்றந்தவிளங்கிழையுந்திகழ்வெய்யோனுங்

கூடுற்றன்பின்முயங்குபுதன்பதிகொண்டேய்வா

னாடுற்றன்பினனாகதலத்திடைநண்ணுங்காற்

றேடுற்றங்கணடைந்தனர்பண்ணவர்திரளோடும்

 

652      தேவர்கள்கந்தருவத்தவரேனையர்செகமெங்கு

மேவுமநுக்கிரகந்தருவெம்மைவிருப்பாலே

யோவறுசெங்கதிர்வானவன்மேவவுவப்பிற்கூய்ப்

பூவுலகம்புகழ்பொங்கிடவாசிபுகன்றார்கள்

 

653      சட்டகமன்னியசர்ச்சரையைத்திகழ்சாணைக்கட்

கட்டழகுற்றிடமற்றையவும்பர்கடைந்தொப்ப

மிட்டனரப்பொடிவீழ்தலுமத்தலமெங்குந்தான்

புட்பவனம்பெயர்பெற்றதுபாற்கரபுரமென்றே

 

654      அப்பொடிவீழ்பதியெத்தனையுண்டத்தனைசீரார்

மெய்ப்பதியிற்றிருமேவியபூவணமேலாகுஞ்

செப்பருமப்புகழ்சேயிழையாரொடுதிகழ்வெய்யோ

னிப்புவனங்களியாவும்வழுத்தவியைந்துற்றான்

 

655      உத்தமமாகியவித்தலமுற்றுநலுபவாசம்

வித்தகநல்விரதஞ்செபமுண்டநமெய்த்தானம்

பத்தியினாலிவைபண்ணிலநந்தம்பலமாகுஞ்

சத்தியமாமிதுசத்தியஞானதவத்தீர்காள்

 

656      சுத்தமெய்ஞ்ஞானசுகோதயமாநீர்த்துறைமூழ்கித்

தத்துவசுத்திபிறந்திடுசவுநகதன்னேரா

மித்திகழ்பிரமகைவர்த்தத்தெழுபானைந்தாகு

மத்தகுபூவணமான்மியமறைதருமத்யாயம்

 

657      கருதரும்புகழ்மேவுபாற்கரபுரம்புகழ்காதைதான்

பருகுசெந்தமிழ்மேன்மையாற்பரவுபண்பொடுபாடுவோ

ரருளுடன் செவியூடுகேட்டவையுளங்கொடுதேர்குவோர்

திருமிகுந்திடுதேவரூர்தினமிருந்தரசாள்வரே

பாற்கரபுரச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள்  657

*****

 

 

எட்டாவது

சர்வபாவமோசனச்சருக்கம்

 

658      சுத்தமாம்புராணந்தேர்ந்தசூதநன்மாதவத்தோய்

சித்திரமணிகுண்டத்திற்றிசைமுகன்றீர்த்தந்தன்னிற்

பத்தியினடைந்தியாரும்படிந்திடுகாலபேத

மித்திறனன்றிமாதோவிசைக்குவதின்னுமுண்டால்

 

659      பல்பவமகற்றுந்தானம்பண்ணிடுங்காலம்பாங்காற்

றொல்லைநூல்விதிவழாமற்றொடங்கிடுஞ்சாந்தியன்றி

மல்லலோங்கெழில்சேர்தீர்த்தமாடவல்வினைகண்மாய்க்கு

மெல்லையில்பலங்கடம்மையெடுத்துநன்கியம்புகென்றான்

 

660      மோனஞானந்தெரிந்தமுழுதுலகிறைஞ்சியேத்த

லானவானந்தவெள்ளத்தழுந்திடுமந்தணாள

வூனமதகலச்செய்திங்குரைக்குவமோர்கவென்னாத்

தானருள்கூர்ந்தசூதன்சவுனகற்குரைப்பதானான்

 

661      மேடநற்றிங்கடன்னின்மிக்கபூரணையினன்பாற்

கூடியமவுனத்தோடுவடுகனைப்பணிந்துகொன்றை

சூடியகடவுடன்னைத்தொழுதிராக்கடையில்விண்ணோர்

தேடருமணிகுண்டத்திற்சேர்ந்தவர்பலத்தைச் சொல்வாம்

 

