குறளின் கதிர்களாய்…(427)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(427)
கொடுத்தலு மின்சொல்லு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
– திருக்குறள் -525 (சுற்றந்தழால்)
புதுக் கவிதையில்…
உற்றர் உறவினர்க்கு
உறுபொருள் கொடுத்துதவி.
உபசரித்தே இன்சொல்
உரைக்க வல்லவனானால்,
ஒருவன்
ஒன்றையொன்று தொடர்ந்த பல
சுற்றங்களால்
சூழப்படுவான்…!
குறும்பாவில்…
சுற்றத்தார்ப்குப் பொருள் கொடுத்துதவி
இன்சொல் இயம்பவல்ல ஒருவன் தொடர்ந்து
மேலும்மேலும் சுற்றங்களால் சூழப்படுவான்…!
மரபுக் கவிதையில்…
நாடும் சுற்ற மெல்லாமே
நலமே பெறவே கொடுத்துதவி
கூடும் வரையில் இன்சொல்லால்
குறையா வகையில் உபசரித்தே
பாடு படவே வல்லமையாம்
பண்பு கொண்ட ஒருவன்தான்
தேடும் சுற்றம் பலவற்றால்
தெரிந்தே சூழப் படுவானே…!
லிமரைக்கூ…
வந்திடும் உறவினர்க்குக் கொடுத்தே
உதவி இன்சொலால் உபசரிக்க வல்லானைச்
சூழும் சுற்றமெலாம் அடுத்தே…!
கிராமிய பாணியில்…
பெருக்கணும் பெருக்கணும்
ஒறவப் பெருக்கணும்,
வேண்டிய ஒதவிசெஞ்சி
ஒறவப் பெருக்கணும்..
தேடிவாற ஒறவுகளுக்கு
வேணுங்கிற ஒதவிசெஞ்சி,
நல்லவார்த்த பேசி
நல்லா ஒபசரிக்கத்
தெரிஞ்சவன் கிட்ட
அடுத்தடுத்து ஒறவுக்காரங்க
வந்து சேருவாங்களே..
அதால,
பெருக்கணும் பெருக்கணும்
ஒறவப் பெருக்கணும்,
வேண்டிய ஒதவிசெஞ்சி
ஒறவப் பெருக்கணும்…!