குறளின் கதிர்களாய்…(428)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(428)
உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று.
-திருக்குறள் -591(ஊக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
பெற்றிருக்கிறார் ஒருவர்
என்று
போற்றத் தக்கது
ஊக்கமே,
ஊக்கம் இல்லாதார்
வேறு எதைப்
பெற்றிருப்பினும் அதை
உடையவர் ஆகமாட்டார்…!
குறும்பாவில்…
ஊக்கம் உடையாரே ஒன்றைப்
பெற்றிருப்பதாய்க் கருதப்படுவார், ஊக்கமிலார் எதையுமே
உடையவர் என்று ஆகார்…!
மரபுக் கவிதையில்…
ஒன்றை யொருவர் தம்மிடமே
உடையா ரென்னும் சிறப்பினையே
என்றும் தருமே யவரிடம்தான்
இருக்கும் சொத்தாம் ஊக்கமதே,
குன்றா ஊக்க மிலாரிடமே
கோடிக் கணக்காய்ப் பிறவிருந்தும்
என்று மவர்தான் எதுமுடையார்
என்றே யாக மாட்டாரே…!
லிமரைக்கூ…
உள்ளவரே உயர்வாம் ஊக்கம்
உடையவராய்க் கருதப்படுவார், பெற்றவராகார் அவரிடம்
இருப்பினும் பிறபல ஆக்கம்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
மனுசனுக்கு வேணும்
மனசில ஊக்கமே..
ஊக்கம் மனசில
உள்ளவந்தான்
ஒலகத்தில பெருமயா
உள்ளவனா கருதப்படுவான்..
ஊக்கமில்லாதவன்
வேற பலதும்
வச்சிருந்தாலும் ஒருநாளும்
உள்ளவனா ஆவமாட்டான்..
அதால
வேணும் வேணும்
மனுசனுக்கு வேணும்
மனசில ஊக்கமே…!