662      வேதியற்கோறலாதிவெங்கொடும்பாவமாயப்

பாதகமனைத்துமங்ஙன்பாறிடும்பரிவின்முன்ன

மோதிடுமந்தநாளினொளிகிளர்மணிகுண்டத்தி

னேதமிலந்நீர்மூழ்கினின்பமாமுத்திசேர்வார்

 

663      அக்கிநிட்டோமமாதியரியநல்வேள்வியாற்ற

மிக்கசெம்பொன்கொடுத்தோர்மேவியபலன்களுண்டாம்

பக்கமோடரிதினேனும்பகர்ந்திடுமந்தநாளிற்

றொக்கசீர்மணிகுண்டஞ்சேர்தோயத்திற்றோயமாதோ

 

664      கடுங்கொடுங்குட்ட நோயன்களத்துரோமத்தன்மிக்க

கொடும்பிணியாளனந்நீர்குடித்திடனொளிக்கும்வெந்நோய்

திடம்படுமிடபமன்னுந்திங்களிற்சௌம்யவாரத்

தடைந்ததின்மூழ்கிற்செம்பொனரும்பெருங்களவுநீங்கும்

 

665      இந்த நீர்மணிகுண்டத்தினின் புறக்கருதியன்பாற்

புந்திகன்றனக்குப்புந்திபொருந்திடப் பொலங்கொள்பைம்பொன்

வந்துநன்கியைந்ததானமகிழ்ச்சியின் வழங்கினோர்கட்

கந்தகன்றன்னைக்காண்டலருந்தண்டமிரண்டுமின்றாம்

 

666      மன்னியமைந்தரானோர்வைகாசிவிசாகந்தன்னிற்

பன்னுநான்மறையோர்கையிற்பரவுதன்பிதிர்கடம்பாற்

றுன்றுவெம்பசிதணிப்பான்றூயவெட்டயிர்பான்மாடந்

தன்னிகர்குளந்தயங்குந்தக்கசித்ரான்னத்தோடும்

 

667      அரியனபொருளினட்டவறுசுவையுண்டிமிக்க

பரிமளஞ்சுகந்தநன்பூப்பாதுகைகுடைபூணாதி

யுரிமையினுலோபியாதங்குதவிடிற்பிதிர்கள்வான்றோ

யிரவிவெண்மதிநாட்காறுமின்பத்தினியைவரன்றே

 

668      தந்தைதாய்வர்க்கத்தோடுந்தகும்பெருங்கிளைஞரோடுஞ்

சுந்தரந்துதைந்திலங்குந்தூயநல்விமானநூறு

முந்துறவந்துசூழமுடுகியேகடிதினேகி

யெந்தைசேர்கயிலைவெற்பினிடத்தினிதமர்வரன்றே

 

669      தன்னிகர்மாகத்திங்கடக்கமந்திரிசிங்கத்தின்

மன்னுமாமாகந்தன்னின்மாமணியோடைசேர்ந்த

வன்னதீர்த்தத்தினாடியரும்பெருந்தானமீவோர்

பன்னரும்பவங்கள்யாவும்பற்றாத்துடைப்பரன்றே

 

670      தனைநிகர்தநுர்மாதத்திற்சதுர்முகன்றீர்த்தந்தன்னி

லினைதலொன்றின்றிநெஞ்சத்தினியதேநுவைவதைத்தோர்

மனமொழிமெய்களொன்றிமன்னொருமாதமூழ்கி

னனையதோர்காலையந்தவரும்பவமனைத்துநீங்கி

 

671      தக்கபன்மணிப்பதாகைத்தவளநல்விமானத்தேறி

மிக்கசீர்விளங்குமந்தவிரிஞ்சனதுலகமெய்தித்

தொக்கசெம்மணிகள்வானிற்சுடரவன்வெயின்மறைத்தொண்

டிக்கிலகொளிபரப்புஞ்சித்திரமண்டபத்தில்

 

672      நிறைமதிபுரையுமந்தணித்திலக்கொத்துமாலை

முறைமுறைநிவந்தமாடமுகப்பினின்ஞாங்கர்த்தூங்கக்

குறைவறுசெம்பொற்சோதிகுலவுபூங்கொடிகளாட

மறுகுசேர்நிரைகடோறுமகரதோரணம்வயங்க

 

673      வேதநற்புராணமாதர்மிக்கவெண்டிக்குப்பால

ரோதுகந்தருவர்வீணையுயர்தவச்சநகராதி

யேதமின்முநிவர்போற்றவீரேழிந்திரர்கள்காலங்

கோதறவாழ்ந்துபின்னர்க்குவலயத்தரசராவார்

 

674      கார்த்திகைத்திங்கடன்னிற்கார்த்திகைநாளிற்றிங்கள்

சீர்த்திகழ்கலையீரெட்டுஞ்செறிந்தநாள்குறைந்தநாண்மெய்க்

கீர்த்திகொள்க்ரகணகாலங்கெடுமதிதிங்கள்சேர்நா

ளார்த்தசுந்தரப்பொன்சேயிலருங்கலையொடுங்குமந்நாள்

 

675      வந்திடுமிவற்றையிந்தமலர்தலையுலகந்தன்னிற்

புந்திகொளறிவின்மிக்கோர்புட்கரயோகமென்ப

ரந்தநீர்மையினாலோரொன்றாயிரங்க்ரகணமொக்குஞ்

சிந்தைகூர்ந்தந்நீராடிற்சிவபுரியதனிற்சேர்வார்

 

676      தவலருஞ்சிவநிசிக்கட்சந்நிதிமன்னுதீர்த்தத்

தவலமதகலவுன்னியாடியேயன்பின்மிக்க

புவனநன்கியாரும்போற்றும் பூவணங்கோயில்கொண்ட

சிவபிரான்றனைவில்வத்திற்சிறப்புடன்பூசைசெய்து

 

677      உவமனிலந்தநாளினுண்டியோடுறக்கநீத்துப்

பவமறப்புராணம்பன்னிற்பகர்சிவநிசியதொன்றா

னுவலிலந்நியதலத்தினூற்றொருகோடிகொண்ட

சிவநிசிவதியிற்பூசை செய்திடும்பலத்தைச்சேர்வார்

 

678      அச்சிவசிநிக்கணானைந்தரியபஞ்சாமுதத்தோ

டிச்சையாங்குசோதகம்மோடெட்டயிலாதிகொண்டு

நிச்சயமணிகுண்டத்தினீரினாட்டினர்பதத்தை

நச்செயிற்றநந்தனாலுநவிற்றநாவசைக்கவற்றோ

 

679      ஆயினுமரிதுவந்ததறைகுவனவர்சாலோக

மேயபின்சாரூபத்தின்மேவியேவிளங்குங்கார்த்தி

கேயனோடொத்தநந்திகேயனுக்கிணையதாகி

யோய்விலாயிரஞ்சதுர்நல்லுகஞ்சிவலோகத்தேய்வார்

 

680      செய்யவொண்பட்டினாலுந்திகழ்ந்தவெண்பட்டினாலுந்

துய்யபூங்கதலிபூகமாதியதொங்கறன்னா

லைதிகழ்பூவணத்தெம்மடிகளையலங்கரித்தோர்

பையழகொழுகுந்துத்திப்பன்னகாபரணனாவார்

 

681      ஐம்பெரும்பாதகங்களகற்றிடுமஞ்செழுத்தை

யிம்பரினேன்றதீக்கைக்கீனனாயிருந்தானேனு

நண்பினான்வெறுப்புத்தன்னானவின்றிடினோர்கால்வானத்

தும்பரின்மேலாயன்னோனுறுபவமொழிப்பனன்றே

 

682      தேறிநன்கிருகாற்செப்பிற்றிகழ்திருக்கயிலைசேர்வா

னூறுடனெண்காலன்பினுவன்றிடில்வீடுசேர்வான்

மாறிலாச்சதவுருத்தரமந்திரஞ்செபிக்கின்மூழ்கிற்

கூறருநன்றிகொன்றகொடும்பவங்குலையுமன்றே

 

683      உருத்திரன்றனக்குமிக்கோங்கொளியுருத்திராக்கமாலை

யருத்தியினளித்தோரக்கவணிமணியொன்றினுக்குத்

திருத்தகுசிவலோகத்திற்றிகழ்தருவருடம்வாழ்ந்து

பரப்பிரமத்தைச் சேர்வர்படர்புவியிடத்துமன்னோ

 

684      எப்பொருளேனுமுள்ளத்தின்பமுற்றதனையன்பா

லப்பொருடன்னை மேலாமரன்றனக்காகவென்றே

தப்பறவளிப்போரிந்தத்தடங்கடலுடுத்தபார்மே

லொப்பறவாழ்ந்துபின்னருயர்பரமுத்திசேர்வார்

 

685      ஓதுமிவ்வத்தியாயமுறுபவமொழிக்குமேலோர்

பூதலத்துபதேசஞ்செய்பொருடருசாரமாகுங்

காதலினோதுவோர்க்குக்கருதியதளிக்குமென்று

மேதகவுரைத்தவற்றைவேட்கையின்விளக்கக்கேட்போர்

 

686      மேதினியிடத்தின்மேவுமிக்கதீர்த்தங்கள்யாவுங்

காதலிற்சென்றடைந்துகலந்தவைபடிந்தோராவர்

போதநன்குணர்ந்தமேலோர்புகன்றிடும்வேள்வியாவு

மாதரவதனாற்செய்தவரும்பலமடைவரன்றே

 

687      இந்தநற்பூவணத்தினினிதுவாழ்கிற்போர்தம்மை

யந்தரதேசநின்றுமடைந்தவரிவர்க்கண்டாங்கே

முந்துறுபவங்கடீர்ந்துமுத்தியையடைவரென்றாற்

புந்திகொண்டமர்வோர்வீடுபொருந்துதல்புகலல்வேண்டா

 

688      கூனலம்பிறைமிலைச்சுகோடீரபாரத்தெந்தை

யூனமிலுமையாள்கேட்பவுரைத்தருளுபதேசத்தை

யானதோர்காலைதன்னிலாறுமாமுகங்கொடுற்ற

ஞானவானதனைக்கேட்டுநந்திபானவின்றான்மன்னோ

 

689      நந்திதான்கேட்டவற்றைநற்சநற்குமாரற்கோத

வந்தநற்சனற்குமாரனருள்வியாதற்குரைப்பச்

சுந்தரவியாதனெற்குத்தொகுத்துபதேசஞ்செய்ய

முந்துறக்கேட்டவற்றைமொழிந்தனனுமக்கியானே

 

690      நுண்ணியபொருளாய்மேலாய்நுவலருமுலகுக்கெல்லாம்

புண்ணியமளிக்குமிந்தப்பொருடனைவிரும்பிக்கேட்டோற்

குண்மகிழ்ந்துரைத்ததின்றீங்குமக்கியான்றொகுத்துரைத்தேன்

கண்ணுதற்பெருமான்றந்தகணிப்பருங்கருணையாலே

 

691      ஈதுமக்கிறைவன்ஞானமெய்துதற்கேதுவாகு

மாதலாலருண்மைந்தர்க்குமரியநன்மாணாக்கர்க்குங்

காதல்கூர்பவர்க்குமிந்தக்கருதருபுராணந்தன்னை

யோதுதியறிவின்மேலோயுடங்கியைந்தெந்தஞான்றும்

 

வேறு

692      அழகியமின்னன்னையெனுமானந்தவல்லியுடனமர்ந்துதோன்றுஞ்

செழுமலர்க்கொன்றையினறும்பூந்தேன்றுளிக்குஞ்செஞ்சடிலசேகரன்சேர்

பொழிறிகழ்பூவணக்காதைபுகல்பிரமகைவர்த்தபுராணந்தன்னி

னெழுதரியமறைமுநிவவீரெழுபத்ததாறாமத்தியாயமாகும்

 

வேறு

693      இந்தவத்தியாயம்படித்துளோரின்பமுற்றுநாளுஞ்செவிக்கொள்வோர்

சிந்தையிற்கொடேசெஞ்சொல்செப்புவோர் செங்கரத்தினானன்குதீட்டுவோர்

மைந்தர்பெற்றமாமைந்தர்சுற்றவேமங்கலத்தினான்மண்டலத்தில்வாழ்ந்

தந்தமற்றசீரண்டர்பொற்பினீடம்பொன்மிக்கவானங்கிருப்பரே

சர்வபாவமோசனச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 693

*****

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.